ஐரோப்பா அழைத்தது (பாகம்-10 )
தரணியிலே பெருமை வேண்டும்!!!
"குட் பை பிரான்க்பார்ட்" சொல்லிவிட்டு நடையை கட்டினோம். பிரான்க்பார்ட் சென்ட்ரல் (சென்றால் என்று எழுதியிருப்பார்கள்) வந்து சேர்ந்து நாங்கள் செல்லவேண்டிய பிலிக்ஸ்பஸ் பேருந்து எங்கு இருக்கிறது? என்று விசாரிப்பதற்காக சற்று அருகில் நின்ற இரு இளைஞர்களை நெருங்கி, ஆங்கிலத்தில் விசாரித்தோம். அவர்கள் அழகிய தமிழில், "இங்குதான் வரும், நீங்கள் எங்கு செல்லவேண்டும்?" என்ன கேட்கவே, மீண்டும் காதில் தேன் வந்து பாய்ந்தது. ஒரு இளைஞர் திருச்சியை சேர்ந்தவர், நெதர்லாந்தில் வசிக்கிறார், மற்றவர், சென்னையை சேர்ந்தவர், ஜெர்மனியில் வசிக்கிறார். சிறிது நேரம் பேச்சு கொடுத்தோம். அவர்களில் ஒருவர், நெதர்லாந்து சிறந்தது என்றும், மற்றவர் ஜெர்மனியே சிறந்தது என்றும் வழக்காடு மன்றம் நடத்தினார்கள். எனக்கு சிரிப்பும், என்னுடைய இளமைக்கால நினைவுகளும் வந்து சேர்ந்தது. அப்போது, திருச்சிதான் சிறந்த ஊர் என்று நானும், இல்லை! திருநெல்வேலிதான் சிறந்தது என்று என் நண்பனும் போட்டி போடுவோம். எனக்குள் சிரித்து கொண்டே 'பிலிக்ஸ் பஸ்' பேருந்தில் ஏறி அமர்ந்தோம்.
முக்கிய தகவல். பேருந்து பயணமாக இருந்தாலும், முன்கூட்டியே ஆன்லைன் மூலமாக டிக்கெட் பெறுவது நலம். இதற்காகவே "omio " என்று ஒரு வலைத்தளம் உள்ளது. அதில் பெற்றுக்கொள்ளலாம்.
நாங்கள் செல்லவேண்டிய "டென்ஹாக்" எனப்படும் "Hague " நெதர்லாந்தின் முக்கிய நகரங்களில் ஒன்று. அங்குதான் சர்வதேச கருத்தரங்குகள் நடைபெறுகின்றன. இந்த பேருந்தின் கடைசி இருப்பிடம். குறைந்தது ஏழு மணிநேர பயணம், ஆதலால் தூங்குபவர்கள் தூங்கலாம். எனக்கு தூக்கம் வரவில்லை, அதை இந்தியாவில் செய்துகொள்ளலாம். ஜன்னல் வழியாக வேடிக்கை பார்ப்பதில் அலாதி இன்பம். மேலும், பேருந்து, பான், டசல்டோர்ப், ஐந்தொவன் போன்ற பெருநகரங்களை கடந்து செல்லும். பலவகையான பயணிகளையும், அவர்களின் செயல்களையும் கவனிப்பேன்.
இங்கு ஜெர்மனியின் highways பற்றி சொல்லியாக வேண்டும். எல்லா சாலைகளும், தங்க நாற்கரம் தான். சொல்லப்போனால் ஆறுகரம். மிகவும் அகலம். சிறிய ஹாச்பேக் கார்களில் தொடங்கி, நீளமான multiaxle லாரிகள் வரை, அனைத்துரக வாகனங்களும், செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. ஆங்காங்கே, நீண்டு வளைந்த பறக்கும் பாதைகள். highways சாலைகளின் இரு புறமும், கம்பி வலையைக்கொண்டு அரணமைக்கப்பட்டிருக்கும், ஆதலால், எந்த ஒரு விலங்கினமும் சாலையின் குறுக்கே வர முடியாது. நம்மூர் சாலைகளில், நாய்களும், மாடுகளும், குறுக்கும், நெடுக்குமாக சென்று, அடிபட்டுவிடுவதை பார்த்திருக்கிறேன். நம்மூரில் நெடும்சாலைகள் அமைக்கும்போது, இதை கருத்தில் கொள்ள வேண்டும். வளர்ந்த நாடுகளில், அனைத்து உயிரினங்களுக்கும், சட்டப்படி மதிப்பு அளிக்கப்படுகிறது என்பது பெருமைக்குரிய விஷயமே.
இருபுறமும், கோதுமை வயல்வெளிகள், ஆங்காங்கே காற்றாலைகள், சில இடங்களில் ஓங்கி உயர்ந்து வளர்ந்த ஓக் மரக்காடுகள், என்று இயற்கை வளங்கள் செழிப்பாகவே உள்ளது.
அனைத்து பேருந்துகளும், AC வசதியுனேயே இருக்கின்றன. பேருந்துக்குள், இயற்கை உபாதைகளை கழிக்க சிறியதாக ஒரு அறை அமைக்கப்பட்டுள்ளது.
அதன் அளவைப்பார்த்தபோது, உள்ளே நுழைந்தால் வெளியே வருவது கடினம் எனத்தோன்றியதால், பேசாமல் அமர்ந்து விட்டேன். சிறிது நேரத்தில், ஒரு ஆப்பிரிக்க பெண்மணி, குறைந்த பட்சம், ஐந்தே முக்கால் அடி உயரம், 100 கிலோ எடைக்கு குறையாத உடல்வாகோடு அந்த அறைக்குள் நுழைந்ததை பார்த்து மிகவும் ஆச்சர்யப்பட்டேன்.
நேரம் பகல் 12 ஐ தொட்டது. என்னுடைய மகன் அப்போது "நெதர்லாந்து வந்துவிட்டதா? என்று எப்படி கண்டுபிடிப்பாய்" என்று ஒரு கேள்வியை எழுப்பினார். அப்போதுதான் அப்படி ஒரு விஷயம் உள்ளதோ! என்பதை உணர்ந்தவனாய், ஜன்னல் வெளியில் உற்று பார்த்துக்கொண்டே வந்தேன். கட்டிடங்களின் ரசித்தேனே ஒழிய, கலாச்சார மாற்றத்தை கவனிக்க தவறினேன் என்பதே உண்மை.
அப்படி என்ன அண்டை நாடுகளுக்குள் கலாச்சார மாற்றம்?
சிந்தியுங்கள்.
தொடரும்.
Comments
Post a Comment