ஐரோப்பா அழைத்தது (பாகம்-16 )
வானகம் இங்கு தென்பட வேண்டும்!!!
பாரிஸ் மெட்ரோரயிலுக்கும், டெல்லி மெட்ரோரயிலுக்கும் இரண்டு ஒற்றுமைகள். வினாடி மாறாமல் குறித்த நேரத்தில் வருவது, எப்போதும் கூட்டமாக இருப்பது. நாம் பெருமை பட்டுக்கொள்ளலாம்.
மதிய உணவுக்காக (எது மதியம், எது மாலை என்று தெரியவில்லை) ஹோட்டலை தேடும்போது, 'சென்னை தோசா' என்று ஒரு ஹோட்டலை பார்த்ததும், உள்ளே நுழைந்து விட்டு நோட்டம் விட்டோம். பெரும்பாலும் சென்னை தமிழர்கள் தான். ஒரு இளம்பெண் அருகில் வந்து 'மெனு கார்டை' வைத்துவிட்டு போனார். விசாரித்ததில், கல்லூரியில் படிப்பதாகவும், பகுதி நேர வேலையில் அந்த ஹோட்டலில் இருப்பதாகவும் தெரிவித்தார். நம்மூரில், இவ்வாறு செய்வார்களா? என்றால், அப்படி ஒரு மாற்றம் இங்கும் வந்துகொண்டிருப்பதுதான் உண்மை.
மெனு கார்டில், பலவகையான தோசை வகைகளை கண்டபோது நாக்கு ஊறத்துவங்கியது. நான் ஒரு மசால் தோசையை ஆர்டர் செய்து, சுமார் 20 நிமிடம் காத்திருந்து பெற்றேன். சும்மா சொல்லக்கூடாது மிகவும் சுவையாகவே இருந்தது. ஆக, பாரிஸ் செல்லுபவர்கள் சாப்பாட்டு ராமர்களாக இருக்கலாம். வேண்டிய சாப்பாடு கிடைக்கும். சென்னை தோசா தவிரவும், சில கடைகளை காண முடிந்தது.
மதிய/மாலை உணவுக்கு பின், உலக அதிசயமான 'ஈபில் டவர்'க்கு டவுன் பஸ்ஸில் சென்றோம். டவரின் அருகே நெருங்க நெருங்க ஆவல் கூடிக்கொண்டே சென்றது. அரை கிலோமீட்டர் தொலைவில் பேருந்து நின்றது. இறங்கி, ஈபில் டவரின் பிரமாண்டத்தையும், அழகையும் ரசித்தேன். அகன்ற இரட்டை சாலைக்கு நடுவே, 330 மீட்டர் உயரம் கொண்ட இரும்பு கூண்டு, 1887 ம் ஆண்டு கட்ட ஆரம்பித்து இரண்டு வருடத்தில் முடித்திருக்கிறார்கள் அதை கட்டிய 'கஸ்டாவ் ஈபில்' பெயரையே வைத்து விட்டார்கள். இது முதலில் தொலைத்தொடர்புக்காக கட்டப்பட்டதாகவே தெரிகிறது. நாளடைவில், உலக அதிசயத்தில் ஒன்றாக மாறி, இப்போது காட்சி பொருளாக உள்ளது. கீழிருந்து ஈபில் டவரை பார்ப்பதே அழகானது என்று தோன்றியதால், மேலே சென்று பார்க்கும் எண்ணம் தோன்றவில்லை. பல கோணங்களில், படம் பிடித்துக்கொண்டு சுற்றிவந்தோம். நம்மூர், திருவிழாக்களில், நடைபெறும் அனைத்தும் அங்கே காணலாம். மூணு சீட்டு, வை ராஜா வை (அட, பிதா மகன் படத்தில், நம்ம சூர்யா விளையாடியது) நாய் வித்தை, பஞ்சு மிட்டாய், (கிளி ஜோசியம் மட்டும் இல்லை), வாத்தியங்களை வாசித்துக்கொண்டு சிலபேர்கள். கூட்டம் நிரம்பி வழிகிறது. நம்முடைய பொருட்களில், சற்றே கவனமாக இருப்பது நல்லது. நிறைய ஆப்பிரிக்கர்கள், மிக சிறிய ஈபில் டவர் முதல், இரண்டு அடி, மூன்று அடி உயரமுள்ள பொம்மை ஈபில் டவரை வியாபாரம் செய்கிறார்கள். விலை, ஒரு யூரோவிலிருந்து கிடைக்கும். டவருக்கு பின் பக்கம் வந்தால் ஒரு பெரிய பூங்கா உள்ளது. அதில் அமர்ந்து இளைப்பாறலாம். இருபக்கமும், திருவிழாக்கோலம்தான். நாட்டியம் ஆடும் இளசுகள், சோமர் சால்ட், பல்ட்டி அடித்துக்கொண்டு இளைஞர்கள், மிக வேகமாக சிறிய சைக்கிளில் பயணம் செய்யும் ஜோடிகள் என, அந்த இடமே குதூகலமாக இருந்தது.
பாரிசில், ஹாப் ஆன், ஹாப் ஆப் பேருந்து உள்ளது. நகரை சுற்றி வலம் வரும். சீன் ஆற்றின் அழகையும், இரவு நேரத்தில் ஈபில் டவரின் அழகையும், திருவிழாக்கோலம் பூண்டுள்ள தெருக்கள் அனைத்தையும் கண்டு ரசிக்கலாம். நாங்கள் ஒரு மோட்டார் ரிக்ஷாவில் ஏறி சுற்றி வந்தோம். வீதி எங்கும் விளக்குகளும், ஆட்டமும், பாட்டமும், சிற்றுண்டி ஓட்டல்களும், மேஜிக் விளையாட்டுகளும் என்று நம் கண்களுக்கு விருந்துதான். இரவு பத்து மணிக்குதான் வானம் முழுவதும் இருட்டியது.
ஆனால், விளக்கு வெளிச்சத்துக்கு குறைவே இல்லை. கால் வலி எடுக்கவே, ஒரு இத்தாலிய ஹோட்டலில் நுழைந்து இரவு உணவாக பீட்ஸாவை உண்டு ஹோட்டல் திரும்பினோம். மொத்தத்தில், பாரிஸ் நகரம், நமது மும்பையை போன்றது. குதூகலமாகவும், கொஞ்சம் எச்சரிக்கையோடும் இருக்கலாம்.
நாளை, ஐரோப்பாவின் மிக வேகமான ரயில் பயணம் பற்றி பார்க்கலாம். அது எந்த ரயில் என்று யோசியுங்கள்.
தொடரும்.
Comments
Post a Comment