ஐரோப்பா அழைத்தது. (பாகம் -9 )
நெருங்கின பொருள் கைப்பட வேண்டும்!!!
"சென்கென் மியூசியம்", பிராங்கபார்ட்டின் மைய்யப்பகுதியில் தான் உள்ளது. ஹாப் ஆன் ஹாப் ஆப் பேருந்து அந்த மியூசியம் வழியாக தான் சென்றது. ஆகவே, அங்கே இறங்கிக்கொண்டு நுழைவு கட்டணமாக, தலா ஐந்து யூரோ கொடுத்து அந்த பிரம்மாண்ட அருங்காட்சியகத்தின் உள்ளே சென்றேன். நுழைவு வாசலிலேயே 15 அடி உயரமான மிக பெரிய டைனோசரின் எலும்புக்கூடு வரவேற்றது. சுற்றிலும், பல வகையான, பல மில்லியன் வருடங்களுக்கு முந்தைய விலங்குகளின் கூடுகள். மாமோத், டஸ்கர் எனப்படும் யானை வகை, திமிங்கலம், ஆமை, போன்ற பெரிய விலங்குகள் தொடங்கி, வண்ணத்து பூச்சி, தேனீ, கொசு, போன்ற மிகச்சிறிய உயிரினங்கள் வரை அனைத்து உடல்களும் பாடப்படுத்தி வைத்துள்ளார்கள். அரியவகை மரங்கள், மீன் வகைகள், ஆக்டோபஸ் முதலான கடல் வாழ் உயிரங்களும் இதில் அடங்கும்.
எனக்கு பிடித்த, நமது மூதாதையரின் உடலுக்கு அருகில் நின்று போட்டோ எடுக்கும்போது, என் மகன் அதை போன்றே சேட்டை செய்ய சொல்லவே, நானும் வாயை உப்பிக்கொண்டு, குனிந்தவாறு போட்டோக்கு மாதிரியானேன். என்னைப்பார்த்து, அருகே வந்த ஒரு ஐரோப்பிய குழந்தை, "ஹே,... மங்கி, மங்கி..." என்று சிரித்து கொண்டே சொன்னது.
"ஆஹா! என்ன அருமையாக நான் நடித்திருக்கிறேன்" என்று நானே மார் தட்டிக்கொண்டேன்.
புவிக்கடியில் உள்ள பல விதமான விலையுயர்ந்த கற்கள் சேதப்படுத்த படாமல் இயல்பாக வைக்கப்பட்டுள்ளது. 'போர்' அடிக்காமல் இருப்பதற்காக சில விளையாட்டுகள், வினாடி வினா போட்டி போன்றவையும் உள்ளது.
மொத்தத்தில், விருப்பம் உள்ளவர்கள் தாராளமாக மூன்று மணி நேரம் பொழுது போக்கலாம், அறிவு விருத்தியும் பெறலாம். எனக்கு, மிகப்பெரிய டஸ்கர், மமொத் எனப்படும் யானை வகைகளை பார்க்கும் போது, மனித இனம் அவைகளுக்கு செய்த தீங்குகளும், அதனால் இன்று பெயரளவுக்கு கூட அவை இல்லாமல் போனதும் கொஞ்சம் கண்ணீரை வரவழைத்தது. அவைகள் எவ்வாறு அழிந்தன? என்பது பற்றியெல்லாம் தெரிந்து கொள்ள 'யூவல் நோவா ஹராரி' எழுதிய "சேப்பியன்" (Sepians ) என்ற புத்தகத்தை படியுங்கள். மிகவும் பலசாலியான அப்பாவி விலங்குகள், மனிதனின் பேராசைக்கு பலியானது புரியும்.
ம்யூஸியத்தினுள் நடந்த நடையில் நன்றாக பசி எடுக்க ஆரம்பிக்கவே, மதிய உணவுக்காக இந்திய உணவு எங்கு கிடைக்கும்? என்று கூகிளை கேட்டோம். அருகில் ஒரு வணிக வளாகம் 'ஸ்கை லைன் பிளாசா' இருப்பதாகவும், அதில் 'மஞ்சு உணவகம்' இருப்பதாகவும் தெரிவிக்கவே, வளாகத்துக்கு, வழி எங்கும் பராக்கு பார்த்துக்கொண்டே சென்று அடைந்தோம்.
மணி மூன்றை தொட்டது. மஞ்சு உணவகத்தில் பிரைட் ரைஸ், சப்பாத்தி போன்றவை கிடைக்கவே பசி காற்றில் பறந்து போனது. பில் தொகை எவ்வளவு இருக்கும்? யோசித்து சொல்லுங்கள்.
எனக்கு உண்ட களைப்பு அல்லவா, நான் மீண்டும் வால்டோர்ப் ஓட்டலுக்கு சென்று சிறிது ஓய்வு எடுக்கப்போகிறேன். டவுன் பேருந்து எங்களை, மீண்டும் ஓட்டலுக்கு கூட்டி சென்றது.
நாளை பிராங்கபார்ட் டிலிருந்து கிளம்பி அடுத்த நாட்டுக்கு செல்லலாம்.
(தொடரும்)
Comments
Post a Comment