ஐரோப்பா அழைத்தது (பாகம்-15 )


பெண் விடுதலை வேண்டும்!!!


LGBTQIA + என்றால் என்ன? என்று கேட்டிருந்தேன். பெரும்பாலாருக்கு தெரிந்திருக்கும். தெரியாதவர்களுக்கு கூறுகிறேன். ஆண், பெண் என்ற இருபாலினங்கள் அனைவருக்கும் தெரியும். சில வருடங்களாக மூன்றாம் பாலினம் அரசியல் அமைப்பு சட்டத்திலேயே ஏற்றுக்கொள்ளப்பட்டு அதற்கான சட்டமும் இயற்றப்பட்டது. ஆக, இதிலிருந்து ஒன்று தெரிகிறது, அதாவது இரு பாலினம் கொண்ட மனித இனம்  மூன்றாவதும், மூன்று பாலினங்கள் பல பிரிவுகளாக மாறுவதும் சாத்தியமே. இவை யாவும், மனிதனின் உடல் தவிர, உணர்வு சம்மந்தப்பட்ட விஷயமே. ஆனால், சமுதாயம் இந்த பிரிவுகளை சரியாக பார்க்கிறதா? என்றால் அது கேள்விக்குரியதே. ஏனென்றால் மனித இனமே ஒரு பெருவாரி சமுதாய கருத்துக்களை அப்படியே ஏற்றுக்கொண்டு வாழப்பழகி உள்ளது. ஆகையால், உணர்வு ரீதியான பிரிவுகளை ஏற்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இது போன்ற சிக்கல்களுக்கு விடை காண வேண்டி தற்போது பல அமைப்புகள் முன்வந்துள்ளன. வளர்ந்த நாடுகளை கொண்டுள்ள ஐரோப்பாவில், இதற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. அதில் ஒன்றுதான் இந்த 'கிராண்ட் கார்மெஸ்'. LGBTQIA + பிரிவினருக்கான 'பராமரிப்பு, அதிகாரமளிப்பு' (கேர் அண்ட் எம்பவர்மெண்ட்) போன்ற முற்போக்கு சிந்தனையை கொண்டு செயல்படுகிறது. 

(குறிப்பு: LGBTQIA + என்று ஒரு நான் எழுதிய சிறுகதை என்னுடைய facebook 'ரெங்குடு ஆர்ட்ஸ்' பக்கத்தில் உள்ளது, விருப்பப்பட்டவர்கள் படிக்கலாம்)

முகத்தில் 'டாட்டூ' எனும் சாயம் தீட்டிக்கொண்டு பரவலாக நடந்து செல்லும் பெருவாரியான மக்களை காண முடிகிறது. இந்த 'டாட்டூ' தீட்டிக்கொள்வது கூட தன்னைப்பற்றி, தன்னுடைய சித்தாந்தம் பற்றி வெளியுலகுக்கு தெரிவிக்கும் நோக்கமே.

சரி, இனிப்பயணக்கட்டுரைக்கு வருவோம். 'பிரஸ்ஸல்ஸ்' ஐரோப்பிய அமைப்புக்கு முக்கிய நகரமாக விளங்குவதை அங்கு கண்ட 'ஐரோப்பிய மரபு சாரா ஆற்றல்' உற்பத்திக்கான ஆராய்ச்சி அலுவலக கட்டிடம், ஐக்கிய ஐரோப்பிய கூட்டமைப்பு கட்டிடங்கள் உணர்த்தின. மொத்தத்தில், பெல்ஜியம் வெறும் பணக்கார நாடாக மட்டும் கருத முடியவில்லை, மிக முக்கியமான நாடாக திகழ்கிறது.

நேரம், மாலை ஏழைத்தாண்டவே, பசியாற ஹோட்டலை தேடி அலையும்போது ஒரு பாகிஸ்தானி ஹோட்டல் தென்படவே உள்ளே நுழைந்தோம். என்ன இருந்தாலும் நமது பங்காளியல்லவா!.

சும்மா சொல்லக்கூடாது, அவர்கள் பரிமாறிய முஷ்ரூம் பிரியாணி மிகவும் சுவையாக இருந்தது. அவர்கள் காட்டிய அன்பும், பரிவும் பாராட்ட கூடியது. 'யாதும் ஊரே, யாவரும் கேளிர்' என்ற வரிகளின் முழு அர்த்தத்தை ஐரோப்பாவில் உணர முடிந்தது. இரவு நெருங்கவே, மீண்டும் 'டூ காங்கிரஸ்' ஹோட்டலுக்கு திரும்ப டிராமை பிடித்தோம்.

அடுத்த நாள் செல்லவேண்டிய நாடு, பிரான்ஸ், அதாவது பாரிஸ் நகரம். ஐரோப்பா செல்லும் அனைவரும், தவறாமல் பார்க்க விரும்புவது பாரிஸ் நகரம். உலகின் அதிசயங்களில் ஒன்றான 'ஐபில் டவர்' அங்குதான் இருக்கிறது. 'ஐஸ்வர்யா ராயும், பிரசாந்தும்' கை கோர்த்து கொண்டு டூயட் பாடும்போது, நாமும், நமக்கு பிடித்தவரோடு ஆடுவது போலவே இருக்கும். அப்படி என்ன இருக்கிறது? என்று பார்த்து விட மனம் துடிக்கத்தான் செய்தது.

பிரஸ்ஸல்ஸ் லிருந்து பாரிஸ் சுமார் நாலு மணிநேரப்பயணம். மீண்டும் பிளிக்ஸ்புஸ் தான், ஓமியோ வலைத்தளம் தான். இந்த பயணத்தில் பெரியதாக கலாச்சார மாற்றத்தை காண முடியவில்லை. ஏனென்றால், பெல்ஜியத்துக்கு, நான் ஏற்கனவே சொன்னது போல தனியாக கலாச்சாரம் ஒன்று இல்லை. முழுக்க, முழுக்க கண்ணாடி கட்டிடங்களும், கான்க்ரீட் கட்டிடங்களும்தான். பகல் பத்தரை மணிக்கு பாரிஸ் நகரம் வந்தாயிற்று. கீழ்தள மெட்ரோ ரயிலை பிடித்து நாங்கள் தங்க வேண்டிய ஹோட்டல் Liegestrasbourg  வந்து சேர்ந்தோம். பாரிஸில் மெட்ரோ ரயில் மிகவும் அற்புதமாக உள்ளது. ரயில் தண்டவாளத்தை பார்க்க முடியாது. கண்ணாடி கதவுகளால் பிளாட் பார்ம் அடைக்கப்பட்டிருக்கும். ரயில் வந்து நின்றதும், சரியாக ரயில் வாசலுக்கு நேரே உள்ள கதவுகள் மட்டும் திறக்கும். நாம் தவறி விழுவதற்கெல்லாம் வாய்ப்பே இல்லை. அவ்வளவு பாதுகாப்பாக அமைத்து இருக்கிறார்கள். ஒரு வகையில், இந்த மெட்ரோரயிலை நமது டெல்லி மெட்ரோரயிலோடு ஒப்பிடலாம்

"எந்த வகையில்?" சிந்தியுங்கள்.


தொடரும்.

Comments

Popular posts from this blog

Dharbhai - An article by TRS Iyengar

Namasivaya and Sivayanama - What I read, Want to Share

A stone in my shoe