ஐரோப்பா அழைத்தது (பாகம்-20 )

பெரிய கடவுள் காக்க வேண்டும்!!!
ஈஸி ஹோட்டலில் கஷ்டப்பட்டு உள்ளே சென்று எங்கள் அறையை கண்டு பிடித்து உள்ளே சென்றோம். பிறகு மற்றவையெல்லாம் சுமுகமாகவே நடந்தேறியது. அன்று ஞாயிற்று கிழமையானதால், நிறைய கடைகள் மூடியே இருந்தன. மாலை வேளை ஆனதும், ஸ்வட்டரை மாட்டிக்கொண்டு வெளியே கிளம்பி வந்தோம். நாங்கள் தங்கியிருந்த ஹோட்டலிலிருந்து சற்று தொலைவில் ஒரு கால்வாய் ஓடிக்கொண்டிருந்தது. அதன் மேலிருந்த பாலத்தில் நின்று கொண்டு சுற்றி நோட்டம் விட்டபோது, நிரம்பி வழியும் அந்த கால்வாயின் கரையில் ஒரு திருவிழா கூட்டம் போல தெரியவே, அங்கு செல்லலாம் என்று முடிவெடுத்து நடைப்போட்டோம். அந்த திருவிழாக்கூட்டம் பெரும்பாலும், இளவட்டங்கள் கூட்டமாகவே இருந்தது. அது ஒரு நீச்சல் பயிற்சி செய்யும் இடமாகவும், ஸ்கேட் பலகை விளையாட்டு பயிலும் இடமாகவும் இருந்தது. மறுபக்கம் இருந்த சிறிய மைதானம் ஒரே புகை மண்டலமாக காட்சியளித்தது. ஆங்காங்கே, சில ஆப்பிரிக்க இளைஞர்கள் கையில் புகை பொருளை வைத்துக்கொண்டு புகைத்து கொண்டும், நடமாடிக்கொண்டும் இருந்தார்கள். அவர்களை நெருங்கிய மற்ற சில இளைஞர்களும், இளைஞிகளும் புகை பொருளை பெற்று கொண்டு சென்றதையும் பார்த்த போது, அது என்ன பொருள் என்று ஊகிக்க முடிந்தது. அந்த ஆப்பிரிக்க இளைஞர்களில் ஒருவர் என்னையும் 'வெல்கம்' என்று வரவேற்றார். "ஹீ ஹீ" என்று இளித்துவிட்டு நைசாக கழட்டிகொண்டேன். அங்கிருந்த பெரும்பாலோர் அந்த போதைப்பொருளை புகைத்து கொண்டிருந்தனர் என்பது சற்றே வேதனையை அளித்தது. ஆனால் அவர்களால் நமக்கு எந்த தொந்தரவும் இல்லை. ஆதலால், அந்த கால்வாயின் கரையில் ஒரு மணிநேரம் உட்கார்ந்து, அவர்களின் நடவடிக்கையை கவனித்துக்கொண்டு இருந்தோம். அவர்கள் அந்தந்த நொடியில் வாழ்க்கையை வாழ்கிறார்கள் என்பதை புரிந்து கொள்ள முடிந்தது. அவர்களுக்கு அன்னியர்களை பற்றிய கவலை எதுவும் இல்லை, 'யாதும் ஊரே, யாவரும் கேளிர்' என்று இருந்தார்கள். எனக்கும், என்னுள் இருந்த கவலைகள் மறந்து தான் போனது, புகையினால் அல்ல, அவர்களின் நிலையினால்.
மறுநாள், காலை எட்டு மணிக்கு கிளம்பி விட்டோம், ஊர் சுற்ற. முதலில் சென்றது 'சூரிக் மெயின்' என்ற மைய பகுதி. இங்கு தான் மிகப்பெரிய ஏரியான 'சூரிக் ஏரி' உள்ளது. இங்கிருந்துதான் லேக் க்ரூஸ் என்ற படகு சவாரி செல்லலாம். இங்கும் ஒரே டிக்கெட்டில், பேருந்து, டிராம், க்ரூஸ் படகு சவாரி எல்லாம் செல்லலாம். டிக்கெட் வாங்கும்போது சூரிக் சிட்டி
சுற்றுலா டிக்கெட் வாங்கவேண்டும். 300 முதல் 500 பேர் செல்லக்கூடிய க்ரூஸ் படகு தயாராக இருந்ததால் அதில் ஏறிக்கொண்டோம். அதுவும் டபுள் டெக்கர் எனப்படும் இரட்டை அடுக்கு படகு. மேல் தளத்தில் ஏறிக்கொண்டால் இயற்கை அழகுகளை ரசித்துக்கொண்டே செல்லலாம். கூடவே, நொறுக்கு தீனியாக சில தின்பண்டங்களும், பானங்களும் கிடைக்கும். ஒரு மணி நேர பயணத்தில், ரம்மியமான அழகை ரசித்துக்கொண்டே சென்றோம். அந்த ஏரியில், சில இளவட்டங்கள், அதிவேக படகை பிடித்து கொண்டு வாட்டர் ஸ்கெட்டிங் செய்து கொண்டும், சிலர் கரை ஓரங்களில் சூரிய குளியலில் ஈடுபட்டிருந்தார்கள். சிலு, சிலுவென காற்று வீசிக்கொண்டு இருந்தது. ஆளுக்கொரு ஹாட் சாக்லேட் வாங்கி மென்றுகொண்டே சென்றோம். ஒரு மணிநேரத்துக்கு பிறகு மீண்டும் கரை சேர்ந்தோம். கரையில், ஒரு வித்தியாசமான சிலை ஒன்றை பார்த்தேன். ஒரு இளைஞனின் அருகில், மிக பெரிய கழுகு ஒன்று இருப்பதைப்போல மிக அழகாக செதுக்கியிருந்தார்கள். அந்த இளைஞன், கிரேக்க கதையின்படி, உலகின் மிக அழகிய இளைஞன் 'கேனிமெட்ஸ்'. அவனை கடத்தி வந்த 'ஜீயஸ்' தான் அந்த கழுகு என்றும் அறிந்துகொண்டேன். மதிய உணவுக்கான நேரம் நெருங்கவே கூகுளை கேட்டபோது அருகே ஒரு பெங்காலி ஹோட்டல் இருந்தது தெரிந்தது. அது ஒரு பெண்மணி நடத்தும் ஹோட்டல். அவர் வங்காளதேசத்தை சேர்ந்தவர். நான் மலபார் பிரைட் ரைஸும், என் மகனும், மனைவியும், ஆலு பரோட்டாவும் சாப்பிட்டோம். மிகவும் சுவையாகவே இருந்தது. ஒவ்வொரு கேள்விக்கு பின்னரும், அந்த பெண்மணி சொன்ன "தேங்க் யூ" இன்னும் மனதில் நீங்காமல் உள்ளது.
இன்னும், சுவிஸ் மார்க்கட், ப்ரோட்டஸ்டன்ட் சர்ச் என்று நிறைய பேச வேண்டியிருக்கிது. நாளை பேசலாமா?
தொடரும்.







Comments

Popular posts from this blog

Dharbhai - An article by TRS Iyengar

Namasivaya and Sivayanama - What I read, Want to Share

A stone in my shoe