ஐரோப்பா அழைத்தது (பாகம்-20 )
பெரிய கடவுள் காக்க வேண்டும்!!!
சுவிட்சர்லாந்தும் இரு வேறு கலாச்சாரக்கலவை. ஜெனீவா நகரம் பிரெஞ்சு கலாச்சாரத்தையும், சூரிக் ஜெர்மானிய கலாச்சாரத்தையும் கொண்டுள்ளன. புழக்கத்திலுள்ள மொழியும் அப்படித்தான். ஜெனீவாவில் டிராம், பேருந்து மற்றும் ரயில் பயணத்தின்போது, 'அடுத்த நிறுத்தம்' என்பதை, 'ப்ரோஷனே அர்ரேட்' என்று பிரெஞ்சு மொழியிலும், 'சூரிக்'இல் 'நேஷ்ட்டே ஸ்டேஷன்' என்று ஜெர்மனிலும் ஒலிப்பார்கள். ஆக, ஒரே நாடுதான் என்று கவனமில்லாமல் இருந்தால் அதோகதி தான்.
ஜெனீவாவிலிருந்து சூரிக் மூன்று மணிநேர ரயில் பயணம். சுவிட்சர்லாந்தின் டபுள் டெக்கர் ரயிலில் காலை 9 மணிக்கு ஏறி மதிய உணவுக்கு சூரிக் சென்று விட்டோம். வழியில் லூசன், பெர்ன் போன்ற அழகிய நகரங்களும், ஆல்ப்ஸ் மலைச்சாரலும் நம்மை தொடர்ந்து வந்தன. ஆங்காங்கே குதிரை லாயங்கள், ஜெர்சி பசுக்களின் பட்டிகள், வயல் வெளிகள், ஜெனீவா ஏரியின் கரையோரம் என கண்களுக்கு குளிர்ச்சியான விருந்துதான். 12 மணிக்கு சூரிக் வந்து சேர்ந்தாகிவிட்டது. சூரிக் hbf என்பதுதான் சென்ட்ரல் ரயில் நிலையம். ஆகவே அங்கிருந்து தான் நாங்கள் செல்ல வேண்டிய ஈஸிஹோட்டலுக்கு செல்லவேண்டும். அதென்ன ஈஸி ஹோட்டல்? என்று கேட்டால், அதுதான் அந்த ஹோட்டலின் பெயர். நாங்கள் ஒரு மணிக்கு அங்கு சென்று விட்டோம். ஹோட்டல் வரவேற்பறையில் ஒரு ஈ, காக்கை கூட இல்லை. பத்துக்கு, பத்து அடி அளவுள்ள மிக சிறிய அந்த வரவேற்பறையில், ஏ.டி.எம். மெஷின் போல இரண்டும், இடது புறத்தில் பாதுகாப்பு பெட்டிகளும் தவிர வேறு ஒன்றும் இல்லை.
இங்கு ஒரு முக்கிய தகவலை தெரிந்து கொள்வோம். இந்த ஈஸிஹோட்டலில், எல்லாமே தானியங்கி இயந்திரங்கள்தான். லெட்ஜர் எழுத ஒரு பெண், பணம் வாங்க ஒரு பெண், சாவி கொடுக்க ஒரு பெண் என்றெல்லாம் கிடையாது. எழுத்தாளர் 'சுஜாதா' பாணியில் சொல்லவேண்டுமென்றால், 'ஜொள்ளர்கள்' இந்த ஹோட்டலை புக் செய்தால் ஏமாறவேண்டியதுதான். அந்த ஏ.டி,எம் போன்ற இயந்திரத்தில் தான் எல்லாம் அடங்கியிருக்கிறது. செக்-இன் நேரம் மதியம் மூன்று மணிதான் என்பதால், ஒரு மணிக்கு அந்த இயந்திரம் வேலை செய்யவில்லை. எங்கள் கையில் மிகப்பெரிய பெட்டிஇருந்ததால், அதை வைக்க அருகில் இருந்த பாதுகாப்பு பெட்டியில் ஒன்றை திறந்து உள்ளே வைத்து விட்டேன். பெட்டி பூட்டிக்கொண்டது. 'அது சரி, பெட்டியை திரும்ப எப்படி எடுப்பது?' வழி தெரியவில்லை. என்னுடைய மகன், என்னை முறைத்து பார்க்க, 'ஒன்றும் தெரியாதவன்' போல வெளியில் வேடிக்கை பார்க்க திரும்பினேன். நல்ல வேளையாக, அந்த இயந்திரத்தின் அருகில் ஜெர்மன் மொழியில் ஏதோ எழுதி மொபைல் நம்பர் ஒன்றும் போட்டிருந்தது. கூகுளை கொண்டு அதில் எழுதியிருந்ததை புரிந்துகொண்டு, அந்த மொபைல் எண்ணை தொடர்பு கொண்டேன். அந்த பக்கத்திலிருந்து ஒரு பெண், ஒரு ரகசிய எண்ணை கூறி அந்த இயந்திரத்தின் பொத்தானை அழுத்த சொல்ல, அதை அழுத்தியுடன் பெட்டி திறந்து கொண்டது. இப்படியாக, அலிபாபா கதை போல எல்லாமே புதிர்தான். ஆனால் ஹோட்டல் பெயரோ ஈஸிஹோட்டல். மீண்டும் பெட்டியை பூட்டி விட்டு, மதிய உணவுக்காக நடையை கட்டினோம். எப்படியும் மூன்று மணிக்குதான் ஏ.டி.எம் இயந்திரம் சாவியை தரும். அதுவரை பொழுதை ஓட்டியாக வேண்டுமே. கிடைத்ததை வாயில் போட்டுகொண்டு இரண்டே முக்காலுக்கு மீண்டும் ஈஸி ஹோட்டலுக்கு வந்து, மெஷினை நோண்டிபார்த்தேன். ம்ம்ஹ்ம், அது விடாப்பிடியாக மூன்று மணிக்கு தான் எங்கள் QR கோடை படித்து விட்டு குறிப்புகளை கொடுத்தது. அதன்படி, சிறிய பெட்டியில் இருந்து 'பிசினெஸ் கார்டு' போல இருந்த அட்டையை அந்த மெஷினின் மேல் வைத்து 'ஓகே' என்று வந்தவுடன் அந்த கார்டை அருகில் இருந்த பெரிய கதவுக்கருகே கொண்டு சென்ற உடன் கதவு திறந்து கொண்டது. இப்போது மூன்று பேரும் ஹோட்டலின் உள்ளே நுழைந்துகொண்டோம். "நாலாவதாக மற்றுமொருவர் நுழைந்தால் என்ன செய்வது?" என்று நீங்கள் சிந்திப்பது புரிகிறது. எனக்கும் அதே சந்தேகம் வந்தது. இப்படியெல்லாம், இடக்கு, முடக்காகவெல்லாம் சிந்திக்கவேண்டாம்.
இப்போது எங்களுக்கு ஒதுக்கப்பட்ட அறையை ஐந்தாவது மாடியில் கண்டுகொண்டு, மீண்டும் அட்டையை தேய்த்து விட்டு உள்ளேசென்று. ஆசுவாசப்படுத்தி கொண்டோம். அலிபாபா கதையை தொடர்ந்து இன்னும் பல சுவாரசியமான விஷயங்களோடு நாளை சந்திப்போம்.
தொடரும்.
Comments
Post a Comment