ஐரோப்பா அழைத்தது. (பாகம் -6 )


நினைவு நல்லது வேண்டும்!!!


தமிழ் குரலில், யார் அவர்கள்? திரும்பி ப்பார்த்த போது தான் தெரிந்தது, அவர்கள் வேறு யாருமில்லை, கத்தார் விமானத்தில் பணிபுரியும் சிப்பந்திகள் தான். சென்னையிலிருந்து பிராங்கபார்ட் வரையிலும் எங்களோடு வந்தவர்கள், தங்கள் பணிச்சுமை குறித்து ஏதோ அளவளாவிக்கொண்டிருந்தார்கள். ஹ்ம்ம். என்று சிணுங்கி விட்டு பிராங்பேர்ட் செல்லும் விமானத்தில் ஏறி மீண்டும் ஆறரை மணி நேரப்பயணம். ஒரு வழியாக பிராங்பேர்ட் விமானநிலையம் வந்து சேர்ந்தாயிற்று. அப்படி ஒரு பரபரப்பு மிகுந்த விமான நிலையத்தை நான் கண்டதில்லை. அடேயப்பா! எவ்வளவு கூட்டம். எத்தனை விதமான பயணிகள், வெள்ளைக்காரர்கள், ஆப்பிரிக்கர்கள், ஆசியர்கள், சீனர்கள், ஜப்பானியர்கள் என ஒரு முழு உலக மனித இனத்தையும் அங்கு பார்க்கலாம். காரணம் என்ன? பிராங்பேர்ட் ஒரு முக்கியமான இணைப்பு விமான நிலையம். உலகின் எந்த பகுதிக்கு செல்ல வேண்டும் என்றாலும் இங்கு வந்துதான் விமானம் மாறுகிறார்கள். இப்போது, துபாய், சிங்கப்பூர் போன்ற சில விமான நிலையங்களும் இந்த வகையில் அமைந்தவையே. 

செக் இன் பெட்டியை பெற்றுக்கொள்ள சுமார் இரண்டு மணி நேரம் வரிசையில் காத்து நிற்க வேண்டியதாயிற்று. பிறகு, மீண்டும் இம்மிகிரேஷன், அதாவது மறுவிசாரணை. இது இன்னும் சிக்கல் கொண்டது. இங்கு உளறாமல் இருக்க, இரண்டு மூன்று முறை ஒப்புவித்து பார்த்து கொண்டேன். இதில், நானும், என் மனைவியும் ஒரே பதிலையே கூற வேண்டும். "வடிவேலு" பாணியில் சொல்வதானால், "அடித்து கூட கேப்பாங்க, ஒரே பதிலை தான் சொல்ல வேண்டும்"

அதை கடந்து வந்தால், ஏழு அடிக்கு குறையாமல் இரண்டு பயில்வான்கள் (கஸ்டம்ஸ் அதிகாரிகள்) "பெட்டிக்குள் என்ன இருக்கிறது" என்று ஜெர்மன் மொழியில் விசாரித்தார்கள். பேஸ்மெண்ட்  வீக்காக இருந்தாலும், முகத்தில் காட்டி கொள்ளாமல் "English ப்ளீஸ்" என்றேன். what is inside ? என்று நாகரிகமாக கேட்டார்கள். பெட்டியை திறந்தேன். "நோ, நோ,யு மே கோ" என்று சொல்லிவிட்டு மீண்டும் ஜெர்மன் மொழியில் "டாங்கே" என்றார்கள். கூகிள் மொழிபெயர்ப்பான் "டாங்கே" என்றால் "நன்றி" என்று கூறியது.

விமான நிலையத்துக்கு வெளியில் வந்த வுடன் "காடி சாஹியே க்யா?" என்று இந்தி குரல் ஒலித்தது. மிக ஆச்சர்யத்தோடு திரும்பி பார்த்தால், மிக நீளமான மெர்சிடிஸ் கார் ஒன்று அருகில் வந்து நின்றது. வேறு ஒன்றும் இல்லை, ஐரோப்பாவில் டாக்ஸி க்கள் அனேகமாக மெர்சிடிஸ், ஆடி, டெஸ்லா, போக்ஸ்வாகன் போன்ற வகைகள்தான்.அவ்வப்போது டயோட்டா கோரோலா கிடைக்கும்.

டாக்ஸி ஓட்டுனரிடம் நான் தங்கப்போகும் ஹோட்டலின் விலாசத்தை காட்டினேன். ஓகே, என்றவர், பெட்டிகளை டிக்கியில் ஏற்றினார். எனக்குள் கொஞ்சம் அச்சம். நம்ம ஊரு ஆட்டோக்காரர் போல முன்னாலேயே பேரம் பேச வேண்டுமோ என்று தோன்றியது. அரைகுறை இந்தியில் எவ்வளவு ஆகும் என்று கேட்டுவிட்டேன். "முப்பத்தி இரண்டு யூரோ ஆகலாம்" என்றார். " சரி" என்று சொல்லிவிட்டு காரில் அமர்ந்தேன். காரை இயக்கியவுடன், தலைக்கு நேரே உள்ள மீட்டர் ஓடஆரம்பித்தது. நிம்மதி பெரு மூச்சு விட்டு அவரிடம் பேச்சு கொடுத்தேன். அவர் தான் ஒரு பாகிஸ்தானி என்று அறிமுகப்படுத்தி கொண்டு இந்தியிலும் ஆங்கிலத்திலும் பேசிக்கொண்டே வந்தார். முப்பத்தைந்து வருடங்களாக ஜெர்மனியில் இருப்பதாக சொன்னார். ஓட்டல் (Aeroport  Walldorf ) சுமார் 15  நிமிட பயணத்துக்கு பின் வந்து சேர்ந்தது. பெட்டிகளை இறக்கி கொடுத்து விட்டு, ஜெர்மனியில் பஸ், ரயில் டிக்கட்டுகள் பற்றி சில உபயோகமான  தகவல்களை கொடுத்து விட்டு "ஹாப்பி டூரிங்" என்று மனதார வாழ்த்தி விட்டு சென்றார். மீட்டர் 34 யூரோ காட்டியது. 






 (தொடரும்)  

Comments

Popular posts from this blog

Dharbhai - An article by TRS Iyengar

Namasivaya and Sivayanama - What I read, Want to Share

A stone in my shoe