ஐரோப்பா அழைத்தது (பாகம்-13 )


தனமும், இன்பமும் வேண்டும்!!!


சர்வதேச மகிழ்ச்சி குறியீட்டு வரிசையில், ஐந்தாவது இடத்தில் இருக்கும் நாடு எதுவென்று தெரியுமா?

நெதர்லாந்துதான். அது என்ன குறியீடு? பொருளாதாரத்தில், கல்வித்தரத்தில், விஞ்ஞான வளர்ச்சியில் இப்படி பல தரப்பட்ட வரிசை பட்டியல்கள் உள்ளன. ஆனால் மக்கள் எங்கு மகிழ்ச்சியோடு இருக்கிறார்கள்? இது முக்கியம் அல்லவா. அது உண்மைதானா என்பதை கண்டறிய வேண்டுமென்றால் 'ஆம்ஸ்டர்டாம்' செல்லுங்கள். கண்கூடாக பார்க்கலாம்.

நாங்கள் காலை, 7 மணிக்கே கிளம்பி ஹெகிலிருந்து ஆம்ஸ்டர்டாம் செல்லும் ரயிலை பிடித்து விட்டோம். நெதர்லாந்தில் ரயில் பயணம் சுகமானது. ரயில் மிதமான வேகத்திலேதான் செல்கிறது. இருபுறமும், வயல் வெளிகள். நடு, நடுவே தோப்பு வீடுகள், சுற்றிலும் குதிரை கூட்டங்கள், ஜெர்சி இன கறவைமாடுகள், காற்றாலைகள், சூரிய பலகைகள் என்று செல்வ செழிப்புடன் விளங்குகிறது. 'துலிப்' வயல்கள் மிக ரம்மியமாக இருக்கிறது. நாங்கள் பயணித்த காலம், 'துலிப்' பூக்கள் முடிவுற்றகாலமாக இருந்தபோதிலும், சில பூக்களை காண முடிந்தது. 

ஒரு மணிநேர பயணத்துக்குப்பின், 'ஆம்ஸ்டர்டாம் சென்ட்ரல்' ரயில் நிலையத்துக்கு வந்து சேர்ந்தோம். முதலில் நான் தேர்வு செய்த இடம், 'வான் கோக்' (Van Gogh ) மியூசியம். 'வான் கோக்' உலக பிரசித்தி பெற்ற 19 ம் நூற்றாண்டின் ஓவியர். அவருடைய ஓவியங்கள், அவர் வாழ்ந்த காலத்தை விட, அவர் (தற்கொலை) மறைந்த பிறகே பிரபலமாயின. அவர் வரைந்த 'ஸ்டாரி நைட்' மிகவும் பிரபலமானது. 

ஆனால், நாங்கள் முன்பதிவு செய்யாததால், உள்ளே செல்ல அனுமதி கிடைக்கவில்லை. மிகுந்த வருத்தத்துடன், சற்று தொலைவில் உள்ள 'ரைஸ் ' (RIJS ) மியூசியம் சென்றோம். ஐரோப்பிய வரலாறு, குறிப்பாக டச்சுக்காரர்கள் வரலாறு பற்றி தெரிந்து கொள்ளவேண்டுமென்றால் இந்த காட்சியகத்தை கண்டிப்பாக பாருங்கள். 18 ம் நூற்றாண்டில், நெப்போலியன் தலைமையில், பிரெஞ்சின் ஒரு பகுதியாக விளங்கிய ஹாலந்து, பிற்காலத்தில் 'கிங் வில்லியம்' தலைமையில், விடுதலை பெற்று தனி நாடாக திகழ்ந்தது. அவர்கள் பயன்படுத்திய ஆயுதங்கள், வீட்டு உபயோக பொருட்கள், இசைக்கருவிகள், நகைகள், என வித விதமான பொருட்களை வைத்துள்ளார்கள். வரலாறுகளை தெரிந்து கொள்ள விரும்புபவர்கள் ரசிக்க கூடிய வகையில் இந்த மியூசியம் உள்ளது. 








ஐரோப்பியர்களின் நாகரீக வளர்ச்சியை, இரண்டாம் உலகப்போருக்கு முன், உலகப்போருக்கு பின் என்று பிரித்து பார்த்தால் நன்றாக விளங்கும். 

ரைஸ் மியூசியம் பார்த்து விட்டு, 'ஆம்ஸ்டர்டாம்' கால்வாய் படகு சவாரிக்கு சென்றோம். 'ஒரு' மணிநேரம் படகு சவாரிக்கு இருபது யூரோ.  அம்ஸ்டர்டாமின் அழகினை ரசிக்க இதைவிட சிறந்த போக்குவரத்து இல்லை என்பதே உண்மை. கால்வாய், நகரத்தின் மூலை, முடுக்கு வழியாகவெல்லாம் செல்கிறது. ஆங்காங்கே வளைவான மேம்பாலங்கள், இருபுறமும், 300 முதல் 400 வருடங்களாக உயர்ந்து, ஒன்றோடுஒன்று ஒட்டி நிற்கும் கட்டிடங்கள், பசுமையான மரங்கள், மிதக்கும் வீடுகள், சாலையோர சிற்றுண்டி உணவகங்கள், கால்வாயின் கரையில் அமர்ந்து கொண்டிருக்கும் காதலர்கள், நண்பர்கள் கூட்டம் என களை கட்டுகிறது. நிஜமாகவே இது ஒரு இந்திரலோகம் என்றால் மிகையாகாது. இப்போது புரிந்திருக்கும், நெதர்லாந்து மகிழ்ச்சி குறியீட்டில் எப்படி ஐந்தாம் இடம் பிடித்தது என்று. 







படகு சவாரியை தொடர்ந்து கடைத்தெருவுக்கு சென்றோம். வித,விதமான மிட்டாய்கடைகள், சாக்லேட் கடைகள், குளிர்பானக்கடைகள் என்று அனைத்தும் உள்ளது. சாக்லேட் வாங்குபவர்கள் சற்றே கவனமாக இருக்க வேண்டும், ஏனெனில், ஆல்கஹால் கலந்த சாக்லேட்டுகள் இருக்கிறது. கேட்டு பெறுவது நலம். ஒரு குறிப்பிட்ட தெருவில் மட்டும், கூட்டம் நிறைந்து வழிந்தது. அது என்ன தெரு?  என்று தெரிந்து கொள்ளும் ஆர்வம் கூடவே, அந்த தெருவுக்குள் நுழைந்தோம். மூன்று வித வண்ண முகப்பு விளக்குகள் கொண்ட அந்த தெரு எதற்கு பிரபலமானது?


காத்திருங்கள்.


தொடரும்.

Comments

Popular posts from this blog

The Garden Fire

Dharbhai - An article by TRS Iyengar