ஐரோப்பா அழைத்தது (பாகம்-12 )


தனமும், இன்பமும் வேண்டும்!!!


'ஹேக்' நகரம் கடற்கரையை ஒட்டி அமைந்துள்ள நகரமாதலால், மாலை கடற்கரைக்கு செல்ல முடிவெடுத்தோம். 'டிராம்' நிறுத்தத்துக்கு வந்து கடற்கரை செல்லும் வண்டியில் ஏறினோம். இங்கு ஒரு தகவல் சொல்ல விரும்புகிறேன். நெதர்லாந்தில் டிராம் டிக்கெட் சற்றே குறைவு. ஆதலால், டே டிக்கெட் வாங்கவில்லை. என்னுடைய கிரெடிட் கார்ட் கொண்டு, ட்ராமில் உள்ள தானியங்கி டிராம் மெஷினில் கார்டை தேய்த்தேன். ஒரு டிக்கெட் மட்டும் வந்து விழுந்தது. என் மனைவிக்கு டிக்கெட் எடுக்க முடியவில்லை. என் மகனுக்கு ரெசிடெண்ட் பெர்மிட் உள்ளதால் அவருக்கு பிரச்சினை இல்லை. ஆனால், என் மனைவிக்கு டிக்கெட் எடுக்க முடியாமல் போனது. இந்த நிகழ்வை பார்த்துக்கொண்டிருந்த டிராம்ஓட்டுநர் (பெண்மணி) "பரவாயில்லை அமருங்கள்" என்றார். இதை சொல்ல காரணம் இருக்கிறது. எதற்கும் பதட்ட பட தேவையே இல்லை. டிக்கெட் வாங்காமல் போனாலும் 'பரந்த மனதோடுதான் டச்சுக்காரர்கள் இருக்கிறார்கள். இப்போதுதான், ஜெர்மனியில் அந்த இரண்டு இளைஞர்கள் 'தன் ஊர்தான் சிறந்தது' என்று போட்டி போட்டது புரிந்தது.









கடற்கரை வந்து சேர்ந்தாயிற்று. அடேயப்பா! என்ன ஒரு கூட்டம், மெரினா கடற்கரையை மிஞ்சியது. எங்கு பார்த்தாலும், பள பள வென விளக்குகள், கண்ணாடி பதித்த கட்டிடங்கள், நடு, நடுவே செங்கல் கட்டிடங்கள், தெருவெங்கும் விரைவு உணவகங்கள், விளையாட்டு கூடங்கள் என ஒரே குதூகலமாக இருந்தது. பெரும்பாலும், இளைஞர் கூட்டங்கள் தங்கள் ஜோடியுடன்! 

கடற்கரை காற்று நம் உடையை கிழித்துக்கொண்டு உள்ளே புகுந்து குளிரை கூட்டியது. 'வெட வெட' வென நடுக்க ஆரம்பிக்கவே, ஸ்வட்டரை மாட்டி கொள்ளவேண்டியதாயிற்று. நாம் என்னதான் அழகழகான உடை அணிந்து கொண்டாலும், அதை ஸ்வட்டரை கொண்டு மறைத்தே ஆகவேண்டும். ஆதலால், நிறைய உடைகளை தூக்கி கொண்டு செல்லவேண்டாம்.

நம்மூரில், மிளகாய் பஜ்ஜி, மீன் வறுவல், சோளக்கதிர், போன்றவை கிடைக்கும். அங்கு அதுக்கு வழி இல்லை. பீசா, பர்கர், கிரோஜென்ட் (croissant ) கிடைக்கும். சாப்பிட பழகிக்கொள்ளுங்கள். குளிர் பானங்கள், மற்றும் ஏனைய பானங்களும் கிடைக்கும். குடிக்கலாம், யாரும் கண்டுகொள்ள மாட்டார்கள். 

கையில் ஏதாவது உணவு பண்டங்கள் எடுத்துக்கொண்டு செல்பவர்கள் சற்று ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். 'ஸீகல்' என்ற பெரிய பறவைகள் துரத்தி வரும். தூக்கிப்போட்டால் பறந்துகொண்டே கவ்விக்கொள்ளும். நீளமான முகப்பு பாலம் அமைத்துள்ளார்கள். நடந்து சென்றுகொண்டே கடலை ரசிக்கலாம். அருகிலேயே, கப்பல்களை காணலாம். ஏறக்குறைய ஒரு திருவிழாக்கோலம்தான். மிகப்பெரிய ராட்டினம், அதிவேக படகு சவாரி, பாராகிளைட், நீச்சல், தெரிந்தவர்கள் நீந்தலாம். 

இங்கு ஒரு முக்கிய தகவலைப் பகிர்ந்து கொள்ள வேண்டியுள்ளது. நெதர்லாந்தில், போதை பொருள்களுக்கு தடை இல்லை என்பதால், கஞ்சா சர்வ சாதாரணமாக கிடைக்கும். மொத்தத்தில், கேளிக்கைக்கு ஒரு இடம் என்றால் அது நெதர்லாந்து. ஆனால், குறைத்து மதிப்பிடவேண்டாம். நமக்கு அதனால் தொந்தரவு இல்லை என்பதே உண்மை. அங்கங்கே சீருடை காவலர்கள் சுற்றிக்கொண்டே இருக்கிறார்கள். எந்த ஒரு அசம்பாவிதமும் நடைபெறா வண்ணம் பார்த்து கொள்கிறார்கள். வாட்ட சாட்டமான (homeless ) வீடற்றவர்களும் இருக்கிறார்கள். நம்மிடம் பண உதவி கேட்பார்கள்.  

நெதலாந்தினுடைய கலைப்பொருட்கள், உடைகள், தொப்பி, சாவிக்கொத்து, என்று அனைத்தும் கிடைக்கும். மூன்று மணிநேர பொழுது போக்குப்புக்கு பிறகு ஆளுக்கு ஒரு துண்டு அமெரிக்கன் பீசா சாப்பிட்டு விட்டு, கோக்ககோலாவை பருகிவிட்டு ஹோட்டலுக்கு திரும்பினோம். 

ஹோட்டலில் சமையல் அறையும் இருந்ததால் கையில் இருந்த 'டார்ட்டிலா' எனப்படும் ரெடிமேட் சப்பாத்தியை சமைத்து சாப்பிட்டோம். அழுக்கு துணிகளை எல்லாம் துவைக்கும் இயந்திரத்தில் போட்டு விட்டு, மறுநாள் 'ஆம்ஸ்டர்டாம்' செல்ல தயாரானோம்.

ஆம்ஸ்டர்டாம் எனப்படும் இந்திரலோகம் பற்றி தெரிந்து கொள்ள ஒரு நாள் காத்திருங்கள்.


தொடரும்.

Comments

Popular posts from this blog

Dharbhai - An article by TRS Iyengar

Namasivaya and Sivayanama - What I read, Want to Share

A stone in my shoe