ஐரோப்பா அழைத்தது (பாகம்-23 )


மண் பயனுற வேண்டும்!!!


பஞ்சாபி ஹோட்டலில் இரவு உணவை முடித்துக்கொண்டு நாங்கள் செல்லவேண்டிய 'ஏர் பீ என் பீ' விடுதியான வீட்டிற்கு டிராம் பிடித்து சென்றோம். அது என்ன 'ஏர் பீ என் பீ' என்று கேட்கிடீர்களா? இது ஒருவகையான பயணிகள் தங்கும் விடுதி என்றே கூறலாம். இது போன்ற வசதிகள் இப்போது இந்தியாவில் கூட வந்து விட்டது. அதாவது, சில பணவசதி படைத்தவர்கள், தனக்கு சொந்தமான வீட்டை, சகல வசதிகளையும் செய்து கொடுத்து வாடகைக்கு விடுவதுதான் 'ஏர் பீ என் பீ'. இந்த வீடுகள், நாள் வாடகை தொடங்கி, மாத வாடகை வரை கிடைக்கும். இந்த வீட்டை கிட்ட தட்ட நம் சொந்த வீட்டை போன்றே பயன்படுத்தலாம். மளிகை சாமான்களை வாங்கி கொண்டு சமையல் செய்து சாப்பிடலாம், துணி மணிகளை துவைத்து காய போடலாம், இல்லாவிட்டால் என்னை போன்ற சோம்பேறிகள், சும்மா தூங்குவதற்கு மட்டும் பயன்படுத்தலாம். வாடகையில் பெரிய வித்தியாசம் இருக்காது, ஆனால், ஹோட்டலில் உள்ள கூட்டம் இருக்காது. 

இங்கு ஒரு தகவல். ஏர் பீ என் பீயை ஆன்லைனில், பதிவு செய்யும்போது, அந்த வலைத்தளம் நேர்மையானது தானா? என்று தெரிந்து கொண்டு பதிவு செய்யவேண்டும். இல்லாவிடில், ஏமாற வாய்ப்பு உள்ளது. 

இப்போது என்னுடைய அனுபவத்துக்கு வருகிறேன். அந்த அடுக்குமாடி கட்டிடத்துக்கு வந்து, நான் பதிவு செய்த வலைத்தளத்தில் கொடுக்க பட்டிருந்த ஈமெயில் விலாசத்துக்கு மெயில் அனுப்பினால், அவர்கள் வீட்டின் சாவி இருக்கும் இடத்தையும், ரகசிய எண்ணையும் கொடுப்பார்கள். அந்த எண்ணைகொண்டு, சாவி இருக்கும் பெட்டியை திறந்து சாவியை எடுத்து கொள்ளலாம். என்ன, மீண்டும் அலிபாபா கதையா? என்று கேட்கிறீர்களா. ஆமாம், அதே கதை தான். என்ன சோதனையென்றால், நாங்கள் வீட்டுக்கு செல்லும்போது, நன்றாக இருட்டி விட்டது. ஆகையால் சாவி இருக்கும் பெட்டியை கண்டு பிடிக்க முடியவில்லை. என்ன செய்வதென்று தெரியாமல் விழித்து கொண்டிருக்கும் போது, வீட்டினுள்ளில் இருந்து ஒரு கிழவர், நாய்க்குட்டியை இழுத்து கொண்டே வெளியில் வந்தார். அதுவரை கும்மிருட்டாக இருந்து அந்த நடைபாதை, அவர் வர, வர ஒவ்வொரு விளக்காக தானாக எரிய ஆரம்பித்தது. என் மனைவிக்கு கொஞ்சம் திகிலாக இருந்தது. அவரிடம், ஆங்கிலத்தில், "சாவி எங்கு உள்ளது?" என்று கேட்டவுடன், தன் நடுங்கும் விரலை நீட்டி "ஹியர்" என்று காண்பித்துவிட்டு அவர் சென்று விட்டார். ஏதோ ஒரு மூலையில், யாரும் பார்க்க முடியாதபடி மாட்டியிருந்த பெட்டியில், பல பொத்தான்கள் இருந்தன. எனக்கு வந்து ஈமெயிலில் கொடுக்கப்பட்ட எண்ணை கொண்டு அந்த பொத்தான்களை அழுத்தியவுடன் பெட்டி திறந்து கொண்டது. உள்ளே ஒரே ஒரு சாவி இருந்தது. அந்த சாவியை எடுத்து கொண்டு அந்த அடுக்கு மாடி கட்டிடத்தில் நுழைந்தோம். அந்த கிழவருக்கு நிகழ்ந்தது போலவே, நாங்கள் செல்லும்போது மட்டும் ஒவ்வொரு விளக்காக எரிந்து விட்டு, நாங்கள் சென்றதும் அணைந்துவிட்டன. ஒரு விஷயம், இங்கு புரிந்தது. அனாவசியமாக சக்தியை வீணடிப்பதை அந்நாட்டினர் ஏற்பதில்லை என்ற உண்மையை. நாங்கள் தங்கியிருந்த வீட்டிலும், இதே கதை தொடர்ந்தது. 

சுற்றிலும் மயான அமைதி. பெரிய வீட்டில் நாங்கள் மூன்று பேர் மட்டும். நேரம், இரவு 11 ஐ தாண்டியிருந்தது. வெளிப்புறம் லேசான மழை. ஜன்னல் திரைசீலை காற்றில் அசைந்து கொண்டிருக்கும்போது, வாசல் கதவு லேசாக திறப்பதும், மூடுவதுமாக இருந்தது. என் மனைவிக்கு பதட்டம் ஆரம்பித்தது. "என்னங்க, எனக்கு பயமா இருக்கு, என்ன சத்தம் என்று பாருங்க" என்று என்னை உசுப்பி விட்டார். நான் தைரிய சாலி அல்லவா, "டேய் அங்க என்னனு பாரு" என்று என் மகனை கிளப்பி விட்டேன். அவர் தூங்கி அரைமணி கடந்திருக்குமென்று புரிந்து கொண்டேன். அவரிடம் அசைவே இல்லை. மெல்ல எழுந்து மொபைல் போனின் வெளிச்சத்தின் துணையோடு கதவை கவனித்தேன். அது, என்னுடைய தவறுதான், கதவை சரியாக தாழிடவில்லை. கதவை பூட்டி விட்டு மீண்டும் வந்து படுத்து விட்டேன். ஆனால், சரியாக தூங்கவில்லை. 1985 ம் வருடம், 'தி போல்டர்கீஸ்ட்'  என்று ஒரு திகில் திரைப்படம், அதில் வரும் வீட்டை போன்றே இருந்தது. அந்த படத்தின் கதையை என் மனைவியிடம் சொல்லி நன்றாக வாங்கி கட்டிகொண்டேன். எப்போது பொழுது விடியுமென்று காத்திருக்கும்போதே பொழுது விடிந்துவிட்டது. மெல்ல எழுந்து, காபியை கலக்கி குடித்துவிட்டு, வாங்கி வந்திருந்த ரெடிமேடு சப்பாத்தியை சமைத்து சாப்பிட்டு வெளியில்கிளம்பினோம். 


தொடரும். 




Comments

Popular posts from this blog

Dharbhai - An article by TRS Iyengar

Namasivaya and Sivayanama - What I read, Want to Share

A stone in my shoe