ஐரோப்பா அழைத்தது (பாகம்-17 )


தரணியிலே பெருமை வேண்டும்!!!


மீண்டும் இந்த பகுதியை ரயிலிலிருந்தே தொடங்குவோம். இந்த ரயிலின் பெயர் TGV எக்ஸ்பிரஸ். ஐரோப்பாவின் அதிவேக ரயில். தொலை தூர பயணத்துக்காகவே இதை உருவாக்கியிருக்கிறார்கள். அதிக பட்ச வேகமாக 320 கிலோ மீட்டரை தொடுகிறது இந்த ரயில். ஆனால் ஜெர்மனியின் இன்டர் சிட்டி எக்ஸ்பிரஸ் ரயிலும் இந்த வேகத்தை தொடுகிறது என்பதே நான் கண்டது. இந்த TGV அதிவேக ரயிலில் பயணிப்பதற்காகவே பாரிஸிலிருந்து ஜெனீவா வரை டிக்கெட் பதிவு செய்து இருந்தேன். ஜெனீவா, சுவிட்சர்லாந்தின் மிக முக்கிய நகரம். இந்த இடத்தை தேர்ந்து எடுத்ததற்கு காரணம் உள்ளது.

அதை கூறும் முன்பு, ரயில் பயணத்தை பற்றி பார்த்து விடலாம். 

காலை, பத்தேகாலுக்கு பாரிஸ் நகரின் 'கரே டீ லயன்' ரயில்வே நிலையத்திலிருந்து கிளம்புகிறது அந்த TGV LYRIA எக்ஸ்பிரஸ் ரயில். அந்த ரயிலின் முக அமைப்பு, ஒரு விமானத்தின் முக அமைப்பை போலவே உள்ளது. காற்றின் தடுப்பு சுமையை குறைப்பதற்காக இப்படி வடிவமைத்துள்ளார். மற்றபடி ரயிலின் உள்ளமைப்பு, நமது 'வந்தே பாரத்' ரயிலைப்போலத்தான். இங்கு ஒரு முக்கிய தகவலை தெரிந்து கொள்ளுங்கள். ஐரோப்பாவில் நான் சென்ற எந்த ஒரு நாட்டிலும், ரயிலில் படுக்கை வசதி கொடுக்கப்பட வில்லை. அது தொலைதூர ரயிலாக இருந்தாலும் அதே கதை தான். அனைத்தும் சேர் கார் தான். ரயில்கள் டபுள் டெக்கர் எனப்படும் இரட்டை தளம் கொண்டது. சில ஒற்றை தளம் கொண்ட ரயில்களும் ஓடுகின்றன. நாம் கொண்டுவந்துள்ள பெட்டி, படுக்கைகளை வைக்க ஏதுவாக, ஒரு பகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. கைசாமான்களை மேலே உள்ள தட்டில் வைத்து விடலாம். நமது இருக்கைக்கு அருகிலேயே சார்ஜிங் பாயிண்ட் இருக்கிறது. 'wifi ' வசதியும் இருக்கிறது. 

ரயில் குறித்த நேரத்தில் கிளம்பியது. முதல் அரை மணிநேரம் உருட்டிக்கொண்டே தான் சென்றது. நேரம் ஆக, ஆக விறு விறுவென வேகத்தை அதிகரித்து அதிக பட்ச வேகத்தை தொட்டது. மூன்று மணி நேரத்துக்கு குறைவாகவே 411 கிலோமீட்டரை கடந்து ஜெனீவா சென்று அடைந்தது. ஒரு பரீட்சைக்காக, நான் வைத்திருந்த தண்ணீர் பாட்டிலை முன்னாலிருந்த மேசை மேல் வைத்து ரயிலின் அதிர்வை கணித்தேன். சிறு, சிறு அதிர்வலைகளை தாண்டி எதுவும் தெரியவில்லை, அவ்வளவு சீரான பயணம். டிக்கட் விலை சுமார் முப்பது யூரோ. ஐரோப்பா செல்பவர்கள் அவசியம் இந்த ரயில் பயணத்தின் சுகத்தை அனுபவிக்க வேண்டும். இந்த ரயிலுக்கு சற்றும் இளைத்தவர்கள் இல்லை, என்று ஜெர்மனியின் ICE ரயிலும் சவால் விடலாம்.





சரி. நான் ஏன் ஜெனீவாவை தேர்ந்து எடுத்தேன் என்பதை சொல்லியாக வேண்டும். ஐரோப்பாவின் நீளமான மலைத்தொடர் 'ஆல்ப்ஸ்'. பிரான்சில் தொடங்கி ஸ்லோவேனியா வரை, எட்டு நாடுகளை கடந்து செல்கிறது. பெரும்பாலும், ஐரோப்பா செல்லுபவர்கள் சுவிட்சர்லாந்தில் உள்ள லூசெர்ன் அல்லது இண்டர்லேக்கன் சென்று, 'டிட்லிஸ்' என்ற சிகரத்தை ரசிப்பார்கள். ஆகவே, சுற்றுலா பயணிகள் அதிகம். எனக்கு, வேறுவகையான எண்ணம். என்னவென்றால், ஆல்ப்ஸ் தொடரின் மிக உயர்ந்த சிகரத்தை காணவேண்டும் என்பதே. அந்த சிகரத்தின் பெயர், 'மாண்ட் ப்ளாங்'. இந்த சிகரம், பூகோள ரீதியாக பிரான்சில் இருந்தாலும், பிரான்ஸ், இத்தாலி மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய மூன்று நாடுகளையும் இணைக்கும் பகுதியில் உள்ளது. 'ஒரே கல்லில் மூன்று மாங்காய்' அல்லவா. அதுவும் 4807 மீட்டர் உயரமான சிகரம். எனவே, அங்கே செல்வது என்று தீர்மானித்து, அதற்கு செல்ல பொருத்தமான நகரம் ஜெனீவாதான் என்று தேர்வு செய்தேன். தேர்வு, மிக சரியான தேர்வாக மாறியதுதான் நடந்த கதை. இனி, ஜெனீவா பற்றியும், மாண்ட் ப்ளாங் பற்றியும் தொடர்ந்து பார்க்கலாம். சுவிட்சர்லாந்து, ஏன் மண்ணுலக சொர்க்கம் என்று அழைக்கப்படுகிறது? சிந்தியுங்கள்.


தொடரும்.

Comments

Popular posts from this blog

The Garden Fire

Dharbhai - An article by TRS Iyengar