கல்யாணமாம் கல்யாணம், அறுபதாம் கல்யாணம்! (பாகம்-2 )

சரி, அது என்ன அறுபதாம் கல்யாணம்? நாற்பது, ஐம்பது இந்த வயதுக்கெல்லாம் கல்யாணம் வேண்டாமா? 

"உக்கும்...சில பேருக்கு நாற்பது வயதில்தான் முதல் கல்யாணமே நடக்கிறது..." என்று நீங்கள் முணுமுணுப்பது தெரிகிறது. அறுபதுக்கு ஒரு சில முக்கியத்துவத்துவங்கள் இருக்கின்றன. ஒன்று ஒன்றாக பார்ப்போம்.

நமது தென்னிந்திய கணக்கின்படி, ஒரு மனிதனின் முழு ஆயுள் என்பது நூற்று இருபதாம். 

"கிழிஞ்சிது, போங்க....அறுபதுக்குள்ளேயே, ஆஞ்சியோ, டயாலிசிஸ், சர்க்கரை, உப்பு, புளி என்று நெருக்கடிகள் தாங்க முடியல... இதுல நூற்று இருப்பதா. ஆள உடுறா சாமி" என்கிறீர்களா. கவலையை விடுங்க, இந்த காலத்துக்கு அது செல்லாது. அறுபதாம் கல்யாணத்தின் முக்கியத்துவத்தை சொல்லத்தான் இந்த கணக்கு. நூற்று இருபதில் பாதி அறுபது அல்லவா? அறுபது வயதை கடந்தால், ஆயுளில் பாதியை வெற்றிகரமாக (சிரிக்காதீர்கள்) கடந்துவிட்டதை அறிவிப்பது ஒரு காரணம். மீதி பாதியை நல்லபடியாக கடக்க வேண்டும் என்று இறைவனை வேண்டுவதும், நற்செயல்களில் ஈடுபடுவதும் மிக முக்கியம்.



இன்னொரு காரணமும் இருக்கிறது. தமிழ் வருடங்களின் மொத்த எண்ணிக்கை அறுபது. 'பிரபவ' வருடத்தில் துவங்கி 'அட்சய' வருடத்தில் முடிகிறது. ஒவ்வொரு மனிதனும் இந்த ஆண்டுகளில் ஏதாவது ஒரு வருடத்தின் ஏதோ ஒரு நாளில் (திதி) பிறந்திருப்போம். அதே வருடமும், அதே நாளும் மீண்டும் ஒருமுறை வருவது என்பது, இந்த அறுபதாம் வயதில்தான். அதாவது நாம் மீண்டும் ஒரு புதிய பிறவியை எடுத்தது போல.

உடனே, வாயில் விரலை சூப்பிக்கொண்டு, தவழ்ந்து வந்தால் பிரம்படி கிடைக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். தொடர்ந்து பல காரணங்களை, அடுத்தடுத்த பகுதிகளில் பார்க்கலாம். இப்போதைக்கு என் கதைக்கு வருகிறேன்.

என் குழந்தைகள் (மகள், மகன், மருமகன்) இவர்கள் ஏற்கனவே முடிவு செய்து வைத்திருந்தார்கள் போலும், தங்கள் கண்முன் காணாத ஒரு நிகழ்ச்சியை (ஆமாம்... பெரிய 'ஆபரேஷன் சிந்தூர்' என்று முனகுகிறீர்கள்) மீண்டும் நிகழ்த்தி மகிழ வேண்டுமென்று.


"தம்பியுடையான் பகைக்கு அஞ்சான்" என்ற ஒரு பழமொழியை கேள்விப்பட்டு இருப்பீர்கள். அப்படி ஒரு பிறவி தான் என் அத்தை மகன், கோயம்பத்தூரில் வசிக்கிறார். வேறென்ன...இந்த நால்வருக்குள்ளே ஒரு கலந்துரையாடல் நடந்து (இந்த கலந்துரையாடலை பற்றி எனக்கு ஒரு துளியும் தெரியாது என்பதே நிஜம்), அதன் தொடர்ச்சியாக திடீரென்று ஒரு நாள் காலை சுமார் 12 மணிக்கு அவரிடமிருந்து ஒரு போன் கால் ஒலித்தது.

"அண்ணா, நான் இப்போ திருக்கடையூரில் இருக்கேன், எனக்கு சில தகவல்கள் வேணும், பேசலாமா?"


எனக்கு ஒன்றும் புரியவில்லை, நான் எப்பவும் போல அப்பாவியல்லவா!


அப்படி என்ன கேட்டார்? நாளை பார்க்கலாம்.


(தொடரும்) 

Comments

Popular posts from this blog

Appreciate what you have - Good story

Never say, "Never Again"