ஐரோப்பா அழைத்தது  (பாகம்-21)


தனமும் இன்பமும் வேண்டும் !!!


சுவிட்சர்லாந்தின் பிரபலமான பொருட்களில் ஒன்று கை கடிகாரம். கடைவீதியில் எங்கு பார்த்தாலும் கை கடிகாரக்கடைகள் பார்க்க முடிந்தது. 'ரோலெக்ஸ், போஸ், ஒமேகா, டிஸ்ஸோட்' என்று பல வகையான விலையுயர்ந்த கை  கடிகாரங்கள், அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. "சரி, வந்ததுதான் வந்தோம், உள்ளே நுழைந்து பார்த்து விடலாமென்று ஒரு கடையின் உள்ளே சென்று நோட்டம் விட்டோம். 

இங்கு ஒரு முக்கிய தகவல். கடைகள் காலை பத்து மணிக்கு மேலே தான் திறப்பார்கள், இரவு எட்டு மணிக்கு மூடிவிடுகிறார்கள். கவுண்டமணி சின்னத்தம்பி படத்தில் சொல்வதுபோல எட்டு மணிக்கு மேல்  'கோடி ருபாய்' கொடுத்தால்கூட திறக்க மாட்டார்கள். இன்னும் ஒரு ஒரு முக்கிய தகவல். சுவிட்சர்லாந்தின் தேசிய நாணயம் 'சுவிஸ் பிராங்க்', 'யூரோ' அல்ல. ஆகவே, கொஞ்சம் செலவுக்கு சுவிஸ் பிராங்க் வைத்து கொள்வது நல்லது. 

நான், என் மகனுக்கு ஒரு கை கடிகாரம் வாங்கி பரிசளிக்க முடிவு செய்திருந்தேன். அதன்படி, அவருக்கு பிடித்த 'போஸ்' கை கடிகாரத்தை வாங்கி கொடுத்து மகிழ்ந்தேன். அந்த கடிகாரத்தை சுவிட்சர்லாந்தில் வாங்கவேண்டிய காரணங்கள் இரண்டு. 1) ஒரிஜினல் தயாரிப்பு, 2) விற்பனை வரி குறைவு. சுவிட்சர்லாந்தில் விற்பனை வரி ஏழரை சதவீதம். ஜெர்மனியில் 19 சதவீதம். ஒரு ஒப்பீடுக்காக கூறுகிறேன். 

இன்னுமொரு தகவலை தெரிந்து கொள்ளுங்கள். என்னவென்றால், ஐரோப்பிய நாடுகளில் வாங்கி, எடுத்து வரும் அனுமதி பெற்ற பொருள்களுக்கு, தகுந்த வரிச்சலுகையை, நாம் திரும்பி வரும் போது விமான நிலையத்தில் காசாக பெற்று கொள்ளலாம். அதற்கு நாம் செய்யவேண்டியது எல்லாம், நாம் பொருள் வாங்கும் கடையில் அதற்கான விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து வாங்கி கொள்ளவேண்டும். பிறகு அந்த படிவத்தை விமான நிலையத்தில் வரி சலுகைக்காவே பிரத்தியேகமாக உள்ள கவுண்டரில் கொடுத்து பணத்தை பெற்று கொள்ளவேண்டும்.

இப்போது மீண்டும் சுற்றுலாவுக்கு வருவோம். அந்த கடைவீதி பிரமிப்பு ஊட்டும் வகையில் இருந்தது. திருச்சி நகரில், சிங்காரத்தோப்பு என்று ஒரு பகுதி உள்ளது. அதோடு இந்த கடைவீதியை ஒப்பிடலாம். நெருக்க, நெருக்கமான கடைகள். அனைத்திலும், அழகழகான பொம்மைகள், சுவர் கடிகாரங்கள், வண்ண வண்ண ஓவியங்கள், துணி கடைகள், நகை கடைகள் என்று வண்ணமயமாக இருந்தது. இன்னும் ஒரு தகவலை தெரிந்து கொள்ளுங்கள். கடைகளில் பெரும்பாலும், பாட்டிகள், தாத்தாக்கள் தான் வியாபாரம் செய்கிறார்கள். என்ன? ஆச்சர்யமாக உள்ளதா? உண்மைதான். சுவிட்சர்லாந்தில் முதியவர்கள் எண்ணிக்கை சற்று கூடுதலாக இருப்பதாகவே தெரிகிறது. ஆனாலும் அனைவரும் ஆரோக்கியமாகவே உள்ளார்கள் என்பது மகிழ்சசியை தருகிறது. எண்பது , தொண்ணூறுகளில் உள்ள சிலர், தனியாகவே டிராமிலும் , பேருந்திலும் பயணம் செய்வதை பார்க்க முடிகிறது. அந்த நாடு, முதியவர்களை நன்றாக பாதுகாப்பதாக தான் தோன்றுகிறது. 

கடைவீதியை கடந்து அங்குள்ள மிகவும் பிரபலமான 'பிரமூன்ஸ்டர் சர்ச் 'க்கு சென்றோம். இது ஒரு இவாஞ்செலிக்கள் சர்ச். கி.பி 895 களில் தோற்றம் பெற்று, ஆயிரம் வருடங்களுக்கு பிறகு அழிவுற்று பின்பு மீண்டும் உயிர் பெற்றதாக சொல்கிறார்கள். அந்த சர்ச்சில் உள்ள மணி அடிக்கும் 'ஆர்கன்' மிகவும் பெரியது. சுமார் 7 மீட்டர் உயரம். அந்த சர்ச்சின் உள்புறம் உள்ள கண்ணாடி ஜன்னல்களில், இயற்கை  வண்ணங்களை கொண்டு ஓவியங்கள் தீட்டப்பட்டுள்ளன. அந்த ஓவியங்களின் வழியாக உள்ளே நுழையும் வெளிச்சம் சர்ச்சுக்கு அழகை தருகிறது. 

சர்ச்சை தொடர்ந்து, சைனா தோட்டம் என்ற ஒரு செயற்கை பூங்காவுக்கு சென்றோம். சீனர்கள், தங்களுக்காகவே ஒரு இடத்தை தேர்வு செய்து இந்த பூங்காவை உருவாக்கியிருக்கிறார்கள். உள்ளே செல்ல நுழைவுக்கட்டணம் இல்லை. உள்ளே சென்றால், நமக்கு சீனாவின் ஒரு பகுதியில் இருக்கும் உணர்வே தோன்றும். முழுவதும், மஞ்சள், சிவப்பு, வண்ணங்கள்தான். மூங்கில் தோட்டம், மூலிகை வாசம், சிறிய குளம், குளம் நிறைய வண்ண மீன்கள், ஆங்காங்கே உட்கார ஏதுவாக  மேடைகள் என்று அழகாக உள்ளது. மேடையில் கால் நீட்டி படுத்தால் நன்றாக தூக்கம் வரும். ஆனால், விட மாட்டார்கள்.  வெளியில் ஒரேயொரு டீ  கடை. ஒரு மணிநேரம் பொழுதை கழிப்பதே கடினம்தான். நேரம் கடந்துவிட்ட படியால், அங்கிருந்து கிளம்பி  மீண்டும் 'சீமா' ரெஸ்டாரண்ட்டுக்கு, அதாங்க அந்த பெங்காலி ஹோட்டலுக்கு வந்து இரவு உணவை சாப்பிட்டு விட்டு 'ஈஸி' ஹோட்டலுக்கு வந்து சேர்ந்தோம். சூரிக்கை பொறுத்தவரை, நிதானமாக தங்கி இருந்து அந்த தட்ப வெப்ப நிலையை அனுபவித்து விட்டு வரலாம். இதோடு சுவிட்சர்லாந்து பயணம் முடிந்தது. "அவ்வளவுதானா" என்று கேட்பவர்கள், ஒரு நாள் காத்திருங்கள். நாளை பார்க்கலாம்.


தொடரும்...











Comments

Popular posts from this blog

Dharbhai - An article by TRS Iyengar

Namasivaya and Sivayanama - What I read, Want to Share

A stone in my shoe