கடவூர் டு காத்மாண்டு! (பாகம் - 5)

பசுபதிநாத் கோயிலில் ஒரு பண்டிதரை கொண்டு ஓரிரு சிவ, காலபைரவ வழிபாடுகளை முடித்துக்கொண்டு பின்னர் பசுபதிநாதரை தரிசனம் செய்து விட்டு அங்கிருந்து புறப்பட்டு எங்கள் அடுத்த ஸ்தலமான பௌத்தநாத் மடாலயத்துக்கு சென்றோம். 


பௌத்தநாத் கோவில், மிகப்பெரிய கோள வடிவ ஸ்தூபியை கொண்டுள்ளது. உலகின் மிகப்பெரிய பௌத்த கோயிலாகவும், யுனெஸ்கோவின் பாதுகாப்பு பெற்ற பாரம்பரிய தலமாகவும் விளங்குகிறது. இந்த கோயிலுக்கு நான்கு வாயில்கள் உள்ளன. இதன் ஸ்தூபியின் நான்கு திசைகளிலும் இரண்டு பெரிய கண்கள் வரையப்பட்டிருக்கிறது. இந்த கண்கள் அறிவையும், ஆற்றலையும் சித்தரிப்பதாக நம்பப்படுகிறது. புத்த கோயிலின் வடிவ அமைப்பை பல்வேறு மண்டலங்களாக உருவாக்கி இருக்கிறார்கள். அதாவது, ஒரு “ட்ரோன்” கேமராவினால் உச்சியிலிருந்து பார்த்தால் எப்படி தெரியுமோ, அதைதான் மண்டலங்கள் என்று சொல்கிறார்கள். கிட்டத்தட்ட, நமது இந்து கோயில்களில் நான்கு பிராகாரங்கள் என்று சொல்கிறோமல்லவா! அதே போலத்தான் மண்டலங்களும். மனித வாழ்வில் நாம் பல கட்டங்களை கடந்து சென்று முடிவில் இறைவனை அடைகிறோம் என்று இந்து சமயமும், நிர்வாணநிலையை அடைகிறோம் என்று பௌத்த சமயமும் சொல்கிறது. 


வலது புறமாக நடந்து, மண்டலங்களை கடந்து புத்தபெருமானை வணங்கி விட்டு வெளியே வந்தோம். பௌத்தநாத் கோவிலை சுற்றிலும் கடைகள். ஊசி, பாசியில் தொடங்கி நேபளத்தின் பாரம்பரிய தொழில்களால் உருவாக்கப்பட்ட அனைத்தையும் இங்கு காண முடிந்தது. கைவினைத்தொழில் சார்ந்த பொருட்கள் ஏராளமாக கிடைக்கின்றன. மரத்தாலான பொருட்கள், பொம்மைகள், மட்பாண்டங்கள், விளக்குகள், உடைகள், பெண்களுக்கான ஆபரணங்கள் போன்றவைகளும், தின்பண்டங்களும், பெப்ஸி, கோக கோலா, ஐஸ்கிரீம் போன்ற அன்னிய வகைகளும் கிடைக்கின்றன. 






ஆனால் முக்கியம் என்னவென்றால், நேபாள நாட்டின் பணம் தேவை. இதனை திரும்ப திரும்ப உங்களுக்கு ஞாபகப்படுத்துவதற்கான காரணம் நாங்கள் பட்ட பாடுகள் தான். கோவிலும் சரி, வீதிகளும் சரி தூய்மையாகவே இருக்கின்றன என்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இங்குள்ள அனைத்து கோவில்களுக்கும், சுற்றுலா தலங்களுக்கும் நுழைவு சீட்டு வாங்கியாக வேண்டும். SAARC நாடுகளுக்கு சற்றே குறைந்த கட்டணம் வசூலிக்க படுகிறது. இரண்டு மணிநேரம் செலவழித்து, ஒரு சில பொருட்கள் வாங்கி, நிறைய இனிய நினைவுகளோடு எங்கள் பயணம் தொடர்ந்தது. 


(தொடரும்)

Comments

Popular posts from this blog

Appreciate what you have - Good story