கல்யாணமாம் கல்யாணம், அறுபதாம் கல்யாணம்! (பாகம்-4)
அறுபதாம் கல்யாணத்துக்கு நான்காவது முக்கிய காரணம், முதல் திருமணம் முடிந்து கிட்டத்தட்ட முப்பது ஆண்டு இல்வாழ்க்கையில் வெற்றிகரமாக பயணம் செய்து, மீண்டும் திருமணம் செய்து, அனேகமாக அதே சடங்குகளை நிகழ்த்தி பார்க்கும் போது மனதில் தோன்றும் உணர்வுகள் ஏராளம். அந்த உணர்வுகளை ஏற்படுத்தும் வகையில் தான் இந்த திருமணம் நடைபெறுகின்றன.
இந்த திருமணத்தின் போது, பல வகையான ஹோமங்கள் நடக்கும். இவை அனைத்தும் “பிராயச்சித்த கர்மா” என்று அழைக்கப்படும் பிறவிக்கடன்களை (இதற்கு வட்டி எல்லாம் கிடையாது) தீர்த்து நம்மை ஆன்மீக வழியில் முன்னேற செய்யுமென்று நம்பப்படுகிறது.
எனது அத்தை மகன் வெங்கியுடன் பேசி, ‘இரண்டு காலம்’ என்று முடிவு செய்து விட்டேன். பிறகு என்ன? மற்ற வேலைகளை துவங்க வேண்டியதுதான் பாக்கி. நானும், என் மனைவியும் வெங்கியுடன் திருக்கடையூர் சென்றோம். முதலில் ஸ்வாமி தரிசனம் செய்து விட்டு பிறகு அறுபதாம் கல்யாணத்தை செய்து தர, ஏற்கனவே பேசி வைத்திருந்த ஒரு வைதீக வித்தகர் ஒருவரை சந்தித்தோம்.
அமிர்தகடேஸ்வர ர் ஆலயத்தின் சுற்றி உள்ள வீதிகள் அனைத்திலும் இது போன்ற நிகழ்ச்சிகள் நடத்தி தர ஏராளமான குழுக்கள் இருக்கின்றன. நமக்கு என்ன தேவையோ அதை செய்து முடிக்க இவர்களை தொடர்பு கொண்டாலே போதுமானது. அமிர்தகடேஸ்வர்ரும், அபிராமி அம்பாளும் இவர்களுக்கு அருள் புரிந்து கொண்டிருக்கிரார்கள், எனபதால் நாம் எது பற்றியும் தேவையற்ற சிந்தனை கொள்ள தேவையில்லை.
நமக்கும் கடவுளின் பரிபூ்ரண அருள் கிடைக்கும் என்பது உறுதி.
ஏற்கனவே, குறைந்த பட்சம் இருபதாயிரம் ரூபாயிலிருந்து, சில லட்சம் வரை செலவு ஆகும் என்று கூறியிருந்தேன் அல்லவா, எங்களுக்கு இரண்டு கால பூஜைக்கு ஐம்பதாயிரம் ரூபாய் என்று பேசி முடித்து, முன் பணம் செலுத்தி விட்டேன். இந்த தொகையில் வைதீக செலவு அனைத்தும் அடக்கம். தம்பதிகள் மாலைகள் உட்பட. நாங்கள் சீர் பட்சணம், தாலி மட்டும் கொண்டு சென்றால் போதும். (இவை இன்றைய நிலவரம்)
‘அட, பரவாயில்லையே’ என்று இப்போதே வாயை பிளக்காதீர்கள். இவை வைதீக செலவு மட்டும் தான்.
“வேறு என்னென்ன செலவுகள், சீக்கிரம் சொல்லி தொலையும்” என்று வசை பாடாதீர்கள். அடுத்த பகுதிகளில் சொல்கிறேன்
(தொடரும்)
Comments
Post a Comment