ஐரோப்பா அழைத்தது (பாகம்-22 )
தரணியிலே பெருமை வேண்டும்!!!
அடுத்து நாங்கள் செல்ல வேண்டிய நாடு ஆஸ்திரியா. ஆஸ்திரியா பல அதிசயங்களை, ரகசியமாக தன்னுள் வைத்திருக்கும் மிகவும் அழகிய நாடு. இதன் தலைநகரம் வியன்னா. இதுவும் ஐக்கிய நாடுகளின் கூட்டமைப்பில் மிக முக்கிய அங்கம் வகிக்கிறது. நிறைய நோபல் லாரெட்டுகளை உருவாக்கிய நாடுகளில் இதுவும் ஒன்று. 22 நோபல் பரிசுகளை பெற்று இருக்கிறது. வரலாறுகள் நிறைந்து காணப்படும் ஆஸ்திரியாவின் தலைநகரான வியன்னாவுக்கு போவதற்காக, காலை 11 :30 க்கு ரயிலை பிடித்தோம். வியன்னாவுக்கு நேரடியாக செல்லும் ரயில் கிடைக்காததால், ஜெர்மனியின் 'மூனிக்' (Munich ) வரை சென்று அங்கிருந்து வியன்னாவுக்கு ரயில் மாற வேண்டும். இடையில் அரை மணி நேர இடைவெளி. மொத்த பயண நேரம் எட்டு மணி. ஆனால், என்ன சோதனையோ நாங்கள் சென்ற ரயில், ஆங்காங்கே நின்று நின்று சென்றது. பிறகுதான் தெரிந்தது, ஜெர்மனியில் ரயில் பராமரிப்பு பணிகள் நடை பெற்று வருவதாகவும், அதனால் ரயில்கள் குறித்த நேரத்தை கடை பிடிப்பது இல்லை என்ற தகவல்கள். ஒன்றரை மணிக்கு மூனிக்குக்கு வந்து சேர வேண்டிய ரயில் சரியாக அரை மணி நேரம் தாமதமாக வந்தது. அவசரம், அவசரமாக பிளாட்பாரங்கள் மாறி, வியென்னா செல்ல வேண்டிய ரயில் இருந்த பிளாட்பாரத்தை நெருங்கும்போது, அந்த ரயில் கிளம்பி விட்டது. நம்மூர் போல ஓடியெல்லாம் ஏற முடியாது. அனைத்து கதவுகளும் மூடிக்கொண்டு விடும். பிறகு, அடுத்த ரயில் எப்போது வரும் என்று ஏக்கத்தோடு உட்கார்ந்து விட்டோம். இடையில் பசி எடுக்கவே, ஆளுக்கொரு க்ரோசென் (உப்பு போட்ட பன் ) வாங்கி சாப்பிட்டோம். அடுத்த ஒரு மணி நேரத்தில் இன்னொரு ரயில் வந்து நின்றது. அது சால்ஸ்புர்க் வரை செல்லும். அதன் பிறகு அடுத்த ரயிலை பிடித்து வியன்னா செல்ல வேண்டும்.
இங்கு ஒரு முக்கிய தகவல். ஜெர்மனியில் ரயில்கள் தாமதமாக வருவது ஒன்றும் புதிதல்ல என்ற தகவல்தான். நம்ம ஊரில் கூட இப்போதெல்லாம் ரயில்கள் ஏறத்தாழ சரியான நேரத்தில் வந்து விடுகின்றன. ஒரு விஷயம் பாராட்ட தக்கது, ஜெர்மனியில் உள்ள இன்டர் சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில்கள் 300 கி.மி வேகத்துக்கு மேல் பறந்து செல்கிறது. ஆதலால் தூரம் குறித்து நாம் கவலை பட வேண்டியதில்லை.
சால்ஸ்புர்க் செல்லும் ரயிலும் உருட்டி உருட்டி மாலை ஆறு மணிக்கு சால்ஸ்புர்க் வந்து சேர்ந்தது. நல்லவேளையாக சால்ஸபுர்கில் இன்டர் சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில் கிடைத்தது.
நாங்கள் அந்த இன்டர் சிட்டி எக்ஸ்பிரஸில் ஏறி கிடைத்த இடத்தில் ஆளுக்கொரு பக்கமாக அமர்ந்து கொண்டோம். ஒரு அரேபிய நண்பர், எனக்கு ஒரு இருக்கையை கொடுத்தார். அவரோடு, உரையாடிக்கொண்டே வந்தேன். அவர், பிறப்பால் ஏமனை சேர்ந்தவர், தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் ஒரு ஆலோசகராக இருப்பதாக அறிமுகப்படுத்தி கொண்டார். வருடம் தோறும், ஐரோப்பாவுக்கு சுற்றுப்பயணம் வருவதாக தெரிவித்தார். நான் அவரை இந்தியாவுக்கு வருமாறு அழைத்தேன். அவரது பார்வையில், இந்தியா, பாகிஸ்தான் இரண்டும் பிற்போக்கு சிந்தனை கொண்ட நாடுகள் என்றும், இரண்டும் அரசியல்வாதிகளின் ஊழலுக்கு இரையாகி இருப்பதாகவும் தனது கருத்தை தெரிவித்தார். நான் அவருடைய எண்ணத்தை கொஞ்சம் மாற்றி அமைத்தேன். நமது பெருமைகளை கூறிக்கொண்டு வந்தாலும், அவருடைய கருத்து அங்குள்ளவர்களின் பெரும்பான்மை கருத்தாகவே நாம் எண்ணவேண்டியிருக்கிறது. என்றாவது ஒருநாள் இந்த எண்ணங்கள் மாறவேண்டும் என்பதே நமது வேண்டுகோள்.
ரயில் இரண்டரை மணி நேர பயணத்துக்கு பிறகு வியன்னா HBF ரயில் நிலையத்துக்கு ஒன்பது மணிக்கு வந்து சேர்ந்தது. அந்த அரேபியருக்கு வாழ்த்தை கூறிவிட்டு விடை பெற்றுக்கொண்டு வெளியில் வந்தோம்.
பசி வயிற்றை கிள்ள ஆரம்பிக்கவே ஏதோ ஒரு ஹோட்டலை கண்டுபிடிக்க வேண்டிய கட்டாயத்தில் மீண்டும் கூகுளை கேட்டோம். "கேட்டதும் கொடுப்பவனே, கூகிள் கூகிள்" என்று பாடிக்கொண்டே அந்த பஞ்சாபி ஹோட்டலுக்குள் நுழைந்தோம். பஞ்சாபி ஹோட்டல்தான், ஆனால், நமது கவனத்தை ஈர்த்தது அந்த மூன்றடி உயர நடராஜர் சிலை. அந்த பஞ்சாபி சரியான வாயாடி. ஒரு கேள்விக்கு நான்கு பதில் கொடுத்து அசத்தினார். டிபன் சாப்பிட்டுவிட்டு 'டீ இருக்கா' என்று கேட்டதற்கு 'டீ' காலையில் குடிக்க வேண்டிய பானம், 'லிக்வர்' தான் இரவுக்கு உகந்தது என்று வியாக்கியானம் கொடுத்தார். 'நமக்கும் ஆசைதான், ஆனால் முடியுமா' என்று எனக்குள் கூறிக்கொண்டேன். வியன்னாவின் ரகசியங்களை நாளை பார்க்கலாம்.
தொடரும்.
Comments
Post a Comment