கல்யாணமாம் கல்யாணம், அறுபதாம் கல்யாணம்! (பாகம்-9 )
'ருத்ர ஏகாதசி' பூஜைகளை தொடர்ந்து 'மரகத லிங்க அபிஷேகம்' நடந்தது. அது பற்றி இன்று தெரிந்து கொள்வோம். மரகதம், ஆங்கிலத்தில் 'எமரால்டு' என்று சொல்லுவார்கள். இயற்கையில் பச்சை நிறமுடையது. மரகத லிங்கம் என்பதும் பச்சை நிறமுடையது. மிகவும் அரிதானது இந்த மரகத லிங்கம்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் 'உத்திரகோச மங்கை' என்று ஒரு மிக பழைமையான சிவாலயம் ஒன்று உள்ளது. கிட்டத்தட்ட 2000 ஆண்டுகளுக்கு முன்பாகவே கட்டப்பட்டதாக சொல்லப்படுகிறது. இந்த ஆலயத்தில் 'மரகத நடராஜர்' சன்னதி உள்ளது. வருடம் முழுவதும் சந்தனக்காப்பிலேயே தான் நடராஜர் காட்சி அளிப்பார். ஒரு நாள் தவிர, ஆம். ஆருத்திரா தரிசனத்தின் போது மட்டும், மரகத நடராஜரை தரிசிக்கலாம், பச்சை நிறத்தில். மிகவும் சிறப்பு மிக்க ஆலயம்.
இப்போது மரகத லிங்க அபிஷேகத்தை பற்றி மேலும் சில விபரங்களை தெரிந்து கொள்ளலாம். சிவபெருமானுக்கு 'அபிஷேகப்பிரியர்' என்று ஒரு பெயர் உண்டு. அதிலும், தேன், சந்தனம், மஞ்சள், புஷ்பம், விபூதி, பஞ்சமிருதம், பன்னீர் ஆகியவற்றால் அபிஷேகம் செய்யும்போது, நமக்கு வரங்களை அள்ளிக்கொடுப்பார் அல்லவா!
லிங்கத்திலிருந்து வெளிப்படும் மரகதத்தின் பச்சை ஒளியை, இந்த அபிஷேகத்தின் போது நாம் கண்கூடாக பார்க்கலாம். இந்த ஒளி, நமது மனதிற்கு அமைதியையும், தெளிவையும், ஒழுக்கத்தையும், தர வல்லது.
மரகதம், ஜோதிடவியலின் படி, புதன் கிரகத்திற்கு சொந்தமானது. 'புதன்' ஞானகாரகன் என்றும் சொல்லப்படுகிறது. இந்த அபிஷேகம் செய்யும்போது, உடலின் நரம்புமண்டலம் சீராவதாக நம்ப படுகிறது. உடலில் உள்ள நச்சு தன்மைகள் நீங்கப்பெற்று, உயிர்தன்மை மேம்படுவதாகவும் நம்ப படுகிறது.
இப்படியொரு சிறப்பு மிக்க, சிவபெருமானின் அம்சமான மரகத லிங்கத்திற்கு, ருத்ர ஏகாதசியின் போது அபிஷேகம் செய்வது மிக உயர்ந்தது அல்லவா! சிவபெருமானின் அருளும், மரகதத்தின் பயனும், ருத்ர ஏகாதசி தினமும் ஒருங்கே இணைந்து நமக்கு எல்லா வரங்களையும் தரும் என்பது உறுதி.
வாத்தியார் சுவாமி, மரகத லிங்க அபிஷேகத்தோடு, அன்றைய தின நிகழ்ச்சிகள்ளெலாம் முடித்து வைத்தார். மறுநாள் காலை ஒன்பது மணிக்கு முன்னதாகவே மீண்டும் கோவிலுக்கு, சீர் தட்டுகளோடும், தாலி, வேஷ்டி, புடவை சகிதம் வரச்சொல்லிவிட்டு விடை பெற்று கொண்டார். பின்னர், நாங்கள் அனைவரும் அமிர்தகடேஸ்வரர், மற்றும் அபிராமி அம்பாள் சன்னதிக்கு சென்று மகிழ்வோடு தரிசனம் செய்துவிட்டு மீண்டும் நாங்கள் தங்கியிருந்த விடுதிக்கு சென்றோம்.
"அண்ணா, இரவு சிற்றுண்டி தயார், எல்லாரும் போகலாம்" என்று வெங்கி சொன்னதுதான் தாமதம், அடுத்த ஐந்து நிமிடத்தில் எல்லாரும் பந்தியில் ஆஜர் ஆகிவிட்டோம்.
சூடாக இட்லி, சட்னி, சாம்பார், சப்பாத்தி, குருமா, அரிசி உப்புமா, மிளகு பால் எல்லாம் தாயாராக இருந்தன. அனைத்தையும் ஒரு கை பார்த்துவிட்டு நங்கள் எல்லாரும் அவரவர்கள் அறைகளுக்கு திரும்பினோம். இளவட்டங்கள் மட்டும், "அப்பா, நாங்க ஊர் சுற்றிவிட்டு போட்டோ ஷூட் எல்லாம் முடிச்சுட்டு வர்றோம்" என்று கூறி கிளம்பி போனார்கள்.
மண்டபத்தில் மொத்தம் பதினாறு கலசங்கள் வைக்கப்பட்டிருந்தன. அவை எதற்கு? நாளை பார்க்கலாம்.
(தொடரும்)
Comments
Post a Comment