ஐரோப்பா அழைத்தது (பாகம்-18 )


மண் பயனுற வேண்டும்!!!


சுவிட்சர்லாந்து ஏன் மண்ணுலக சொர்க்கம் என்று அழைக்கப்படுகிறது என்று கேட்டிருந்தேன். இந்த கேள்விக்கான விடையை, ரயிலில் ஜெனீவா நகரை நோக்கி செல்லும் பாதையின் இரு பக்கத்தை கவனித்தாலே தெரிந்து விடுகிறது. இருபுறமும், வினீயார்ட் என்று அழைக்கப்படும் திராட்சை தோட்டங்கள் பரந்து விரிந்து காணப்படுகிறது. இதிலிருந்துதான் சுவிட்சர்லாந்தின் பாரம்பரிய பானம், அதாவது wine தயாரிக்கப்படுகிறது. சுற்றிலும் ஆல்ப்ஸ் மலைத்தொடரின் அணிவகுப்பு, நீண்டு செல்லும் ஐரோப்பாவின் மிக பெரிய ஏரி, (நீளம் 74 கிலோமீட்டர், அகலம் சுமார் 14 கிலோமீட்டர் (நமது வீராணம் ஏரி 12 கி.மீ. நீளம், 4 கி.மீ அகலம்) எப்போதும் நிரம்பி இருக்கிறது. தொடர்ந்து நிரம்பி இருக்க வேண்டுமென்றால், அது நமது செயல்பாடுகளில் இருக்கிறது. "கிளம்பிட்டாரு அட்வைஸ் ஆறுமுகம்" என்று நீங்கள் முணு முணுப்பது தெரிகிறது.

சரி, விஷயத்துக்கு வருவோம். இந்த கண்கொள்ளா காட்சிகளினால் தான் அந்த நாடு மண்ணுலக சொர்க்கம் என்று பெயர் பெற்றுள்ளது. ரயில் ஜெனீவா ரயில் நிலையம் வந்து சேரும்போது மணி ஒன்றரை இருக்கலாம்.  வெளிப்புறம் வந்த உடனே சற்று குளிர் காற்று வீசியது. 

ஒரு டாக்சியை பிடித்து ஜெனீவா ஏர்போர்ட் அருகில் உள்ள 'இபிஸ் பட்ஜெட் ஹோட்டல்' வந்து சேர்ந்தோம். பெயரிலிருந்தே புரிந்து கொள்ளலாம், ரூம் வாடகை நமக்கு சாதகமாக இருக்கும் என்பதை. இந்த முக்கிய தகவலை தெரிந்து கொள்ளுங்கள். ibis பட்ஜெட் ஹோட்டல், ஐரோப்பாவின் செயின் ஹோட்டல். இந்த ஹோட்டல், நகரின் நடுப்பகுதியிலும் கிடைக்கும், கொஞ்சம் ஒதுக்கு புறத்திலும் கிடைக்கும். நமக்கு செலவு கணிசமாக குறையும். 

சிறிது நேர ஓய்வுக்கு பிறகு ஜெனீவா நகரை வலம் வர தீர்மானித்து கிளம்பினோம். ஒரு தொடர்ப்பேருந்தை பிடித்து (தொடர்பேருந்து என்பது 'டிராம்' அல்ல, ஆனால் டிராம் போலவே, பேருந்தின் தலையில் மின்சார நீள்கம்பி இருக்கும், அந்த நீள்கம்பி சாலை நடுவே அமைக்கப்பட்டுள்ள மின்சார தொடர்கம்பியில் தொட்டுக்கொண்டே செல்கிறது. இங்கு ஒரு சம்பவத்தை சொல்ல விரும்புகிறேன். அருகில் இருக்கும் பேருந்து நிறுத்தம் தென்படாமல் போகவே, அங்கு நின்று கொண்டிருந்த, சுமார் 60 வயது மதிக்கத்தக்க ஒருவரை அணுகி வழி கேட்டேன். அவர் பிரென்ச் மொழியில் கூறிய வழி எனக்கு சரியாக புரியாமல் போனது. அதை புரிந்துகொண்ட அந்த மனிதர், எங்களை கூடவே அழைத்து கொண்டு வந்து, நாங்கள் செல்ல வேண்டிய பேருந்து நிறுத்தத்தில் கொண்டு வந்து விட்டு, பேருந்தின் எண்ணையும் கூறி அனுப்பி வைத்தார். பிறகு அங்கிருந்து அவர் செல்ல வேண்டிய பேருந்து நிலையத்துக்கு திரும்பி சென்றது என்னை இப்போதும் புல்லரிக்க வைக்கிறது. என்னுடைய பார்வையில், ஐரோப்பியர்கள் மனிதாபிமானத்தில், மிகவும் உயர்ந்து விளங்குகிறார்கள். 

அந்த பேருந்து ஜெனீவா நகரின் மையப்பகுதியான ஜெனீவா பாலத்துக்கு வந்து நின்றதும், நாங்கள் இறங்கி கொண்டோம். பாலத்தில் நின்றுகொண்டு ஜெனீவா ஏரியின் அழகை ரசித்தோம்.





 'அப்பப்பா, கொள்ளை அழகு'. ஏரி ஆழத்தை கண்டுபிடிக்க முடியவில்லை, ஆனால், தண்ணீருக்கடியில் தரையை காணமுடிகிறது. விக்கீபீடியா 61 அடி என்று கூறுகிறது. ஆனால் சத்தியமாக நம்ப முடியாது. அவ்வளவு தெளிர்ந்த தண்ணீர். அந்த ஏரியில் 500 பயணிகள் செல்லக்கூடிய க்ரூஸ் படகு செல்கிறது என்றால் பார்த்து கொள்ளுங்கள். அங்கிருந்து நடைப்பயணத்தை தொடங்கி ஏரிக்கரையை சுற்றிவிட்டு ஹோட்டல் வந்து சேர்ந்தோம். துவைக்க வேண்டிய துணிமணிகள் சேர்ந்திருந்ததால், இபிஸ் ஹோட்டலுக்கு எதிரில் உள்ள தானியங்கி சலவை (லாண்ட்ரேட் ) இயந்திரத்தில் கொண்டு கொட்டி, ஒரு மணி நேரத்தில் புதுப்பித்து கொண்டு வந்தோம். மறுநாள் செல்லவேண்டிய இடம், ஆல்ப்ஸ் மலைத்தொடரின் மிக உயர்ந்த  சிகரமான 'மாண்ட் பிளாங்க்'. பேருந்து, மலை ரயில் மற்றும் கேபிள் கார் என்று மூன்று பயணங்கள் கொண்டது. காத்திருங்கள்.


தொடரும். 

Comments

Popular posts from this blog

Dharbhai - An article by TRS Iyengar

Namasivaya and Sivayanama - What I read, Want to Share

A stone in my shoe