ஐரோப்பா அழைத்தது (பாகம்-14 )
கனவு மெய்ப்பட வேண்டும்!!!
அந்த விளக்குகள், இதை தான் அறிவிக்கின்றன. 'சிவப்பு' விளக்கு, பாலியல் பெண் தொழிலாளர்கள் இருக்கும் இடம், நீலம் மற்றும் ஊதா நிற விளக்கு, பாலியல் தொழிலில் ஈடுபட்டுள்ள மூன்றாம் பாலினத்தவர்கள் இருக்கும் இடம். இந்த பாவை விளக்குகள், நமக்கு சங்கடத்தை உண்டுபண்ணியதுதான் உண்மை. ஆனால், ஆம்ஸ்டர்டாமில் இது சகஜம். சற்று கனத்த இதயத்தோடு ஆம்ஸ்டர்டாம் விட்டு கிளம்பி ஹோட்டல் வந்து சேர்ந்தோம்.
மறுநாள், என்னுடைய மகன் படித்த டெக்நாலொஜிக்கல் யூனிவர்சிட்டி ஆப் டெல்ப்ட் (TU Delft ) சென்றோம். டெல்ப்ட் என்பது அந்த இடத்தின் பெயராகும். அந்த உயர்கல்வி கூடம், உலகின் தரவரிசை பட்டியலில் முதல் ஐந்து இடங்களுக்குள் இடம் பெற்றுருக்கிறது. குறிப்பாக 'ஏரோ ஸ்பேஸ்' மற்றும் சிவில் இன்ஜினியரிங் படிப்புகளுக்கு மிகவும் பிரசித்தி பெற்ற கல்விக்கூடம். இந்தியாவிலிருந்து ஏறக்குறைய பத்து சதவிகிதம் பேர்கள் அங்கு படிக்கிறார்கள். அந்த யூனிவர்சிடியில் நுழையும் போது என் உடல் புல்லரித்து போனது. படித்தது என்னவோ, என்னுடைய மகன்தான். ஆனாலும், எதையோ சாதித்த உணர்வு எனக்குள் எழுந்தது. அவன் படித்த ஏரோ ஸ்பைஸ் இன்ஜினியரிங் கட்டிடத்துக்குள் சென்று பிரமாண்டமான நூலகத்தை பார்வை விட்டோம். அடடா! எத்தனை மாடி அடுக்குகள், அதில் வரிசையாய் அடுக்கியுள்ள புத்தகங்கள். அத்தனையும் படித்து முடிக்க இந்த ஆயுள் போதாது.
வேறொரு அறையில் சிறு விமானம் ஒன்றை மாதிரியாக தொங்கவிட்டுளார்கள். ஆங்காங்கே, மாணவர்கள் கூட்டம், ஏதேதோ பேசிக்கொண்டும், சிரித்து கொண்டும் திரிந்து கொண்டிருந்தார்கள். எனக்கு என்னுடைய கல்லூரிக்காலங்கள் நினைவுக்கு வந்தது.
"இங்கே வா! ஒன்றை காட்டுகிறேன்," என்று என் மகன் எங்களை அழைத்துக்கொண்டு ஒரு உயரமான பலகையை நோக்கி கூட்டி கொண்டு போனார். "இதை பார்" என்று விரலை உயர்த்தி காட்டி, "என்னுடைய கையெழுத்து எங்கே ? என்று கண்டுபிடி" எனக்கேட்கவே எனக்கு ஆவல் பொத்துக்கொண்டு வந்தது. மிக நீளமான அந்த பலகையின் ஒவ்வொரு வரியாக தேடி சில நிமிடங்களுக்கு பிறகு கண்டுபிடித்து விட்டேன். நான்காவது வரிசையில் இருந்து அந்த கையெழுத்தை கண்டபோது என் கண்களில் நீர்த்திவலைகள் தோன்றியது. "இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா!" என்று எனக்குள்ளேயே சொல்லிக்கொண்டு பெருமிதப்பட்டேன்.
ஒவ்வொரு தந்தையும், தன் குழந்தைகளை தூக்கி உலகை காட்டும்போது, தானே அந்த உலகை காண்கிறார்கள் என்பதைத்தான் அந்த நீர்த்திவலைகள் உணர்த்தின.
கல்லூரியை கண்டு களித்து விட்டு, என் மகன் தங்கியிருந்த ஹாஸ்டல் அறையை கண்டபோது, அவன் அனுபவித்த சில கஷ்டங்கள், படிப்பில் வெற்றி பெற அவர்கள் இழக்கும் பல சௌகரியங்கள் எல்லாம் விளங்கியது. ஒன்று மட்டும் உண்மை, வெளிநாடு செல்லும் நம் வாரிசுகள், நிச்சயம் ஒரு முழுமை பெற்ற மனிதர்களாக வருவார்கள் என்பதில் ஐயமில்லை. ஒழுக்கம், அன்பு, பணிவு, மற்றவர்களுக்கு உதவும் நோக்கம் என்று சிறந்து விளங்குகிறார்கள்.
யூனிவர்சிட்டி உள்ளேயே டிராம், மற்றும் பேருந்து போக்குவரத்து உள்ளது. என் மகன் படித்த கல்விக்கூடத்தை கண்ட பெருமிதத்தோடு, ஹோட்டலுக்கு திரும்பி வந்தோம். நெதர்லாந்தில் மூன்று நாட்கள் போனதே தெரியவில்லை. நெதர்லாந்தை விட்டு மறுநாள் கிளம்பவேண்டியிருந்ததால் 'ஓமியோ' வலைத்தளத்தை தொடர்பு கொண்டு, பிரஸ்ஸல்ஸ் (Brussels ) செல்ல மூன்று டிக்கெட் முன்பதிவு செய்து கொண்டோம். நாளை, பெல்ஜியத்தின் தலை நகரான பிரஸ்ஸல்ஸ் பற்றி பார்க்கலாம்.
தொடரும்.
Comments
Post a Comment