நாகர் கோவிலிலிருந்து நாகாலாந்து வரை
கா லை பதினொரு மணியிலிருந்தே செல் போன் ஒலிக்காக காத்திருந்தேன். இரண்டு மணி நேர காத்திருப்பிற்கு பின் ட்ரிங்கியது என்னுயிர் (உயிர் வாங்கும் பல சமயங்களில்) செல் போன் . " அப்பா ! எங்க ப்ராஜெக்ட் நேஷனல் சயின்ஸ் காங்கிரஸ்சுக்கு செலக்ட் ஆயிடுச்சு" அந்தப்பக்கத்தில் (நாகர் கோவில்) இருந்து கூவியது என் மகள் தான். "அப்படியா, ....... கங்க்ராட்ஸ்." தெறித்து வந்து விழுந்தன என் வார்த்தைகள். வயிற்றுக்குள் இனம் புரியாத மகிழ்ச்சி பறவைகள் சிறகடித்தன . மீண்டும் மீண்டும் அந்த உணர்வுகளை அசை போட்டு மகிழ்ந்தேன். "அப்பா, வர்ற இருபத்தி நாலாம் தேதி நாகாலாந்து போகணும். மொத்தம் முப்பது ப்ராஜக்ட் செலக்ட் பண்ணி இருக்காங்க. நம்ம மாவட்டத்திலிருந்து நான் மட்டுந்தான்........" மற்ற வார்த்தைகளெல்லாம் ஹீனக்குரலிலேதான் எனக்கு கேட்டன. எனது மனம் கோட்டை கட்ட ஆரம்பித்தது. 'நாகாலாந்து இந்தியாவின் வட கிழக்கு மாநிலம், என்னுடைய பல வருடக்கனவு. பலமுறை வட இந்தியாவிற்கு சென்றிருந்தாலும் கல்கத்தா தாண்டியது இல்லை. இதுதான் சரியான வாய்ப்பு. எப்படியாவது சுற்றுலா சென்று வரவேண்டும்' என்று எண்ணின...