கல்யாணமாம் கல்யாணம், அறுபதாம் கல்யாணம்! (பாகம்-11 )

 என் நண்பர், தம் உறவினர் ஒருவரின் ஷஷ்டி பூர்த்தியில், இருபத்து நாலு கலசங்கள் பார்த்ததாக கமெண்ட்டில் கூறியிருந்தார். 24 ன் முக்கியத்துவம் என்ன என்று இப்போது பார்க்கலாம். அன்னை அபிராமியின் மந்திரங்களில் மிக முக்கியமானது 'லலிதா சஹஸ்ரநாமம்' ஆகும். இந்த பூஜையில் மிகவும் போற்றத்தக்கதாக விளங்குவது 'சுஹாசினி பூஜை.' இதன் அடிப்படையில்தான், வீட்டிற்கு வரும் சுமங்கலிகளுக்கு மஞ்சள், குங்குமம் போன்றவை வழங்கப்படுகிறது. லலிதா ஸஹஸ்ரநாம ஸ்தோத்திரத்தில் இருபத்து நான்கு பரிகார மந்திரங்கள் சொல்லப்பட்டுள்ளன. அதன் பலன்களை கீழே பார்க்கலாம்.

1 . காரிய சித்தி, 2 . நியாயமான ஆசைகள் நிறைவேற, 3 . நோயிலிருந்து விடுதலை, 4 . மாங்கல்யபலம், 5 . சிறந்த கல்வி, 6 . பூர்வ ஜென்ம கர்மாவிலிருந்து விடுதலை, 7 . இறை பக்தி, 8 . பயம் நீங்க, 9 . நிறை செல்வம், 10 . குடும்ப அமைதி, 11 . தீயவை அழிய, 12 . கோபம் நீங்க, 13 . அகால மரணம் ஏற்படாமலிருக்க, 14 . துன்பங்கள் நீங்க, 15 . சுக வாழ்வு பெற, 16 . கண் திருஷ்டி நீங்க, 17 . சுபமங்களங்கள் உண்டாக, 18 . ஆன்மீக வளர்ச்சி, 19 . உடல் வலிமை, 20 . தொழில் வளர்ச்சி, 21 . வழக்குகள் ஈடேற, 22 . லட்சியம் நிறைவேற, 23 . நீண்ட ஆயுள், 24 . அம்பிகையின் அபயகரம் பற்ற.

சுஹாசினி பூஜையும் இந்த ஷஷ்டியப்தபூர்த்தி அன்று நடத்த படுகிறது. நண்பர் கூறிய இருபத்து நான்கின் அடிப்படை இதுவாக இருக்கலாம்.


இப்போது என் கதை. கலச கும்பங்களோடு, என்னை சேர்ந்தோர் அனைவரும் தயாராக எங்களை பின் தொடர்ந்து வந்தனர். கோவில் பிராகாரத்தின் பின் புறம், இரண்டு நாற்காலிகளை போட்டு, அமர செய்து, வாத்தியார் சுவாமி மந்திரங்கள் சொல்ல சொல்ல, ஒவ்வொருவராக எங்கள் தலையில் தாம் வைத்திருந்த கும்பத்திலிருந்த தண்ணீரை ஊற்றி அபிஷேகம் செய்தனர். ஜூலை மாத சுளீர் வெயிலுக்கு ரொம்ப இதமாகவும், குளிர்ச்சியாகவும் இருந்தது. இதில் என்ன ஓரவஞ்சனை என்றால், என் பக்கம் சொற்ப அளவே தண்ணீர் ஊற்றினார்கள். நான் என் தலையை வளைத்து, அபிஷேகம் செய்துகொண்டேன் என்றுதான் சொல்ல வேண்டும். 

அனைவரும் அபிஷேகம் செய்து முடித்தவுடன், நாங்கள் ஈர ஆடைகளை மாற்றிக்கொண்டு அவற்றை வாத்தியார் சொன்னது போலவே அங்கேயே விட்டு வந்து விட்டோம். அந்த துணிகளை, பணியாளர்கள் எடுத்து சென்று விடுகிறார்கள். 

மீண்டும் மண்டபத்துக்கு வந்து அமர்ந்து, 'யஃயோபவீதம் ' எனப்படுகிற புது பூணூல் அணிந்து கொண்டு மற்ற பூஜைகளை தொடர்ந்தோம். பின்னர், வாங்கி வைத்திருந்த திருமாங்கல்யத்தை, ஒரு பெரிய தாம்பாளத்தில் வைத்து மந்திரங்கள் ஓதி கொடுத்தார்கள். மாங்கல்ய தாரண மந்திரம் சொல்லப்படவே, நான் தாலியை எடுத்து என் மனைவியின் கழுத்தில் கட்டி, ஒரு முடிச்சு போட்டு விட்டு, சுற்றி முற்றி பார்த்தேன். "ம்ம்ம், மூணு முடிச்சு போடணும், எல்லாம் மறந்து போச்சா?" என்று சற்றே நகைப்போடு வாத்தியார் சொல்ல, மீதி இரு முடிச்சுகளை போட்டு முடித்தேன். 

என் எண்ணங்கள், முப்பத்துமூன்று வருடங்கள் பின்னோக்கி சென்றது. அந்த அறியாத வயதில் கட்டிய தாலிக்கும், இப்போது எல்லாம் (அப்படியா?) அறிந்துகொண்டு கட்டும் தாலிக்கும், புறப்பொருளில் மாற்றமில்லை, ஆனால், அகப்பொருளில் நிச்சயமாக மிகப்பெரிய மாற்றம் இருந்தது. என்னை முழுமையாக ஏற்றுக்கொண்டு, இல்வாழ்க்கையில் ஈடுபட்டு, பல இன்ப-துன்பங்களெல்லாம் கடந்து, என் நிழலைபோல தொடர்ந்து வந்து என்னையும், என்னை சேர்ந்தோரையும் பேணிக்காத்து வந்திருக்கும் என் மனைவியின் புனிதமான உறவை என்னவென்று சொல்லுவேன். வெறும் அறுபதாம் கல்யாணம் என்று சொல்ல முடியவில்லை. வேறு வார்த்தையை தேடுகிறேன். கிடைத்தவுடன் உங்களோடு பகிர்கிறேன்.







(தொடரும்)

Comments

Popular posts from this blog

Travelogue - Leh, Ladakh