I’m back

கல்யாணமாம் கல்யாணம், அறுபதாம் கல்யாணம்!


(பாகம்-1 )


அட, பையனுக்கு கல்யாண தசை வந்தாச்சு....அம்மா நாள் குறிக்க ஆரம்பித்து விட்டார்.


"டேய், ரங்கா, வைகாசி மாசம் இருபத்தி ஆறு"

"புரியலியேமா" எப்பவும்போல அப்பாவியாக நான் வினவ, 

"அதாண்டா வர ஜூன் ஏழாம் தேதி, கடக லக்கினம்" என்று மீண்டும் தொடர்ந்து கொண்டே போனார். 

"ஏம்மா, என்ன விளையாடறியா, அப்படி எனக்கென்ன வயசாயிடுச்சு?"

"ஏதே...." என்று வடிவேலு போல என்னை முறைத்தார்.

"அட, அதிலம்மா, ஜூன் முப்பதுதான், நான் ரிட்டையர் ஆகபோறேன். அதுக்கப்பறம் பாத்துக்கலாமே" என்று இழுத்தேன்.

"அதெல்லாம் சரி வராது, முகூர்த்தம் முக்கியம்"

இப்போ, "ஏதே..." என்று நான் வடிவேலு ஆனேன். இதுவே அறுபதாம் கல்யாணம், அதுவும் அதே பொண்ணோட....(ஹீ...ஹீ... ஒரு சபலம்தான்) இதுக்கு முகூர்த்தம் ரொம்ப முக்கியம், சும்மா இரும்மா, குழந்தைகள்லாம் வர வேண்டாமா?" ஓரக்கண்ணால், என் மனைவியை நோட்டமிட்டேன்.


"உக்கும்" என்று அவள் முகவாயை அசைத்ததிலேயே புரிந்து கொண்டேன்.


இப்போது அம்மா புரிந்துகொண்டார் போலும், "அதுவும் சரிதான், அறுபதாம் கல்யாணமே குழந்தைகள் பண்றது தானே. அவா இல்லாம எப்படி பண்றது" 

"சரி அப்போ ஜூலை மாசத்துல நாள் பாக்கறேன்" என்று பஞ்சாங்கத்தை தூக்கி கொண்டு நகர்ந்தார்.


மெல்ல, என் மனைவியின் பக்கம் திரும்பியது தான் தாமதம், என் முகவாயில் ஒரு குத்து, "கிழவனுக்கு இன்னொரு பொண்ணு வரணுமா, ஜாக்கிரதை" என்று மிரட்டி விட்டு போனாள்.


பிறகு என்னுடைய மகள், மகன், மருமகன் (மூவரும் வெளி நாட்டில் உள்ளனர்) வரும் தேதியை குறித்து கொண்டு, ஜூலை ஏழாம் தேதி, ஷஷ்டி அப்தபூர்த்தி, என்கிற அறுபதாம் கல்யாணம் பண்ணுவதாக முடிவு செய்யப்பட்டது.


மீண்டும் என்னுடைய அம்மா, "நம்ப சம்பிரதாயத்துல, நம்ப வீட்டிலேயே, இல்லேன்னா ஒப்பிலியப்பன் கோவிலிலேயோ பண்ணனும்" என்றார். 


"அம்மா, ரெண்டும் இப்போதைக்கு சரிப்பட்டு வராது. நான் என்னோட பிரெண்ட், சங்கரன் கிட்ட பேசினேன், அவன் போன மாசம்தான் திருக்கடையூர்ல போயி பண்ணிட்டு வந்தானாம். ரொம்ப சௌகரியமா இருந்ததுன்னு சொன்னான். எனக்கும் அதுதான் சரின்னு படுது" என்றேன்.


"நாம வைஷ்ணவா, திருக்கடையூர் சைவ சம்பிரதாயமாச்சே" என்றார் அம்மா.


அந்த பிரச்சனைய அமிர்தகடேஸ்வரரும், ஒப்பிலியப்பனும் சரி பண்ணிக்கட்டும் என்று எனக்குள் கூறிக்கொண்டு, என்னுடைய முடிவை தெளிவாக கூறிவிட்டு நகர்ந்தேன்.


இப்படியாக, எனக்கும்................., என் மனைவிக்கும் ( என்ன பண்றது) அமிர்த கடேஸ்வரர் சன்னதியில், ஷஷ்டி அப்தபூர்த்தி என்கிற அறுபதாம் கல்யாணம் பண்ணுவது என்று குழந்தைகளாலும், பெரியோர்களாலும் ஒரு மனதாக முடிவு செய்யப்பட்டது.


(குறிப்பு: இந்த தொகுப்பில், நான் அறிந்து கொண்ட பல விபரங்களை உங்களோடு பகிர்ந்து கொள்ள தயாராக உள்ளேன். உங்களின் மேலான ஆதரவோடு. 

நக்கல், நையாண்டிகள் நகைச்சுவைக்காக மட்டுமே சேர்க்கப்பட்டவை. தவறாக கருத வேண்டாம்.)


தொடரும்...

Comments

Popular posts from this blog

Travelogue - Leh, Ladakh