ஐரோப்பா அழைத்தது. (பாகம் -8 )
கண் திறந்திட வேண்டும்!!!
அந்த இலங்கைத்தமிழர் குறிப்பிட்டது யார்? என உங்களால் ஊகிக்க முடிந்திருக்கும். அவர் எவராக இருந்தாலும், அவர் பால் அந்த இலங்கைத்தமிழர் நம்பிக்கை வைத்திருப்பது விளங்கியது. தன்சொந்த நாட்டிலிருந்து புலம் பெயர்ந்தவர்களுக்கு உள்ள நியாமான ஏக்கம் புரிந்துகொள்ள முடிந்தது.
இரவு பத்து மணிக்கு என்னுடைய மகன் எங்கள் ஓட்டல் வந்து சேர்ந்தார். மூன்று பேரும் சுவையான உணவை நன்றியோடு சாப்பிட்டோம். இரவில், குளிர்ந்த காற்று வீசிக்கொண்டிருந்தது.
காலை பொழுது விடிந்ததும், பிரான்க்பார்ட்டில் எங்கெங்கு செல்லலாம் என்று முடிவு செய்து புறப்பட்டோம். அருகிலிருந்த பேருந்து நிற்கும் இடத்துக்கு, கையில் செல்போன் GPS துணையோடு வந்து நின்றோம்.
இங்கு ஒரு முக்கிய தகவல். உங்கள் போனில் கூகிள் மேப் அவசியம் இருக்க வேண்டும். ஐரோப்பிய நாடுகளில் (நான் சென்றுவந்த) பொது ஜன போக்குவரத்து சேவை மிகவும் சிறப்பாக உள்ளது. கூகிள் மேப் சரியாக பயன்படுத்தினால், எங்கு வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் சென்று வரலாம். பேருந்து நிறுத்தங்கள் பெரும்பாலும் எதிர், எதிர் புறம் இருக்கும். ஆதலால், எந்த திசையில் செல்லவேண்டும் என்பதை கூகிள் மேப் கொண்டு உறுதி செய்ய வேண்டும். நிறுத்தங்களில் பேருந்து எண்கள், போய்சேரும் இடம் எழுதப்பட்டிருக்கிறது. குறிக்கப்பட்டிருக்கும் நேரத்தில் சரியாக பேருந்து வந்து சேரும்.
ஜெர்மனியை பொறுத்த மட்டில், கையில் கொஞ்சம் யூரோ சில்லறை வைத்து கொள்வது நல்லது. ஆனால், ஜெர்மனியில் பிளேக்சிடிக்கெட் மிகவும் பிரபலம். அதாவது, ஒரே டிக்கெட்டில், பஸ், ரயில், டிராம், மெட்ரோரயில் என்று எதில் வேண்டுமானாலும் பயணம் செய்யலாம். மல்டி வே டிக்கெட், தேவையான நாட்களுக்கு ஆட்டோமேட்டிக் டிக்கெட் வெண்டிங் மெஷினில் இருந்து கிரெடிட் கார்ட்/டெபிட் கார்ட் கொண்டு பெற்று கொள்ளலாம். அந்த மெஷினில் ஜெர்மன் மொழி தவிர, ஆங்கிலம், பிரென்ச், உட்பட வேறு சில ஐரோப்பிய மொழிகளில் உபயோக படுத்தலாம். மீண்டும் ஒரு முக்கிய தகவல். எந்த பேருந்திலும், ட்ரைவர் தவிர வேறு சிப்பந்தி இருக்கமாட்டார். அவரும், டிக்கெட் வாங்கியாச்சா? என்றெல்லாம் கேட்க மாட்டார். அது அவருடைய வேலை இல்லை என்று இருப்பார். அப்படி என்றால் டிக்கெட் வாங்க வேண்டியது இல்லையா? என்றால், செக்கிங் இன்ஸ்பெக்டர் ஒருகால் பிடித்து விட்டால், தீர்ந்தது.....கணிசமான அபராத தொகை. ஜெர்மானியர்களை பொறுத்தவரை, நேர்மையை நம்புபவர்களாகவே தோன்றுகிறது.
பேருந்து வரும் வழியில் சாலையின் இரண்டு புறமும், ஓக் (OAK ) மரக்காடுகள். ஜெர்மானியர்கள் செயற்கை காடுகளை வளர்த்து பாதுகாப்பதாகவே நான் கருதுகிறேன். பிராங்கபார்ட்டின் மய்ய பகுதிக்கு வந்து சேர்ந்து, ஹாப் ஆன், ஹாப் ஆப் எனப்படும், சுற்றுலா பேருந்தில் ஏறினால் ஒரு மணி நேரம், சிட்டியை சுற்றி பார்க்கலாம். டபுள் டெக்கர் பேருந்து, அனைவருமே மாடியை தான் தேர்ந்து எடுப்பார்கள். மிகவும் உயர்ந்த (sky scrapper ) கட்டிடங்களை பார்க்க, போட்டோ எடுக்க ஏதுவாக இருக்கும்.
அந்த பஸ்ஸுக்கென்று பிரத்யேக நிறுத்தம் உண்டு. அங்கு ஏறிக்கொள்ளலாம். எங்கு வேண்டுமானாலும் இறங்கிக்கொள்ளலாம். ஜெர்மானியர்களின் தொழில்நுட்பமும், கை நேர்த்தியும் ஒவ்வொரு கட்டிடத்தை பார்க்கும்போதும் உணர முடிகிறது. சுத்தியலை கொண்டு ஓங்கி அடிக்கும் பிரம்மாண்ட சிலை, நம்மை சிலிர்க்க வைக்கும். நாங்கள் "சென்கென் மியூசியம்" வந்ததும் இறங்கி கொண்டோம். "சென்கென் மியூசியம்" பற்றி நாளை விலாவாரியாக பார்க்கலாம்.
(தொடரும்)
Comments
Post a Comment