A short family trip to Europe-5
ஐரோப்பா அழைத்தது. (பாகம் -4 )
காரியத்தில் உறுதி வேண்டும்!!!
திருவிளையாடல் திரைப்படத்தில், தருமி "எனக்கில்லை, எனக்கில்லை" என்று புலம்புவதை போலவே நானும் என் மனதுக்குள்ளே புலம்பிக்கொண்டே வெளியில் வரும்போது தான், அந்த வடக்கத்திய ஆசாமி, கையில் ஒரு சில காகிதங்கள், தன்னுடைய மனைவி மற்றும் ஒரு பெண் குழந்தை சகிதம் நேர்காணல் பகுதிக்குள் நுழைந்து கொண்டிருந்தார். கலைந்த தலையும், அழுக்கு சட்டையுடனும் இருந்த அந்த ஆசாமி, கவுண்டரில் இருந்த சிப்பந்தியிடம் இந்தியில் ஏதோ வினவி விட்டு, தலையை தொங்க விட்டபடி மனைவியிடம் உரையாடிவிட்டு பின்னர் மறுபடியும் கவுண்டர் சிப்பந்தியிடம் ஏதோ பேசினார். பின்னர் ஒரு வழியாக சில காகிதங்களை பெற்று கொண்டு சற்று நிம்மதியோது வந்து அமர்ந்து பேனா வை எடுத்து எழுத ஆரம்பித்தார். எனக்கு அந்த நிகழ்ச்சி, ஆச்சர்யத்தையும், மிகுந்த நம்பிக்கையும் கொடுத்தது. அது தான், என்னை தொடர்ந்து முயற்சி செய்யுமாறு அறிவுறுத்தியது.
உடனடியாக வெளியில் வந்த நான், ஒரு ஓரத்தில் அமர்ந்து, பிளைட் (ரவுண்டு ட்ரிப்) டிக்கெட் மற்றும், ஜெர்மனியில் தங்குவதற்கான ஹோட்டல் ரூம் புக்கிங் முதலியவற்றை சரிவர செய்து முடித்தேன். ஜெர்மனி எம்பசி இணையத்திலிருந்து விசா அப்ப்ளிகேஷன் form ஐ டவுன்லோடு செய்து, பூர்த்தி செய்து, மீண்டும் VFS குளோபல் ஆபீஸ் க்கு நடையை வேகமாக போட்டேன்.
இம்முறை, வெற்றி நிச்சயம் என்பதை உள்ளுணர்வு உணர்த்தியது. வடக்கத்திய ஆசாமிக்கு நன்றி யை மனதுக்குள் சொல்லிவிட்டு, நேர்காணல் கவுண்டரில் நுழைந்தேன்.
இம்முறை, அந்த பெண் கேட்ட ஆவணங்கள் அனைத்தும் தயார், இரண்டைத்தவிர. பாஸ்போர்ட் சைஸ் போட்டோ, பயணத்திற்கான இன்சூரன்ஸ்.
முக்கிய தகவல்: தேவையான அளவில் பாஸ்போர்ட் சைஸ் போட்டோ, VFS அலுவலகத்தின் இரண்டாவது தளத்தில் எடுத்து தருவார்கள். இன்சூரன்ஸ் மூன்றாவது தளத்தில் பெற்று கொள்ளலாம். முக்கியமாக, இன்சூரன்ஸ் ல் உங்களுடைய பாஸ்போர்ட் எண் அவசியம் இருக்க வேண்டும். இல்லாவிட்டால், ஏற்று கொள்ள மாட்டார்கள்.
VFS loungue சர்வீஸ் வாங்கியிருந்தால், சிலவற்றை இலவசமாக பெறலாம்.
விசா அப்பிளிகேஷன், பாஸ்போர்ட், போட்டோ, ரவுண்டு ட்ரிப் டிக்கெட், வெளிநாட்டில் தங்குவதற்கான ஹோட்டல் புக்கிங், இன்சூரன்ஸ், வங்கி பரிவர்த்தனை விவரம், income tax returns , மூன்று மாத சம்பள சான்று, வேலையில இருந்தால், நோ அப்ஜெக்ஷன் சான்றிதழ் இவை அனைத்தும் முக்கியமாக வேண்டும். சேவைக்கான தொகையை கட்டி விட்டு நிமிர்ந்து பார்த்த போது மணி 4 ஐ கடந்து இருந்தது.
"கொஞ்சம் உக்காருங்க, பயோ மெட்ரிகுக்கு கூப்பிடுவாங்க" என்று அந்த பெண் சொன்னபோது, என் கையை நானே கிள்ளி பார்த்துக்கொண்டேன்.
சற்று நேரத்தில் அழைப்பு வந்தது. பயோ மெட்ரிக் ல் விரல்கள், முகம் போன்றவற்றை பதிவு செய்து விட்டு, " நீங்க போகலாம், பதினைந்து நாட்களில் ஜெர்மன் எம்பஸியில் இருந்து பதில் வரும்" என்று வீட்டுக்கு அனுப்பி விட்டார்கள்.
இந்த பரபரப்பான செயல்களில், பசி என்பதே மறந்து போனது. கண் முன், பலகாரங்களும், காபி, டீ மற்றும் குளிர் பானங்கள் அனைத்தும் இருந்தும், ஒன்றும் வயிற்றுக்குள்ளே செல்லவில்லை.
அது தெரிந்து தான் இத்தனையும் தைரியமாக வைத்துள்ளார்களோ?
ஒரு வழியாக விசா வந்து சேர்ந்தது. அது சரி, வந்தது செங்கண் விசா தானா, அல்லது வெறும் ஜெர்மனிக்கான விசா வா?
(தொடரும்)
Comments
Post a Comment