கடவூர் டு காத்மாண்டு! (பாகம்-4 )
பபெரா ஓட்டலில் காலை உணவு மட்டும் இலவசம் (காம்ப்ளிமென்ட்டரி), ஆதலால் முதல் நாள் இரவு சிற்றுண்டியை பபேராவிலேயே, ஒரு மணிநேர காத்திருப்புக்கு பின் உண்டு களித்தோம். நேபாள் உணவு முறையில் நிறைய 'தாய்' ஐட்டங்கள் இருக்கிறது. எல்லாவிதமான 'மோ-மோ' வும் கிடைக்கிறது. இனிப்பு வெஜ் ரைஸ் (அநேகமாக காஷ்மீரி வகை), சப்பாத்தியும், தோசையும் சர்வதேச உணவாகிவிட்டதால் எங்கும் கிடைக்கும். ஹோட்டலில் மேல் தளத்தில் உள்ள டைனிங் ஹால் என்பதால், மலைத்தொடர்களை ரசித்துக்கொண்டே இயற்கை காற்றையும் வாங்கிக்கொண்டே சாப்பிட முடிந்தது. இதெல்லாம் நம்ம ஊரில் முடியுமா? செயற்கை குளிரூட்டப்பட்ட அறை, அல்லது மாசுபட்ட காற்றுடன் கூடிய வெளி சூழல் என்றே பழகிவிட்டோம் இல்லையா? வருடத்துக்கு ஒரு முறையாவது இது போன்ற இடங்களுக்கு சென்று இயற்கையை ரசிக்க வேண்டும் என்று உறுதி மேற்கொண்டேன்.
இமய மலைப்பகுதியாதலால், இருள் சூழ எட்டு மணியாகிறது. அதே போலவே காலை பொழுதும் சீக்கிரமே விடிந்து விடுகிறது.
முதல் நாள் தூக்கமின்மையால், அன்று இரவு அருமையான தூக்கம் சொக்கியது. காலைபொழுதும் சீக்கிரமே வந்து விட, இரண்டாம் நாள் பயணத்துக்கு தேவையானவற்றை அள்ளிக்கொண்டு தயாரானோம். காலை உணவு எட்டு மணிக்கெல்லாம் தயார். சூடான இட்லி, சட்னி சாம்பார், பூரி, பொங்கல் தவிர ஏனைய வட இந்திய வகைகளும் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. என்னதான் காம்ப்ளிமெண்டரி ஆக இருந்தாலும் ஒரு அளவுக்கு மேல் வயிறு ஏற்க மறுத்தது. பின்னர் பழ ரசம் அல்லது டீ ஒன்றை வயிற்றில் ரொப்பிக்கொண்டு ஓட்டல் வரவேற்புக்கு வந்தோம். எங்களை அழைத்து செல்ல வேண்டிய 'டொயோட்டா ஹியாஸ்' வாகனம் நின்று கொண்டிருந்தது.
"ஏழுபேர் செல்லக்கூடிய இந்த எம்.யு.வி. வாகனத்தை இந்தியாவில் பார்க்க முடியவில்லையே, ஏன்?" பதில் தெரியவில்லை.
முதலில் நாங்கள் பயணித்த இடம் 'பசுபதிநாத் கோவில்' சில இளவட்டங்கள் "போச்சுடா, கோவிலா" என்று அங்கலாய்ப்பது தெரிகிறது. வேறு வழி இல்லை. நேபாள தலைநகரம் பெரும்பாலும் கோவில்களால் சூழப்பட்டது. நம்ம கும்பகோணம் போல, எந்த கோணத்திலிருந்து பார்த்தாலும் தெரிவதென்னவோ கும்பம்தான்.
பசுபதிநாத் கோவில் மிகவும் பழைமையானது. ஐந்தாம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. தற்போது, யூனஸ்கோவின் 'உலகின் பாரம்பரியம்' மிக்க இடங்களில் ஒன்றாக இடம்பெற்றுள்ளது. இந்த கோவிலின் சிறப்பு என்னவென்றால், இங்குள்ள சிவலிங்கத்தின் அமைப்பு மனித உருவிலேயே இருப்பதுதான். தேவாரப்பாடல்களிலும், ஸ்கந்த புராணத்திலும் இடம் பெற்றுள்ள சிவஸ்தலம். நம்முடைய கோவில்களிலிருந்து அமைப்பில் முற்றிலுமாக மாறுபட்டிருக்கியது. 'நேவாரிய' கட்டிடக்கலையை ஆதாரமாக கொண்டு, இரண்டடுக்கில் பகோடாவைபோல (pagoda ) அமைக்கப்பட்டுள்ளது. இந்த கோவிலுக்கு நான்கு வாயில்கள் உள்ளன. பின்புறம், 'பாக் மதி' ஆறு பிரவாகமாக ஓடுகிறது. அனைத்து கடவுளருக்கும் தனி, தனியாக சன்னதிகள் உள்ளன. கர்நாடகத்தை சேர்ந்த 'பட்டர்' எனப்படும் வகுப்பினர்தான் பெரும்பாலும் இந்த கோவிலின் பண்டிதர்கள்.
ஆங்காங்கே, சிறு சிறு குழுவாக பண்டிதர்கள் அமர்ந்துகொண்டு பிராயச்சித்த காரியங்களை செய்து கொண்டிருக்கிறார்கள். ஆயிரத்து ஐநூறிலிருந்து லட்சம் ருபாய் வரை செலவு செய்து மேலே சொன்ன பிராயச்சித்த காரியங்களை செய்து கொள்ளலாம். தனிப்பட்ட முறையில் எனக்கு 'அறுபதாவது வயதில் இந்த கோவில் தரிசனம் கிடைத்தது' மிகவும் தன்னிறைவை தந்தது.
(குறிப்பு: முதல் பாகத்தில் சொன்னதை நினைவில் கொள்ளுங்கள். கையில் அவசியம் நேபாள பணத்தையோ அல்லது இந்திய ரூபாய்யையோ வைத்துக்கொள்ளுங்கள். கிரெடிட் கார்ட், டெபிட் கார்டுகளெல்லாம் வேலைக்கு ஆகாது)
(தொடரும்)









Comments
Post a Comment