கடவூர் டூ காத்மாண்டு!! (பாகம்-6)

பௌத்தநாத் கோவில் சுற்றி உள்ள கடைகளில் ஒன்றில் நேபாளி தொப்பி ஒன்றை இரு நூறு ரூபாய்க்கு வாங்கி, கொடுப்பதற்கு பணம் இல்லாமல் தவித்து பின்னர், ATM தேடி அலைந்து ஒரு வழியாக பணத்தை எடுத்து கொடுத்து விட்டு “போதுமடா சாமி” என்று ஆகிவிட்டது. 

அடுத்து நாங்கள் சென்ற இடமும் மிகப்பிரபலமானது. அதன் பெயர் 

படான் தர்பார் சதுக்கம்.

படான் தர்பார் சதுக்கம், யுனெஸ்கோ (UNESCO) உலக பாரம்பரியத் தலமாகவும், நேவாரி கட்டிடக்கலையின் மிகச்சிறந்த படைப்பாகவும் திகழ்கிறது. நேபாளத்தின் லலித்பூரில் அமைந்துள்ள இது, மல்ல வம்ச காலத்தில் கட்டப்பட்ட பழமையான அரச முற்றங்கள், புனிதமான இந்து மற்றும் பௌத்த ஆலயங்கள் மற்றும் 16 முதல் 18-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த நேர்த்தியான கல், மரம் மற்றும் உலோகச் சிற்பங்களைக் கொண்டுள்ளது. இதன் அனேக விவரங்களை தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் நமக்கு நிச்சயமாக ஒரு உள்ளூர் வழிகாட்டி தேவை. அதற்கு அலைய தேவையில்லை. கட்டணம் வசூலிக்கப்படும் இடத்தில் அரசு அனுமதி பெற்ற ஆங்கிலம் பேசும் ‘கெய்டு’கள் இருக்கிறார்கள். இரண்டாயிரம் ரூபாய் கட்டணம் வசூலிக்கிறார்கள். மூன்று மணி நேரத்தில் முழுவதும் சுற்றி காட்டி விடுகிறார்கள்.

முதலில் நாம் பார்த்தது பிரமாண்டமாக கட்டப்பட்ட கிருஷ்ண மந்திர்.

இந்து காவியக் கதைகளைச் சித்தரிக்கும் வகையில், சிகரக் கட்டிடக்கலை பாணியில் கட்டப்பட்ட, 21 சன்னதிகளைக் கொண்ட அற்புதமான கற்சிலை கோவில். 

அடுத்தது படான் அருங்காட்சியகம், பழமையான அரண்மனை முற்றத்தில் (கேசவ் நாராயண் சௌக்) அமைந்துள்ள இது, பாரம்பரிய புனிதக் கலைப் படைப்புகளின் உலகத்தரம் வாய்ந்த தொகுப்பைக் கொண்டுள்ளது. 

அடுத்தடுத்து அரச முற்றங்கள்

முல் சௌக், சுந்தரி சௌக் மற்றும் 'துஷாஹிதி' எனப்படும் அரச குளியல் தொட்டி (தரைமட்டத்திற்குக் கீழே அமைந்த குளியல் பகுதி) போன்ற வரலாற்றுச் சிறப்புமிக்க பொது இடங்களை இது கொண்டுள்ளது.

சிறிது தொலைவில் தங்கக் கோயில் (Golden Temple)

உள்ளூரில் 'ஹிரண்ய வர்ண மஹாவிஹார்' என்று அழைக்கப்படும் இது, தங்க முலாம் பூசப்பட்ட ஒரு பிரம்மாண்டமான பௌத்த மடாலயமாகும்.

ஏராளமான சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிலிருந்தும், சீனா, மலேசியா, போன்ற ஆசிய நாடுகளிலிருந்தும், ஒரு சில ஐரோப்பிய நாடுகளிலிருந்தும் சுற்றி வருகிறார்கள். இன்ஸ்டாகிராம் மோகர்கள் சிலர் நடனமாடி ரீல்ஸ் வீடியோ எடுத்து கொண்டிருந்தார்கள். 

‘கெய்ட்’ சரளமான ஆங்கிலத்தில் உரையாடி பல விஷயங்களை கூறினார். தளபதி ஜோஸப் விஜய் பற்றி பேசியது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. தனக்கு தென்னிந்தியர்களை பிடிக்கும் என்று கூறி, அந்த காரணங்களை சொன்னபோது கொஞ்சம் பெருமையாகவும், சில வடமாநில நபர்களின் நடத்தை குறித்து அவர் சொன்னது மனவருத்தம் தந்தது. 

ஒவ்வொரு சுற்றுலாப் பயணியும் தனது சொந்த நாட்டின் பிம்பத்தையும், மரியாதையையும் தாங்கி செல்கிறோம் என்ற உணர்வோடு செல்லவேண்டும் என்பதை நன்கு உணர்ந்தினார். 

(தொடரும்)

Comments

Popular posts from this blog

Travelogue - Leh, Ladakh