Posts

Showing posts from 2026

கடவூர் டு காத்மாண்டு! (பாகம்-7)

Image
நேற்றைய தினம் நேபாளத்தில் நிகழ்ந்த அந்த துயரமான இயற்கை பேரழிவு சம்பவம் எனது நெஞ்சத்தை உலுக்கியது. இந்த துயர சம்பவத்தில் உயிரிழந்த அனைவருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள். ஏன் இந்த தேசத்திற்கு மட்டும் இவ்வளவு சோக நிகழ்வுகள் தொடர்ந்து வருகின்றன? என்ற கேள்வியோடு இந்த தொடர் கட்டுரையை எழுதுகிறேன். நாங்கள் அடுத்து பயணம் செய்த இடம், ஸ்வயம்பு மகாசைத்யா. காத்மாண்டு பள்ளத்தாக்கின் பரந்த காட்சியைத் தழுவியபடி, மரங்கள் அடர்ந்த குன்றின் உச்சியில் “ஸ்வயம்பு மகாசைத்யா” அமைதியாக எழுந்து நிற்கிறது. நேபாள மக்கள் அன்புடன் “குரங்கு கோயில்” என்று அழைக்கும் இத்தலம், வரலாற்றுச் சின்னம் மட்டுமல்ல; புராணமும் பக்தியும் உயிரோடு நடமாடும் புனிதமான இடம். உச்சியை நோக்கி ஏறத் தொடங்கும்போது, 365 கல் படிக்கட்டுகள் நம்மை வரவேற்கின்றன. ஆண்டின் ஒவ்வொரு நாளையும் குறிக்கும் இந்தப் படிகள், உடலை மட்டுமல்ல, மனதையும் மெதுவாக உயர்த்துகின்றன. வழியெங்கும் வண்ணமயமான பிரார்த்தனைக் கொடிகள் காற்றில் படபடக்க, பழமையான கல் சிற்பங்கள் காலத்தின் கதைகளைச் சொல்கின்றன. இடையிடையே தோன்றும் குறும்புக்கார ‘ரீசஸ்’ என்ற குரங்குகள் சுற்றித் திரிகின்றன “...

கடவூர் டூ காத்மாண்டு!! (பாகம்-6)

பௌத்தநாத் கோவில் சுற்றி உள்ள கடைகளில் ஒன்றில் நேபாளி தொப்பி ஒன்றை இரு நூறு ரூபாய்க்கு வாங்கி, கொடுப்பதற்கு பணம் இல்லாமல் தவித்து பின்னர், ATM தேடி அலைந்து ஒரு வழியாக பணத்தை எடுத்து கொடுத்து விட்டு “போதுமடா சாமி” என்று ஆகிவிட்டது.  அடுத்து நாங்கள் சென்ற இடமும் மிகப்பிரபலமானது. அதன் பெயர்  படான் தர்பார் சதுக்கம். படான் தர்பார் சதுக்கம், யுனெஸ்கோ (UNESCO) உலக பாரம்பரியத் தலமாகவும், நேவாரி கட்டிடக்கலையின் மிகச்சிறந்த படைப்பாகவும் திகழ்கிறது. நேபாளத்தின் லலித்பூரில் அமைந்துள்ள இது, மல்ல வம்ச காலத்தில் கட்டப்பட்ட பழமையான அரச முற்றங்கள், புனிதமான இந்து மற்றும் பௌத்த ஆலயங்கள் மற்றும் 16 முதல் 18-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த நேர்த்தியான கல், மரம் மற்றும் உலோகச் சிற்பங்களைக் கொண்டுள்ளது. இதன் அனேக விவரங்களை தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் நமக்கு நிச்சயமாக ஒரு உள்ளூர் வழிகாட்டி தேவை. அதற்கு அலைய தேவையில்லை. கட்டணம் வசூலிக்கப்படும் இடத்தில் அரசு அனுமதி பெற்ற ஆங்கிலம் பேசும் ‘கெய்டு’கள் இருக்கிறார்கள். இரண்டாயிரம் ரூபாய் கட்டணம் வசூலிக்கிறார்கள். மூன்று மணி நேரத்தில் முழுவதும் சுற்றி காட்டி வி...

கடவூர் டு காத்மாண்டு! (பாகம் - 5)

Image
பசுபதிநாத் கோயிலில் ஒரு பண்டிதரை கொண்டு ஓரிரு சிவ, காலபைரவ வழிபாடுகளை முடித்துக்கொண்டு பின்னர் பசுபதிநாதரை தரிசனம் செய்து விட்டு அங்கிருந்து புறப்பட்டு எங்கள் அடுத்த ஸ்தலமான பௌத்தநாத் மடாலயத்துக்கு சென்றோம்.  பௌத்தநாத் கோவில், மிகப்பெரிய கோள வடிவ ஸ்தூபியை கொண்டுள்ளது. உலகின் மிகப்பெரிய பௌத்த கோயிலாகவும், யுனெஸ்கோவின் பாதுகாப்பு பெற்ற பாரம்பரிய தலமாகவும் விளங்குகிறது. இந்த கோயிலுக்கு நான்கு வாயில்கள் உள்ளன. இதன் ஸ்தூபியின் நான்கு திசைகளிலும் இரண்டு பெரிய கண்கள் வரையப்பட்டிருக்கிறது. இந்த கண்கள் அறிவையும், ஆற்றலையும் சித்தரிப்பதாக நம்பப்படுகிறது. புத்த கோயிலின் வடிவ அமைப்பை பல்வேறு மண்டலங்களாக உருவாக்கி இருக்கிறார்கள். அதாவது, ஒரு “ட்ரோன்” கேமராவினால் உச்சியிலிருந்து பார்த்தால் எப்படி தெரியுமோ, அதைதான் மண்டலங்கள் என்று சொல்கிறார்கள். கிட்டத்தட்ட, நமது இந்து கோயில்களில் நான்கு பிராகாரங்கள் என்று சொல்கிறோமல்லவா! அதே போலத்தான் மண்டலங்களும். மனித வாழ்வில் நாம் பல கட்டங்களை கடந்து சென்று முடிவில் இறைவனை அடைகிறோம் என்று இந்து சமயமும், நிர்வாணநிலையை அடைகிறோம் என்று பௌத்த சமயமும் சொல்கிறது....

கடவூர் டு காத்மாண்டு! (பாகம்-4 )

Image
பபெரா ஓட்டலில் காலை உணவு மட்டும் இலவசம் (காம்ப்ளிமென்ட்டரி), ஆதலால் முதல் நாள் இரவு சிற்றுண்டியை பபேராவிலேயே, ஒரு மணிநேர காத்திருப்புக்கு பின் உண்டு களித்தோம். நேபாள் உணவு முறையில் நிறைய 'தாய்' ஐட்டங்கள் இருக்கிறது. எல்லாவிதமான 'மோ-மோ' வும் கிடைக்கிறது. இனிப்பு வெஜ் ரைஸ் (அநேகமாக காஷ்மீரி வகை), சப்பாத்தியும், தோசையும் சர்வதேச உணவாகிவிட்டதால் எங்கும் கிடைக்கும். ஹோட்டலில் மேல் தளத்தில் உள்ள டைனிங் ஹால் என்பதால், மலைத்தொடர்களை ரசித்துக்கொண்டே இயற்கை காற்றையும் வாங்கிக்கொண்டே சாப்பிட முடிந்தது. இதெல்லாம் நம்ம ஊரில் முடியுமா? செயற்கை குளிரூட்டப்பட்ட அறை, அல்லது மாசுபட்ட காற்றுடன் கூடிய வெளி சூழல் என்றே பழகிவிட்டோம் இல்லையா? வருடத்துக்கு ஒரு முறையாவது இது போன்ற இடங்களுக்கு சென்று இயற்கையை ரசிக்க வேண்டும் என்று உறுதி மேற்கொண்டேன்.  இமய மலைப்பகுதியாதலால், இருள் சூழ எட்டு மணியாகிறது. அதே போலவே காலை பொழுதும் சீக்கிரமே விடிந்து விடுகிறது. முதல் நாள் தூக்கமின்மையால், அன்று இரவு அருமையான தூக்கம் சொக்கியது. காலைபொழுதும் சீக்கிரமே வந்து விட, இரண்டாம் நாள் பயணத்துக்கு தேவையானவற்றை அள்...

கடவூர் டு காத்மாண்டு!! (பாகம்-3 )

Image
விடியல்காலை நாலரை மணிக்கு மும்பை விமானநிலையத்துக்கு வந்து சேர்ந்தோம். தூக்கக்கலக்கம் இருந்ததால், அவரவர்கள் ஒரு சாய்வு நாற்காலியை பிடித்து வழுக்கியபடியே இளைப்பாறினோம். எங்களுக்கு காத்மாண்டு செல்லும் அடுத்த விமானம் 11 :30 க்கு தான் என்பதால் நிதானமாக காலைக்கடன்களையும் சிற்றுண்டியையும்  முடித்துக்கொண்டு அறிவிக்கப்பட்ட வாயிலுக்கு சென்றடைந்தோம். விமானம் 'ஹவுஸ் புல்.' யாத்திரிகர்கள் சிலரும், இடம்பெயந்தோர் பலரும் விமானத்தை நிரப்பியிருந்தனர். நேபாளத்துக்கு இவ்வளவு இடம்பெயந்தோரை நான் எதிர்பார்க்கவில்லை. பணி நிமித்தமாக இந்தியாவுக்கு நேபாளிகள் நிறையபேர் வந்து போகிறார்கள் என்பது கண்கூடாக பார்க்க முடிந்தது.  நாங்கள் பயணித்த 6 E 1157 இண்டிகோ விமானம் இரண்டரை மணிநேரம் சிறகடிக்க பிறகு, சில நிமிடங்கள் முன்னதாகவே, 'த்ரிபுவன் சர்வதேச விமான' நிலையத்தை அடைந்தது. இமய மலையின் அழகை மேலிருந்து ரசிப்பது ஒரு அழகுதான் என்றாலும், மேகமூட்டம் அதை தடுக்கத்தான் செய்தது. 'சர்வதேச விமான நிலையமாயிற்றே!' என்றெல்லாம் கற்பனை கோட்டை கட்ட வேண்டாம். மிக சிறிய நமது இரண்டாம் நிலை நகரங்களின் விமான நிலையம் அள...

OTT Movie review "Thiru Manikam"

Image
 சமீபத்தில் "திரு.மாணிக்கம்" என்று ஒரு திரைப்படத்தை OTT ல் பார்த்தேன். 'சமுத்திரக்கனி' நடித்தபடம் என்பதால் எனக்கு ஒரு ஈர்ப்பு தன்னிச்சையாகவே இருந்ததது. இந்த படம் Z5 ல் வெளிவந்துள்ள படம். சுய-தர்மத்தை பற்றிய கதை. இந்த காலத்தில் இப்படி ஒரு படமா! என்று என்னை ஆச்சார்யத்தில் ஆழ்த்தியது.  மாணிக்கம், ஒரு சாதாரண குடும்பஸ்தர். குமுளியில் ஒரு 'லாட்டரி சீட்டு' வியாபாரம் செய்யும் கடை வைத்திருக்கிறார். மனைவி, இரண்டு பெண் குழந்தைகள். இரண்டாவது குழந்தைக்கு பேச்சுகுறைபாடு. திக்குவாய்ப்போல. அனைத்து நடுத்தர குடும்பத்தினருக்கும் உள்ளது போலவே இவர் குடும்பத்துக்கும் சில பொருளாதார சிக்கல்கள். மனைவியின் முழு ஒத்துழைப்போடு சவால்களை எதிர் கொள்கிறார். இவருடைய கடைக்கு ஒரு முதியவர் (பாரதிராஜா) வருகிறார். அவருக்கும் பல பொருளாதார சிக்கல்கள். நிறைமாத கர்ப்பிணியான தன்னுடைய மகளை, வரதட்சிணையை காரணம் காட்டி விரட்டி விட்டு, தன் மகனுக்கு வேறு ஒரு பெண்ணை மணம் முடிக்க முயலும் முதியவரின் சம்பந்தி. இந்நிலையில் மாணிக்கத்தின் கடையில் லாட்டரி சீட்டு வாங்குகிறார் அந்த முதியவர். சீட்டுக்கு பணம் கொடுக்க தன...

கடவூர் டூ காத்மாண்டு! (பாகம்-2 )

Image
'தாமஸ் குக்' நான்கு பகல், மூன்று இரவு பேக்கேஜ் என்று முடிவு செய்து, அவர்களை தொடர்பு கொண்டோம் (இவை அனைத்தும் 'தாமஸ் குக்' வலைத்தளத்திலேயோ அல்லது 'மொபைல் ஆப்' மூலமாகவோ செய்ய முடியும்) நபர் ஒருவருக்கு சுமார் ஐம்பதாயிரம் ரூபாய் ஆகும் (சென்னையிலிருந்து காத்மாண்டு விமான சீட்டு உட்பட). ஆக, ஐந்து பேருக்கான தொகை இரண்டு லட்சத்து ஐம்பதாயிரம். இந்த தொகையில் தொண்ணுறு சதவீதத்தை புக்கிங் செய்யும்போது செலுத்த வேண்டும்.  (குறிப்பு: உங்களிடம் கிரெடிட் கார்ட் அல்லது டெபிட் கார்டு-லவுஞ் சர்வீஸ் இருக்கும் பட்சத்தில் இந்த பயண தொகையை எல்லாம் அந்த கார்டின் மூலம் செலுத்துவது உபயோகமுள்ளது. விமான நிலையத்தில் உள்ள லவுஞ் சேவையை பயன்படுத்தி இரண்டு ருபாய் செலவில் உணவு மற்றும் தங்கும் வசதி முதலியவற்றை பெறலாம்) நேபாளம், அந்நிய தேசம் என்பதால், நம்முடைய பாஸ்போர்ட், வோட்டர் ஐ.டீ கார்ட், புகைப்படம் போன்றவை தேவை படுகிறது. ஆதார் கார்டு உபயோகமில்லை. இந்த நகல்களை ஈமெயில் மூலமாக அவர்களுக்கு அனுப்ப வேண்டும். மற்றவற்றை அவர்கள் பாத்துக்கொள்வார்கள். நேபாளத்துக்கு செல்ல, நாம் விசா முன்னதாக எடுக்க தேவை இல்லை....

கடவூர் டூ காத்மாண்டு! (பாகம்-1 )

 திடீரென்று கடவூர் எங்கிருந்து வந்தது என்று குழம்புகிறீர்களா? அதாங்க, திருக்கடையூரின் இயற்பெயர் 'திருக்கடவூர்' அதை சுருக்கி கடவூர்னு மாத்தி சொன்னா 'எதுகை,மோனையோட' எடுப்பா இருக்குமேன்னுதாங்க. கதை-கட்டுரைல இதெல்லாம் சாதாரணமுங்க.  அறுபதாம் கல்யாணத்தில், கல்யாணம் குறித்து சில-பல தகவல்களை சொன்னேன் அல்லவா! இப்போது காத்மாண்டு பயணத்தை ஒத்து சில-பல தகவல்களை சுவாரசியமாக சொல்லலாமென்று இருக்கிறேன்.  "சும்மா, வளத்தாம சொல்லுங்க, அது சுவாரசியமா இருக்கா, இல்லையாங்குறதை நாங்க பாத்துக்கறோம்"னு நீங்க முணுமுணுப்பது கேட்கிறது. அப்போ நேரா விஷயத்துக்கு போயிடலாம். காத்மாண்டு பயணத்தின் சஸ்பென்ஸ் பற்றி முந்தைய பகுதியில் சொன்னது கொஞ்சம் உண்மைதான், என்றாலும் எனக்கு மறைத்துப்பேச எல்லாம் தெரியாது அல்லவா! அதனால் முழு உண்மையை சொல்லி விடுகிறேன். திருக்கடையூரில்தான் காத்மாண்டு பயணம் பற்றி எனக்கு சொல்லப்பட்டது என்றது கொஞ்சம் உடான்ஸ் தான். ஆனால், எனக்கு தாமதமாகவே தெரிவிக்கப்பட்டது மட்டும் உண்மை, உண்மை, உண்மைத்தவிர வேறொன்றும் இல்லை.  காத்மாண்டு, நேபாள தேசத்தின் தலை நகரம். இமாலய மலைகளின் உச்சந்தலை...

கல்யாணமாம் கல்யாணம், அறுபதாம் கல்யாணம்! (இறுதி பாகம்)

Image
சென்ற பதிவில் மாங்கல்யதாரணம், அதை தொடர்ந்து என்மன வானில் சிறகை விரித்த வண்ண பறவைகளையும் பார்த்தோம். உணர்வு பூர்வமான அந்த நிகழ்வுக்கு பிறகு, நாங்கள் ஆசீர்வாதம் பெறுவதும் (வயதில் மூத்தவர்களிடம்) பின்னர் இளையவர்களுக்கு ஆசீர்வாதம் வழங்குவதும், நடைபெற்றது.  நான் சிறுவனாக இருந்த காலங்களில், ஒரு வழக்கம் இருந்தது. எங்கள் வீட்டிற்கு விருந்தினர் யார் வந்தாலும் சரி, அல்லது நாங்கள் உறவினர் வீட்டிற்கோ, வேறுஒரு பெரியவர் வீட்டிற்கு சென்றாலும் சரி, உடனே அவர்கள் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்குவது வழக்கம். மிகவும் நல்ல செயல் அல்லவா!, ஆனால் இதில் ஒரு முக்கியமான பயன் இருக்கிறது. காலில் விழுந்து எழுந்ததும், ஆசீர்வாதத்தோடு, ஐம்பது பைசாவோ, ஒரு ரூபாயோ நிச்சயம் கிடைக்கும். அந்த காலத்தில் இந்த காசை கொண்டு, என்னென்னவோ வாங்கலாம், அல்லது உண்டியலில் போட்டு சேர்த்து வைக்கலாம். இந்த வழக்கம் இப்போது குறைத்திருப்பது நிதர்சனம்.  கொடுக்கும்போதுதான் கொடுப்பவருக்கும், பெறுபவருக்கும் ஆனந்தம் என்பது என் எண்ணம். அந்த நினைவுகளோடு, நாங்கள் ஆசீர்வாதம் பெற்றும், வழங்கியும் மகிழ்ந்தோம். முடிவாக ஆரத்தி எடுக்கப்பட்டு விழா...

கல்யாணமாம் கல்யாணம், அறுபதாம் கல்யாணம்! (பாகம்-11 )

Image
 என் நண்பர், தம் உறவினர் ஒருவரின் ஷஷ்டி பூர்த்தியில், இருபத்து நாலு கலசங்கள் பார்த்ததாக கமெண்ட்டில் கூறியிருந்தார். 24 ன் முக்கியத்துவம் என்ன என்று இப்போது பார்க்கலாம். அன்னை அபிராமியின் மந்திரங்களில் மிக முக்கியமானது 'லலிதா சஹஸ்ரநாமம்' ஆகும். இந்த பூஜையில் மிகவும் போற்றத்தக்கதாக விளங்குவது 'சுஹாசினி பூஜை.' இதன் அடிப்படையில்தான், வீட்டிற்கு வரும் சுமங்கலிகளுக்கு மஞ்சள், குங்குமம் போன்றவை வழங்கப்படுகிறது. லலிதா ஸஹஸ்ரநாம ஸ்தோத்திரத்தில் இருபத்து நான்கு பரிகார மந்திரங்கள் சொல்லப்பட்டுள்ளன. அதன் பலன்களை கீழே பார்க்கலாம். 1 . காரிய சித்தி, 2 . நியாயமான ஆசைகள் நிறைவேற, 3 . நோயிலிருந்து விடுதலை, 4 . மாங்கல்யபலம், 5 . சிறந்த கல்வி, 6 . பூர்வ ஜென்ம கர்மாவிலிருந்து விடுதலை, 7 . இறை பக்தி, 8 . பயம் நீங்க, 9 . நிறை செல்வம், 10 . குடும்ப அமைதி, 11 . தீயவை அழிய, 12 . கோபம் நீங்க, 13 . அகால மரணம் ஏற்படாமலிருக்க, 14 . துன்பங்கள் நீங்க, 15 . சுக வாழ்வு பெற, 16 . கண் திருஷ்டி நீங்க, 17 . சுபமங்களங்கள் உண்டாக, 18 . ஆன்மீக வளர்ச்சி, 19 . உடல் வலிமை, 20 . தொழில் வளர்ச்சி, 21 . வழக்குகள் ஈடே...

கல்யாணமாம் கல்யாணம், அறுபதாம் கல்யாணம்! (பாகம்-10 )

Image
 ஷஷ்டி அப்தபூர்த்தியின் போது, எதற்காக பதினாறு கலசங்கள் வைக்கப்படுகிறது? என்று கேட்டிருந்தேன் அல்லவா? இப்போது பதிலை பார்ப்போம். 16 கலசங்களில், ஒவ்வொரு கலசமும் ஒரு தெய்வத்தை அல்லது தேவதையை குறிப்பது. ஒவ்வொரு கலசத்திலும் பின்வரும் தெய்வத்தை, மந்திரங்களின் மூலம் ஆவாஹனம் செய்கிறார்கள்.  1. பிரம்மன் (படைத்தல்), 2. விஷ்ணு (காத்தல்), 3. சிவன் (அழித்தல்), 4. லட்சுமி (செல்வம்), 5. சரஸ்வதி (கல்வி), 6. பார்வதி (சக்தி), திக்தேவதைகளாகிய 7. இந்திரன் (கிழக்கு), 8. அக்னி (தென்கிழக்கு), 9. யமன் (தெற்கு), 10. நிருதி (தென்மேற்கு), 11. வருணன் (மேற்கு), 12. வாயு (வடமேற்கு), 13. குபேரன் (வடக்கு), 14. ஈசானன் (வடகிழக்கு) மற்றும் ஆயுள், ஆரோக்கிய தேவதைகளாகிய 15. தன்வந்தரி (ஆரோக்கியம்), 16. ஆயுள் தேவதை (நீண்ட ஆயுள்) இதைத்தவிர, இன்னுமொரு காரணமும் இருக்கிறது. இந்த பூஜைகளில், மிக உயர்ந்த பொருளை கொண்ட சூக்தங்களான, ஸ்ரீசுக்தம், புருஷ சூக்தம், ருத்ரம், ஆயுஷ்ய சூக்தம் போன்றவை மந்திரங்களின் மூலம், கலச தீர்த்தத்தில் உயிரேற்றப்பட்டு, முடிவில் அந்த தீர்த்தங்களை கொண்டு தம்பதிகளுக்கு அபிஷேகமும், மற்றும் ஏனையருக்கு தீ...

கல்யாணமாம் கல்யாணம், அறுபதாம் கல்யாணம்! (பாகம்-9 )

Image
'ருத்ர ஏகாதசி' பூஜைகளை தொடர்ந்து 'மரகத லிங்க அபிஷேகம்' நடந்தது. அது பற்றி இன்று தெரிந்து கொள்வோம். மரகதம், ஆங்கிலத்தில் 'எமரால்டு' என்று சொல்லுவார்கள். இயற்கையில் பச்சை நிறமுடையது. மரகத லிங்கம் என்பதும் பச்சை நிறமுடையது. மிகவும் அரிதானது இந்த மரகத லிங்கம்.  ராமநாதபுரம் மாவட்டத்தில் 'உத்திரகோச மங்கை' என்று ஒரு மிக பழைமையான சிவாலயம் ஒன்று உள்ளது. கிட்டத்தட்ட 2000 ஆண்டுகளுக்கு முன்பாகவே கட்டப்பட்டதாக சொல்லப்படுகிறது. இந்த ஆலயத்தில் 'மரகத நடராஜர்' சன்னதி உள்ளது. வருடம் முழுவதும் சந்தனக்காப்பிலேயே தான் நடராஜர் காட்சி அளிப்பார். ஒரு நாள் தவிர, ஆம். ஆருத்திரா தரிசனத்தின் போது மட்டும், மரகத நடராஜரை தரிசிக்கலாம், பச்சை நிறத்தில். மிகவும் சிறப்பு மிக்க ஆலயம். இப்போது மரகத லிங்க அபிஷேகத்தை பற்றி மேலும் சில விபரங்களை தெரிந்து கொள்ளலாம். சிவபெருமானுக்கு 'அபிஷேகப்பிரியர்' என்று ஒரு பெயர் உண்டு. அதிலும், தேன், சந்தனம், மஞ்சள், புஷ்பம், விபூதி, பஞ்சமிருதம், பன்னீர் ஆகியவற்றால் அபிஷேகம் செய்யும்போது, நமக்கு வரங்களை அள்ளிக்கொடுப்பார் அல்லவா! லிங்கத்திலிருந...

கல்யாணமாம் கல்யாணம், அறுபதாம் கல்யாணம்! (பாகம்-8 )

Image
'கஜ, கோ, ஹய' பூஜைகளை தொடர்ந்து முக்கிய பூஜைகள், ஹோமங்கள் செய்யும் முன்பு 'சங்கல்பம்' எனப்படுகிற உறுதியேற்றல் அவசியம். சங்கல்பம் செய்யும்போது செய்பவருக்கும், ஏற்பவருக்கும் (இந்த இடத்தில் அந்த பூஜைக்கான கடவுள் என்று பொருள்) ஒரு தொடர்பு ஏற்படுவதாக நம்பப்படுகிறது. இந்த சங்கல்பத்தின் போது, நாம் யார், எந்த பகுதி, என்ன கோத்திரம், நட்சத்திரம் என்ற பூர்வாங்கமெல்லாம் சொல்லி பூஜையின் நோக்கத்தை கூறி விட்டு தொடரவேண்டும்.  முதலில் கணபதி பூஜையோடு ஆரம்பிக்கப்பட்டு, தொடர்ந்து ருத்திரம், சமகம் போன்ற மிக உயர்ந்த மந்திர பிரயோகங்கள்நடைபெறும். இந்த நிகழ்ச்சிக்கு ருத்ர ஏகாதசி என்று பெயர். இந்த மந்திரங்கள் 'கிருஷ்ண யஜுர்' வேதத்தில் உள்ளன. அதன்படி, பதினோரு ருத்திரர்கள் உள்ளதாக புராணங்களில் சொல்லப்பட்டிருக்கிறது. 'கபாலி, பிங்களர், பீமர், விருபாக்ஷர், விலோஹிதர், சாஸ்திரர், அஜபாதர், அஹிர்பூதன்யர், ஷாம்போ, சாந்தர், பாவர்'. இந்த பெயர்கள் சிவபுராணத்தின் படியாகும். மற்ற புராணங்களில் வேறு பெயர்கள் இருந்தால் நான் பொறுப்பில்லை. இந்த பூஜைகள் யாவும், ஒருவர் அறுபது வயதை கடந்து, அதாவது குடும்...

கல்யாணமாம் கல்யாணம், அறுபதாம் கல்யாணம்! (பாகம்-7 )

Image
 ஷஷ்டி அப்த பூர்த்தி சடங்குகளில் முதலில் வருவது, இறையருளை பெறுவதற்கான சில பூஜைகள். முதலில் 'கஜ பூஜை' அதாவது விநாயக பெருமானின் வடிவமாக திகழும் யானைக்கு பூஜை செய்வது. கஜ வடிவம் என்பது பலம், அறிவாற்றல், மதிப்பு மற்றும் மரியாதையின் உருவமாகும். கஜபூஜையின் மூலமாக, விநாயகரை வழிபாட்டு தடைகள் நீங்கப்பெற்று இந்த நான்கு பேறுகளையும் பெறுவதுதான் இதன் அடிப்படை நோக்கம். இரண்டாவது 'கோ' பூஜை. அதாவது பசுவை பூஜிப்பது. பசு, மஹாலக்ஷ்மி தாயாரின் அம்சமாக நம் சம்பிரதாயத்தில் வழிபட படுகிறது. 'காமதேனு'வின் அம்சமாகவும் கொள்ளலாம். இந்த வழிபாட்டின்  மூலம் நீங்காத செல்வத்தையும், பூர்வ கர்மங்களை களைந்து புண்ணியங்களை பெறலாம். மூன்றாவது 'ஹய பூஜை'. ஹயம் என்றால் குதிரை. குதிரை வேகம், அழகு, ஆன்மீக அறிவு முதலியவற்றின் அடையாளம். இந்த பூஜையின் மூலம் இந்த மூன்று பயன்களையும் பெறுவது தான் நோக்கம். அறுபது வயதுக்கு மேலே இதெல்லாம் தேவையா? என்று கேட்காதீர்கள். நிச்சயமாக தேவை. இந்த முக்கியமான மூன்று பூஜைகளும் செய்தால்தான், முழுமையான தயார் நிலை ஏற்படும் என்பது நியதி. திருக்கடையூரில் இவை மூன்றையும் நிய...