A Short family trip to Europe - 6
ஐரோப்பா அழைத்தது. (பாகம் -5 )
வானகம் இங்கு தென்பட வேண்டும்!!!
வந்தது செங்கண் விசாதான். இதை எதற்கு கேட்டேன் என்றால், எ,பி,சி,டி என்று நான்கு வகை விசாக்கள் வழங்கப்படுகின்றன. நமக்கு வேண்டியது short term stay எனப்படும், குறுகிய கால செங்கண் விசா. இதை கொண்டு தான் செங்கண் நாடுகளுக்கு தடையின்றி செல்லலாம். இந்த விசாவின் காலம் ஆறு மாதம். அதற்குள் ஐரோப்பிய பயணத்தை முடிக்கவேண்டும். ஆனால் ஆறு மாதங்கள் அங்கே தங்க முடியாது. அதிகப்படியாக 90 நாட்கள் தான். அதிலும் உங்கள் ரிட்டர்ன் டிக்கெட் தேதியை பொறுத்து குறைத்து கொடுப்பார்கள். ஆகவே, சரியாக திட்டமிடல் அவசியம்.
எனக்கு கிடைத்தது சரியாக ஒரு மாத விசாதான்.
ம்ம்ம். இப்போது பெட்டி, கைப்பைகள் அனைத்தும் தயார். பதினைந்து நாட்களுக்கு தேவையான அனைத்தும் (அரிசி, பருப்பு, ஊறுகாய் இதெல்லாம் கூடாது) ஏனெனில், அங்குள்ள உணவு வகைகளை உண்டு பழக வேண்டும் என்பதுதான். முக்கியமாக சுவிட்சர்லாந்து போக விரும்புபவர்கள் அவசியம் sweat ஷர்ட், கைஉரை எடுத்து கொள்வது நல்லது.
எனக்கு விமானம் விடியல் காலை மூணே கால் மணி. ஆகவே நள்ளிரவே சென்னை விமான நிலையத்துக்கு சென்றாகி விட்டது. போர்டிங் பாஸ் பெற்றுக்கொண்டு, செக்யூரிட்டி செக், இம்மிக்ரேஷன் க்கு செல்லும்போதே கொஞ்சம் பதை பதைப்பு. என்ன கேள்வி கேட்பார்களோ, ஏதாவது காரணம் சொல்லி திருப்பி விடுவார்களோ என்றெல்லாம் மனதில் 'திக், திக்'. விசா இருந்தால் போதும் என்று கிடையாது. அவர்கள் கேள்விகளுக்கு உளறாமல் பதில் சொல்ல வேண்டும். அதே போலவே, மீண்டும் கேள்வி கணைகள். எங்கே செல்கிறீர்கள்?, எவ்வளவு நாள் தங்கப்போகிறீர்கள்? ரிட்டர்ன் டிக்கெட் காட்டுங்கள், பெட்டிக்குள் என்ன இருக்கிறது? இவை அனைத்துக்கும் பதில் சொல்லித்தான் ஆகவேண்டும். இம்மிக்ரேஷனில் இருந்த இளைஞன் எல்லா கேள்வியும் கேட்டுவிட்டு, "இதுவரை நீங்கள் வெளிநாடு சென்றதில்லையா?" என்று கேட்டபோது கொஞ்சம் கோபம், அழுகை எல்லாம் கலந்து வந்தது உண்மை.
கடைசியில் நிம்மதி பெருமூச்சோடு சென்னை - தோஹா (கத்தார் தலை நகரம்) விமானத்தில் ஏறி அமர்ந்தேன். இனிமேல், இறக்கி விட்டாலும், வேறு நாட்டில் தான் இறக்கி விடுவார்கள் என்று எண்னிக்கொண்டேன்.
விமானத்தின் (QATAR AIRWAYS ) இருக்கை, முட்டி இடிக்கும் அளவுதான் இருந்ததே ஒழிய மற்றபடி வசதிகளுக்கு குறைவில்லை. மணிக்கொரு முறை ஏதாவது தின்பண்டம் கொடுத்து கொண்டே இருந்தார்கள். வயிறு முட்ட சாப்பிடுபவர்களுக்கு பிரச்னை இல்லை.
சுமார் நாலு மணி நேர பயணத்துக்கு பிறகு 'ஹமாட் இன்டர்நேஷனல் ஏர்போர்ட்' வந்து இறங்கியது விமானம்.
"அடேங்கப்பா!" விமான நிலையமா அது, ஒரு சிறிய நகரம் போன்று இருந்தது. பிரமாண்ட கண்ணாடி கட்டிடங்கள், பள, பள வென மின்னும் LED விளக்குகள், மின்னும் நகைக்கடைகள், உலகின் அனைத்து வகையான உணவும் கிடைக்கும் உணவுக்கூடங்கள், மொத்தம் 93 வாசல்கள். உள்ளுக்குள்ளேயே பயணம் செய்ய மெட்ரோ ரயில், மொத்தத்தில் விமான நிலையத்தை சுற்றிப்பார்க்க ஒரு நாள் தேவை. இருந்த 4 மணி நேர அவகாசத்தில் உட்க்கார மனமில்லாமல், விமான நிலையத்தை சுற்றி வந்து பொழுதை கழித்தேன்.
ஒரு முக்கிய தகவல், தோஹா விமான நிலையத்தில் GPay வேலை செய்யும். கவலை வேண்டாம். ஆனால், மற்ற இடங்களுக்கு செல்வதானால் கட்டாயம் இன்டர்நேஷனல் க்ரெடிட் கார்ட் அவசியம். டெபிட் கார்டாக இருந்தால் , வெளிநாட்டு பரிவர்த்தனை சேவையை ஏற்படுத்தி கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் திண்டாட்டம்தான். அதேபோல், OTP கொண்டு கார்ட் இயக்குபவராக இருந்தால், போனில் இன்டர்நேஷனல் ரோமிங் சேவையை பெற்று கொள்ளவும். WiFi வசதி உள்ள கார்டாக இருந்தால் நல்லது.
தோஹா வரையிலும், நிறைய தமிழர்களை காண முடிந்தது. தோஹா விலிருந்து FRANKFURT செல்லும் விமானம் ஏறவேண்டிய வாசல் இருந்த இடத்தில், பெரும்பாலும் ஐரோப்பியர்கள் தான். அப்போதே ஜெர்மனி சென்றது போல ஒரு மலைப்பு தோன்றியது.
விமானத்தில் நுழையும் போது தமிழ் குரல்கள் பலமாக ஒலிக்கவே மிகவும் ஆர்வத்தோடு திரும்பி ப்பார்த்தேன்.
யார் அவர்கள்?
(தொடரும்)
Comments
Post a Comment