ஐரோப்பா அழைத்தது (பாகம்-14 )


தனமும் இன்பமும் வேண்டும்!!!


ஹேகிலிருந்து பிரஸ்ஸல்ஸ், பிலிக்ஸ்பஸ் பேருந்தில் கிட்ட தட்ட மூன்று மணி நேர பயணம். இந்த பாதையில் பெரும்பாலும் கட்டிடங்களையே காண முடிந்தது. வயல், மரங்களை காணமுடியவில்லை. என்ன காரணம் என்றால் பெல்ஜியம் நான்கு நாடுகளை இணைக்கும் நாடு. மேற்புறத்தில், நெதர்லாந்து, கீழ்ப்புறத்தில் பிரான்ஸ், வலது  புறத்தில் ஜெர்மனி மற்றும் லுக்ஸம்போர்க். ஆதலால், இந்த நாட்டுக்கென்று தனியான கலாச்சாரத்தை காண முடியாது. டச்சு, பிரென்ச், ஜெர்மானிய கலாச்சாரத்தின் கலப்பு உள்ளது. மிகவும் பணக்கார நாடான பெல்ஜியத்தில், வைரம், கண்ணாடி வகைகள், முக்கியமாக சாக்கலேட் வகைகள் ரொம்ப பிரபலம். பிரஸ்ஸல்ஸ் பெல்ஜியத்தின் நடுப்பகுதியில் உள்ள முக்கிய நகரம். அந்நாட்டின் தலைநகரம். ஒவ்வொரு கட்டிடத்திலும், காசைக்கொட்டி தீர்த்திருக்கிறார்கள். அவ்வளவு பிரம்மாண்டம். தரைக்கு கீழே மெட்ரோரயில்கள் செல்லும். தரையில் பேருந்துகள், டிராம்கள் செல்லும். மெட்ரோரயிலை பிடித்து நாங்கள் தங்க வேண்டிய 'டு காங்கிரஸ்' ஹோட்டலுக்கு சென்று கையில் இருந்த பெட்டிகளை வைத்துவிட்டு 'சாக்லேட் மியூசியம்' கிளம்பினோம். செல்லும் வழியில் இருந்த செயின்ட் மைக்கேல் கதீட்ரல், டவுன்ஹால் போன்ற வானுயர்ந்த அழகிய படைப்புகளை பார்த்துக்கொண்டே சாக்லேட் மியூசியம் சென்றடைந்தோம். பெரியவர்களுக்கு டிக்கட் இருபது யூரோ, இளைஞர்களுக்கு (18 முதல் 25 வயது) பதினெட்டு யூரோ. இருபது யூரோவுக்கும் ஓசி சாக்லேட் சாப்பிட முடிந்தவர்கள் அள்ளி அள்ளி சாப்பிடலாம். நமக்கு திகட்டி விடும். உள்ளே நுழைந்த உடன் நமக்கு ஒரு 'செல்போன்' போன்ற ஒரு கருவியை கொடுத்து விடுகிறார்கள். அந்த கருவியை அங்குள்ள பொம்மைக்கு அருகில் கொண்டு சென்றால், கருவி விளக்க உரை நிகழ்த்தும்.







இந்த மியூசியத்தில் சாக்லேட் பிறந்த கதை முதல், அதன் பரிணாம வளர்ச்சியை மிக அழகான பொம்மைகளாக உருவாக்கி உள்ளார்கள். அத்தனை பொம்மையும் சாக்லெட்டாலேயே செய்யப்பட்டது என்று தெரியும்போது நமக்கு ஆச்சரியத்தை வரவழைக்கிறது.

அந்நாட்டு அரசனிடம், இளவரசி 'தனக்கு பிடித்த சாக்லேட் கொண்டுவந்தால்தான் ஆச்சு' என்று  பிடிவாதம் பிடித்த நிகழ்வை அழகான பொம்மையாக வைத்துள்ளார்கள். "ஹ்ம்ம்" இளவரசி அவ்வளவு அழகாக இருந்தால் சாக்லேட் என்ன, எதை கேட்டாலும் கொடுத்து தான் ஆகவேண்டும். சாக்லேட் பொம்மைதானே என்று நினைத்து யார்மீதாவது கையை வைத்து விட்டால் நான் பொறுப்பில்லை. அவ்வளவு தத்ரூபம். 





சாக்லெட்டால் செய்த வனவிலங்குகள், கட்டிடங்கள், மீன் பிடிக்கும் ஆசாமி, குயவர் என்று அனைத்தும் கொள்ளை அழகு. ஒவ்வொரு பொம்மையுடனும் செல்பீ எடுத்துக்கொள்ள வேண்டும் போலிருக்கும். சாக்லேட் எப்படி செய்ய வேண்டும் என்ற விளக்க உரை வீடியோ, (எனக்கு தேவைப்படவில்லை) எந்தெந்த நாட்டிலிருந்து என்னென்ன வருகிறது என்ற பல தகவல்கள் பற்றி தெரிந்து கொள்ளலாம்.

சாக்லேட் செய்யும் வேலைகளுக்கு, நம்நாட்டிலிருந்து கூட தொழிலாளர்களை  ஏற்றுமதி செய்திருக்கிறார்கள்.

மூலப்பொருட்கள் பெரும்பாலும் ஆப்பிரிக்க நாடுகளிலிருந்து வருகிறது. ஊருக்கு திரும்பி வரும்போது, நம் உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் தேவையான சாக்லேட்டுகளை இங்கு வாங்கிக்கொள்ளலாம். ஓசியில் சாப்பிட தாம்பாளம் நிறைய சாக்லேட்டுகள்  வைத்துள்ளார்கள். சர்க்கரை நோய் இல்லாதவர்கள் ஒரு கைபார்க்கலாம். சில பேர் சட்டை, பேண்ட் பாக்கெட்டுக்குள் திணித்து கொண்டதையும் பார்க்க முடிகிறது.

மொத்தத்தில் சாக்லேட் மியூசியம், இனிப்பு பிரியர்களுக்கு ஒரு மகத்தான இடம்தான்.

இரண்டு மணிநேரம் சர்வ சாதாரணமாக செலவாகி போனது. வெளியில் வந்து அருகில் இருந்த 'சின்குவான்டனைர் பூங்கா' வுக்கு சென்றோம். போகும் வழியில், ஒரு அறிவிப்பு பலகை, என் கவனத்தை ஈர்த்தது. என்ன இருந்தது அந்த பலகையில்? 



"க்ராண்ட்ஸ் கார்மெஸ், LGBTQIA +" என்றால் என்ன? யோசியுங்கள்.



தொடரும்.

Comments

Popular posts from this blog

The Garden Fire

Dharbhai - An article by TRS Iyengar