ஐரோப்பா அழைத்தது (பாகம்-11 )
உண்மை நின்றிட வேண்டும்!!!
அனைவருக்கும் 77 வது சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்!
உங்கள் சிந்தனையில் ஏதேனும் உதித்ததா? கவலை வேண்டாம், எனக்கும் நெதர்லாந்துக்குள் நுழைந்து சில நிமிடங்களுக்கு பிறகுதான் அந்த வித்தியாசத்தை கவனிக்க முடிந்தது. அப்படி என்ன வித்தியாசம்?
வித்தியாசம் கட்டிடங்களின் அமைப்பில்தான். ஜென்மானியர்கள் கட்டிடங்களுக்கு வெளிப்பூச்சு பூசி இருக்கிறார்கள். கிட்டத்தட்ட நமது ஊர்போலத்தான். டச்சுக்காரர்கள், கட்டிடங்களுக்கு வெளிப்பூச்சு பூசுவதில்லை. செங்கல் வெளியில் தெரியும் வண்ணமே அத்தனை கட்டிடங்களும் கட்டியுள்ளார்கள். நெதர்லாந்தும், ஜெர்மனியும் இணையும் பகுதியில், இரண்டு வகையான கட்டிடங்களும் பார்க்க முடிகிறது. மெல்ல, மெல்ல வெளிப்பூச்சு கட்டிடங்கள் குறைந்து முழுவதுமாக செங்கல் கட்டிடங்களே காண முடிந்தது.
செங்கல் என்று குறைவாக மதிப்பிட வேண்டாம். செங்கற்களின் அமைப்பே மிகவும் அழகாக உள்ளது. கட்டிடங்களின் உயரமும், கலை நயமும் கண்கொள்ளா காட்சி. ஒவ்வொரு கட்டிடமும், குறைந்தபட்சம் 200 வருடம் முன்பு கட்டியது. ஆனாலும், உறுதியாக உள்ளது.
அழகியலில் ஜெர்மானியர்களை விட டச்சுக்காரர்கள் ரசனை மிகுந்தவர்களாகவே தோன்றுகிறது. அதேபோல சாலைகளிலும், முக்கியமாக சைக்கிள் செல்லும் பாதைகள் செங்கல் பதித்த பாதைகளே. நேர்கோடு போட்டது போன்ற சாலைகள். ஆங்காங்கே குறுக்கு சாலைகள். அகலம் என்று சொல்ல முடியாது.
ஐந்தொவன், பிரபலமான நகரம். பிலிப்ஸ் போன்ற நிறுவனங்கள் உள்ள நகரம். அதன் பிறகு ரொட்டர்டாம் என்ற நகரம். இது நமது மும்பையை போன்ற பெருநகரம். உயர்ந்த கட்டிடங்கள் (ஸ்கை ஸ்க்ராப்பர்) நிறைந்துள்ளது. இந்த இரண்டு நகரங்களை தாண்டி, ஹேக் நகரம் வந்து சேர்ந்தது. நேரம் 2 மணியைத்தாண்டியிருந்தது. மத்திய பேருந்து நிலையம் வந்து சேர்ந்ததும், நாங்கள் இறங்கிக்கொண்டோம்.
பேருந்து நிலையத்துக்கும், விமான நிலையத்துக்கும் பெரிய வித்தியாசம் காண முடியவில்லை.
பசி வயிற்றை பிசையவே, எங்கு சாப்பிடலாம்? என்று யோசிக்கும்போதே, என் மகன், 'இந்த வழியாக போகலாம்' என்று அழைத்துக்கொண்டு போனார். "அட, என்ன ஆச்சர்யம் HSB லோகோவுடன் ஹோட்டல் சரவணபவன். நாக்கில் எச்சில் ஊற உள்ளே சென்று ஆளுக்கொரு முழு சாப்பாடு ஆர்டர் செய்து சாப்பிட்டோம். அப்பளம், பாயசம், கூட்டு, பொரியலுடல் பசிக்கு ஏற்ற மதிய உணவு கிடைத்தது.
உண்ட களைப்பை ஆற்றிக்கொள்ள ஏற்கனவே புக்கிங் செய்த ஸ்டே பிரிட்ஜ் ஹோட்டலுக்கு சென்று கட்டையை நீட்டினோம். ஹோட்டலுக்கு அருகிலேயே நீளமான ஓடை குளுவென ஓடுகிறது. ஓடையின் இரு புறமும் பூந்தோட்டம், மற்றும் அமர்ந்து இளைப்பாற ஏதுவாக கருங்கல் மேடையிருக்கைகள். ஒரு நாளில், குறைந்தது 16 மணி நேரமாவது மக்கள் நடமாட்டம் என அந்த இடம் ஒரு சொர்க்கபுரிதான். இரவுப்பொழுதும் இனிமையாக கழிந்தது.
மறுநாள் காலை, ஓட்டலிலிருந்து புறப்பட்டு, டிராம் ரயில் ஏறி, 'world forum convention center ' இருக்கும் இடத்துக்கு சென்றோம். இங்கு, சர்வதேச அளவில், முக்கியமான கருத்தரங்குகள் நடத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்படும். அது இருக்கும் சாலையே அமைதி பூங்காவாகதான் இருந்தது என்றால் மிகையில்லை. சாலை முழுவதும் அனைத்து உறுப்பு நாடுகளின் வண்ண கொடிகள் பட்டொளி வீசிப்பறந்து கொண்டிருந்தன.
அவைகளுக்கு நடுவில், நமது மூவர்ணக்கொடி தலை உயர்த்தி 'பட,பட' வென சிறகடித்து பறந்ததைக்கண்டபோது, என் மனமும் கர்வத்தோடு சிறகடித்து பறந்தது. ஒரு நாள் எனது தேசமும், சாதி, மத பேதமின்றி அமைதிப்பூங்காவாக இருக்கும் என்ற நம்பிக்கை தோன்றியது.
நமது தேசியக்கொடிக்கு வணக்கத்தை செலுத்தி விட்டு அடுத்த இடத்தை நோக்கி பயணமானோம்.
தொடரும்.
Comments
Post a Comment