A short trip to Europe - Part 7
ஐரோப்பா அழைத்தது. (பாகம் -7 )
கைவசமாவது விரைவில் வேண்டும்!!!
பாகிஸ்தானியருக்கு நானும் நன்றி கூறி விட்டு ஏரோபோர்ட் வால்டர்ப் ஓட்டலுக்குள் நுழைந்தேன். மலர்ந்த சிரிப்போடு ஒரு சீனப்பெண்மணி ஓட்டலின் வரவேற்பிலிருந்து தலையை நீட்டி வரவேற்றார். புக்கிங் விவரங்களை சரிபார்த்து விட்டு என் பெயரை ரேங் ராஜான் என்று கஷ்டப்பட்டு உச்சரித்தார். பின்னர், தவறாக உச்சரித்தற்கு மன்னிப்பும் கேட்டுக்கொண்டார். நானும் சிரித்துக்கொண்டே ரூம் திறவுகோல் அட்டையை பெற்றுக்கொண்டு ரூமுக்கு சென்று சிறிது ஓய்வு எடுத்துக்கொண்டேன். மாலை மணி ஏழை நெருங்கியது. என்னுடைய மகன், நெதர்லாந்திலிருந்து வந்து சேர இன்னும் மூன்று மணி நேரம் இருந்தது.
முக்கிய தகவல். இந்த காலங்களில் ஐரோப்பாவில், இரவு பத்து மணிவரை பகல் போல வெளிச்சம் இருக்கிறது. காலை ஆறு மணிக்கு சுளீர் என்று வெயில் அடிக்கிறது. ஆயினும், உஷ்ணம் தெரிவதில்லை. அதனால், உடல் சோர்வு தெரிவதில்லை.
முதல் முறையாக, ஜெர்மனியில் இரவு உணவு தேட வேண்டிய நேரம். இன்னொரு முக்கிய தகவல். நான் எந்த ஒரு டூர் பேக்கேஜும் ஏற்பாடு செய்யவில்லை. அனைத்து நாடுகளுக்கும், இடங்களுக்கும் முழுவதுமாக பொதுஜன போக்குவரத்து சேவைகளையும், உணவுக்கு ஓட்டல்களையும் பயன் படுத்திக்கொண்டேன். இதற்கு முக்கிய காரணம், அந்நாட்டு மக்களோடு சகஜமாக ஒன்றி இருப்பதே என் விருப்பம். என் பயணத்தில், டவுன் பஸ், வெளியூர் பேருந்து, மெட்ரோ ரயில், அதிவேக ரயில், டிராம், படகு, க்ரூஸ் எனப்படும் பெரிய படகு அனைத்தும் அடங்கும். வரும் பகுதிகளில், இவை பற்றியெல்லாம் விரிவாக எழுத இருக்கிறேன்.
இப்போது இரவு உணவு நேரம். "எங்கு கிடைக்கும்" என்று அந்த சீன பெண்மணியை கேட்டேன். (நான் தங்கியிருந்த ஓட்டலிலேயே உணவு இருந்தது என்பது வேறு விஷயம்) சீன பெண்மணி, சிறிதும் தயக்கம் இன்றி இன்னும் அரை கிலோமீட்டர் தொலைவில், ஒரு தாய் உணவகம் இருப்பதாக தெரிவித்ததை தொடர்ந்து, அங்கே பயணித்தேன்.
"தாய்" உணவகம், மிகவும் சிறியதாக, நம்ம ஊர், மணிஐயர் ஓட்டல் போல இருந்தது. ஆனால் உள்ளே இருந்த உணவுகள் அய்யர் உணவு இல்லை. உணவகத்தில் இருந்த பணியாளரிடம், "வீகன் உணவு உள்ளதா?" என்று வினவினேன். "வெஜிடேரியன்" உணவை தான் இப்போதெல்லாம் "வீகன்" என்று அழைக்கிறார்கள்.
அந்த பணியாளர், என்னை ஏற, இறங்க பார்த்து விட்டு, "மரக்கறி உணவா?" என்று சுத்த தமிழில் கேட்டார்.
ஒரு நொடியில், என் உடல் முழுவதும் பாரதியும், அவ்வையும், வள்ளுவரும், ஒருங்கிணைந்து குத்துவது போன்ற உணர்வு. ஒரு பக்கம் அதிர்ச்சி, மறுபக்கம் மகிழ்ச்சி.
"ஆஹா, தாங்கள் தமிழா?" என்று வியப்போடு கேட்டேன். "ஓமம்" என்பது போல பதிலளித்தார் அந்த இலங்கை தமிழர். உடனடியாக ஒரு சகோதரத்துவம் தோன்றியது முற்றிலும் உண்மை. எங்களுக்காக அரிசி கொண்டு சமைத்து, அவருக்கு தெரிந்த வகையில், சுவையான இரவு உணவை அரை மணி நேரத்தில் செய்து கொடுத்தார். அந்த உணவை பார்சல் கட்டி எடுத்துக்கொண்டு, அவருக்கு "நன்றி" தெரிவித்து விட்டு கிளம்பும் போது,
"ஐயா, தாங்கள் இவருக்கு வோட்டு போடுவீர்களா?" என்று ஒரு அரசியல் தலைவரின் பெயரை கூறினார்.
அவர் யாரை குறிப்பிட்டார்?
(தொடரும்)
Comments
Post a Comment