A Short family trip to Europe
ஐரோப்பா அழைத்தது. (பாகம் -3 )
கனவு மெய்ப்பட வேண்டும்!!!
என்ன செய்தேன்? வேறு என்ன செய்வது, பேசாமல் ஜூன் 5 க்கு தயாராக முடிவு செய்தேன். மிக முக்கியமாக ஆதார் கார்ட், பான் கார்ட், போன்ற தேவையற்ற (சிரிப்பு) நகல்களோடு பாஸ்போர்ட், போட்டோ, வங்கி பரிவர்த்தனை (3 மாதம்), வருமான வரி விபரம், தடுப்பு ஊசி போட்டதற்கான சான்றிதழ், சம்பள சான்று ( 3 மாதம்) போன்ற முக்கிய ஆவணங்களையும் அள்ளிக்கொண்டு புறப்பட்டு போனேன்.
VFS குளோபல், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ளது. மிக சிறிய சந்துக்குள் மாருதி முதல் BMW , ஆடி போன்ற கார்களும் அணி வகுக்க, குறித்த நேரத்தில் வந்து சேர்ந்து, செக்யூரிட்டி யிடம் நேர்காணல் உத்தரவு கடிதத்தை ஒப்படைத்தேன்.
இங்கு ஒரு தகவல்: உள்ளே நேர்காணல் கடிதத்தில் உள்ள நபர் மட்டுமே அனுமதிக்கப்படுவர். "இது எங்க சித்தப்பா, அடிக்கடி வெளிநாடு போவார், துணைக்கு வந்திருக்கிறார்" என்றெல்லாம் சொல்ல முடியாது. இல்லை என்றால் இந்தியன் தாத்தா மாதிரி வயதாகியிருந்தால் ஒருவேளை அனுமதிக்கலாம். மடிக்கணினி, டாப்லெட் கம்ப்யூட்டர் போன்றவைக்கு அனுமதி இல்லை. "நான் சுகர் பேஷண்ட், கொஞ்சம் இட்டலி எடுத்துபோகவேண்டும்".....கண்டிப்பாக நோ.
இதை எல்லாம் கடந்து செக்யூரிட்டி செக்கிங் தாண்டி உள்ளே போனால், "அடேங்கப்பா" உள்ளே, ஒரு மினி multiplex , பிசுக்கோத், காபி, டி, குளிர் பானம், (மட்டும்) எல்லாமே உள்ளன. முக்கியமாக போன் சார்ஜிங் வசதி. ஆனால் சிக்னல் மட்டும் சதி செய்து விடும். சரி, விஷயத்துக்கு வருவோம்.
மேசையின் அந்த பக்கத்தில் அமர்ந்திருந்த இளம்பெண் அழகான தமிழில் விசாரணை ஆரம்பித்தார்.
" எங்க போகப்போறீங்க?" இளம்பெண்.
"ஜெர்மனி" நான்
"எதற்கு?" இந்த கேள்விக்கு கோபப்படக்கூடாது.
"என் மகன் நெதர்லாண்ட்ஸ்ல் படிக்கிறார், அவனை பார்க்க"
" அப்போ, நீங்க நெதர்லாண்ட்ஸ் கு தானே அப்ளை பண்ணனும்."
"ஹீ, ஹீ, ஜெர்மனி கு தான் தேதி கிடைத்தது, நெதர்லாண்ட்ஸ்க்கு கிடைக்கல. அதான்."
"மன்னிக்கணும், இது செல்லாது, நீங்க போயிட்டு நெதர்லாண்ட்ஸ்க்கு அப்ளை பண்ணிட்டு வாங்க" சிறிதும் கவலை இன்றி அந்த பெண் சொன்னார்.
'ஆஹா, சொதப்பிட்டடா ரெங்கராஜா' நானே என் தலையில் குட்டிக்கொண்டு "இல்லை, இல்லை, ஜெர்மனிக்கு டூர் போகப்போகிறேன், அதோடு சேர்ந்து என் மகனையும் பார்க்க போவேன்" என்று சமாளித்தேன்.
"ஜெர்மனி போவதற்கு விமான டிக்கெட் காமியுங்கள்"
மீண்டும் ஸ்டம்ப்ட்.
"இனிமேல்தான் புக் செய்யவேண்டும்" அசடு வழிந்து விட்டு இரண்டு மணி நேரம் அவகாசம் கேட்டு விட்டு வெளியே வந்து விட்டேன். அப்போதுதான் ஆங்கிலம், தமிழ் இரண்டும் தெரியாத அந்த வடக்கத்திய ஆசாமியை கவனித்தேன்.
என்ன நிகழ்ந்தது. (தொடரும்)
Comments
Post a Comment