ஐரோப்பா அழைத்தது (பாகம்-19 )


வானகம் இங்கே தென்பட வேண்டும்!!!


ஜெனீவா, சுவிட்சர்லாந்தில் உள்ளது, 'மாண்ட் பிளாங்க்' சிகரம், பிரான்சில் உள்ளது. ஆக, மீண்டும் பிரான்ஸை தொட்டாக வேண்டும். ஆனால் வேறு ஒரு பாதை வழியாக. அதுதான் ஜெனீவா ஏரியின் கரை ஓரமாகவே உள்ள 'லூசெர்ன்' (Lucerne ), மற்றும் 'கேமோனி' (Chamonix ) போன்ற சிறுநகரங்களை இணைக்கும் பாதை. இந்த இரண்டு சிறுநகரங்களுமே கொள்ளை அழகு படைத்தவை. ஒருபுறம், நிரம்பி இருக்கும் ஏரி, மறுபுறம் வயல், திராட்சை தோட்டங்கள், மற்றும் pine மரக்காடுகள். பின்புறம், ஆல்ப்ஸ் மலைத்தொடர். கண்ணை மூடிக்கொண்டு இந்த காட்சியை அனுபவித்து விட்டு, தொடர்ந்து படியுங்கள். 

இந்த மாண்ட் ப்ளாங் செல்வதற்காக பிரத்தியேக சுற்றுலா பேருந்துகள் உள்ளன. இல்லையென்றால், கேமோனி வரை பயணிகள் பேருந்தில் சென்று, அங்கிருந்து மலை ஏறும் கேபிள் கார் என்ற தொங்கு ரயிலை பிடிக்கலாம். ஆனால், தொங்கு ரயிலுக்கு முன் பதிவு அவசியம். சுற்றுலா காலத்தில் டிக்கெட் கிடைப்பது கடினம். ஆகவே, இந்த பயணத்துக்கு மட்டும் சுற்றுலா பேருந்தை முன்பதிவு செய்து கொள்வது சிறந்தது. தாங்கள் செலுத்தும் கட்டணத்தை பொறுத்து, மலை ரயில், கேபிள் கார் எல்லாம் கிடைக்கும். முழு கட்டணத்தை செலுத்தி, பதிவு செய்து கொள்வது சாலச்சிறந்தது. 'அனுபவி ராஜ அனுபவி' என்ற மனதோடு செல்லுங்கள், நிச்சயமாக அனுபவம் சிறந்ததாக இருக்கும்.  ஒருவருக்கு சுமார், 100 யூரோ விலிருந்து செலவாகும். "குடுத்த காசுக்கு என்னமா இருக்கு" என்று எண்ணுவீர்கள்.

சுற்றுலா பேருந்து சூரிய ஒளி உள்ளே நுழையும் வகையில் கூரை அமைக்கப்பட்டிருக்கிறது. ஆங்கிலம் பேசும் ஒரு சுற்றுலா வழிகாட்டியும் உடன் வருவார். 

எங்கள் பேருந்து காலை எட்டு மணிக்கு கிளம்பியது. 90 கி.மீ சாலையில், ஒன்றரை மணி நேர பயணம். வழியில், வயல் வெளிகள், மரக்காடுகள், சுரங்க பாதைகள், நீர் அருவிகள், நீண்ட பாலங்கள் என்று ரம்மியமாக இருந்தது. இரு வேறு நாடுகள் செல்வதால், அவசியமாக பாஸ்போர்ட் வைத்திருக்க வேண்டும். 'கேமோனி', நெருங்கும்போது நம்மூர் நாலுரோடு வழிகாட்டியை போலவே, இத்தாலி, பிரான்ஸ், சுவிட்சர்லாந்து என்று வழிகாட்டியை பார்க்கலாம். ஆல்ப்ஸ் மலையின் அடிவாரத்தில்தான் 'கேமோனி' இருக்கிறது. ஆகவே, அதுவரைதான் பேருந்து பயணம். 

'கேமோனி' யை பற்றி சொல்லியே ஆகவேண்டும். இந்த இடத்தில்தான் பிரபல சிரிப்பு நடிகரான 'சர் சார்லி சாப்ளின்' தனது கடைசி காலத்தை கழித்ததாக சொல்கிறார்கள். அவருக்கு அங்கு 'சாப்ளின் உலகம்' என்று ஒரு மியூசியம் அமைத்துள்ளார்கள். நமக்கே அங்கு தங்கிவிடலாம் என்றுதான் தோன்றும். இதை வருணிக்க தெரியவில்லை என்றுதான் சொல்லவேண்டும். போட்டோக்களை பார்த்து கொள்ளுங்கள். 

கேமோனியில் இருந்து தொங்கும் ரயிலில் ஏறி மலை உச்சிக்கு சென்றோம். அந்த சிறிய பெட்டிக்குள் இருபது, இருபத்தைந்து பேர்களை ஏற்றி விடுகிறார்கள். முதலில் நாற்பத்தைந்து டிகிரி கோணத்தில் சென்ற தொங்கு ரயில், திடீரென்று 75 டிகிரி கோணத்தில் வேகமாக ஏறுகையில், வயிற்றை லேசாக கலக்கத்தான் செய்தது. உள்ளிருக்கும் அனைவரும், 'ஊ' ஊ' வென்று கூச்சலிட்டார்கள். சிலபேர், தமது குலதெய்வத்தை பிரார்த்தனை செய்ததையும் பார்க்க முடிந்தது. 10  நிமிட பயணத்துக்கு பிறகு வேறு ஒரு தொங்கு ரயிலில் ஏற்றி விடுகிறார்கள். அது இன்னும் மோசம், செங்குத்தாக ஏறுகிறது. ஒரு வழியாக உச்சிப்பகுதிக்கு வந்து விட்டோம் என்று பார்த்தால், அதன் பிறகு ஒரு லிப்ட் டில் ஏற்றி விடுகிறார்கள். அனைவரும் உச்சாணிக்கொம்புக்கு வந்து சேர்ந்து விட்டோம். லிப்ட்டிலிருந்து வெளியில் வந்தவுடன், குளிர் குடலை பிடுங்குகிறது, சிறிது நேரத்திலேயே நமது விரல்கள் வீங்க தொடங்குகிறது. உடனடியாக, நான் கொண்டுவந்த கம்பளி கையுறையை அணிந்து கொண்டேன். இந்த முக்கிய தகவலை அவசியம் பின் பற்றுங்கள், இல்லையென்றால், நமது கைவிரல்கள் 'ரத்தக்கண்ணீர்' M R ராதா போன்று மடக்க முடியாமல் போகும். 

360  டிகிரி தலையை சுழற்றி ஆல்ப்ஸ் மலையின் அழகையும், 'Aiguille  du dru ' பனிச்சிகரத்தையும், மோண்ட் ப்ளாங் பனிச்சிகரத்தையும், ரசித்துக்கொண்டிருக்கும்போதே, அங்கு வேகமாக வீசிய குளிர் காற்று என்னை உள்ளே ஓடு ஓடு என்று விரட்டியது. ஒரு மணிநேரம் அங்கே கழித்து விட்டு ஆல்ப்ஸ் மலைத்தொடரின், மிக உயரிய சிகரத்தை அடைந்து விட்டு மகிழ்ச்சியோடு திரும்பினோம். இனி மலை ரயில் பயணம். நமது ஊட்டி ரயிலைப்போன்றே, மிக அழகான சிறிய ரயில். சிவப்பு ரயில் என்றே பெயர் வைத்துள்ளார்கள். ரயில் பயணத்தில், மலையின் அழகையும், அருவிகளின் அழகையும், அங்கங்கே பாராகிளைடிங் செய்து கொண்டிருக்கும் வீரர்களையும், பனி சறுக்கு விளையாட்டில் ஈடுபட்டிருக்கும் வீரர்களையும் கண்டு ரசித்துக்கொண்டே வந்து சேர்ந்தோம். மீண்டும், கேமோனி வந்து பேருந்தில் ஏறி சுமார் ஏழு மணிக்கு ஜெனீவா வந்து சேர்ந்தோம். மனம் முழுவதும் நிறைந்து இருந்தது. நாளை, சுவிட்சர்லாந்தின் மற்றுமொரு பெருநகரான சூரிக் (Zurich ) பயணத்தை பற்றி பார்க்கலாம்.


தொடரும். 










Comments

Popular posts from this blog

The Garden Fire

Dharbhai - An article by TRS Iyengar