கடவூர் டு காத்மாண்டு!! (பாகம்-3 )

விடியல்காலை நாலரை மணிக்கு மும்பை விமானநிலையத்துக்கு வந்து சேர்ந்தோம். தூக்கக்கலக்கம் இருந்ததால், அவரவர்கள் ஒரு சாய்வு நாற்காலியை பிடித்து வழுக்கியபடியே இளைப்பாறினோம். எங்களுக்கு காத்மாண்டு செல்லும் அடுத்த விமானம் 11 :30 க்கு தான் என்பதால் நிதானமாக காலைக்கடன்களையும் சிற்றுண்டியையும்  முடித்துக்கொண்டு அறிவிக்கப்பட்ட வாயிலுக்கு சென்றடைந்தோம். விமானம் 'ஹவுஸ் புல்.' யாத்திரிகர்கள் சிலரும், இடம்பெயந்தோர் பலரும் விமானத்தை நிரப்பியிருந்தனர். நேபாளத்துக்கு இவ்வளவு இடம்பெயந்தோரை நான் எதிர்பார்க்கவில்லை. பணி நிமித்தமாக இந்தியாவுக்கு நேபாளிகள் நிறையபேர் வந்து போகிறார்கள் என்பது கண்கூடாக பார்க்க முடிந்தது. 

நாங்கள் பயணித்த 6 E 1157 இண்டிகோ விமானம் இரண்டரை மணிநேரம் சிறகடிக்க பிறகு, சில நிமிடங்கள் முன்னதாகவே, 'த்ரிபுவன் சர்வதேச விமான' நிலையத்தை அடைந்தது. இமய மலையின் அழகை மேலிருந்து ரசிப்பது ஒரு அழகுதான் என்றாலும், மேகமூட்டம் அதை தடுக்கத்தான் செய்தது. 'சர்வதேச விமான நிலையமாயிற்றே!' என்றெல்லாம் கற்பனை கோட்டை கட்ட வேண்டாம். மிக சிறிய நமது இரண்டாம் நிலை நகரங்களின் விமான நிலையம் அளவுதான் உள்ளது. ஆனாலும், வெளிநாட்டு விமானங்கள் ஏராளமாக வருகின்றன. விமானத்திலிருந்து இறங்கியவுடன், காவலர்கள் நம்மை அக்கு வேறு-ஆணி வேறாக பரிசோதனை செய்தே அனுப்பி வைக்கிறார்கள். 'தவறில்லை, ஆனால் அவர்கள் தேடுகிற ஆட்களுக்கு உள்ளே வர வேறு பல வழிகள் உள்ளதே!' என்றே எண்ண தோன்றுகிறது. 

ஒரு வழியாக நமது பொருட்களையெல்லாம் சரி பார்த்து எடுத்து வெளியே வந்த வுடன், நம்மை வரவேற்க 'தாமஸ் குக்' வரவேற்பாளர் கையில் 'பெயர் பதித்த அட்டை', சால்வை சகிதம் தயாராக நிற்கிறார். அந்த இடத்திலிருந்தே 'நாம் என்ன செய்யலாம், என்ன செய்ய கூடாது' என்பதெல்லாம் சொல்லி வழி நடத்தி நாங்கள் தங்க வேண்டிய மூன்று நட்சத்திர ஓட்டல் 'பபெரா ஹெரிடேஜ்' க்கு சென்று சேர்த்தார். 

விமான நிலையத்திலிருந்து ஓட்டல் செல்லும் வரை, நமக்கு ஏதோ வடஇந்திய நகரத்தின் சாலைகளில் செல்வது போலவே ஒரு உணர்வு. பெரிய வித்தியாசம் தூய்மையிலும், வாகன நெரிசல்களிலும் காத்மாண்டு முன்னேற்றத்தில்தான் உள்ளது. பெரும்பாலும் இந்தியாவிலிருந்து ஏற்றுமதியான மாருதி, ஹ்யுண்டாய், டொயோட்டா, டாடா வாகனங்களும் சீன தயாரிப்புகளான பி.ஒய். டி போன்ற வாகனங்களும் பார்க்க முடிந்தது. விலையை கேட்டால் வாயை பிளப்பீர்கள், ஒன்றுமில்லை நம






து ஹ்யுண்டாய் ஐ 20 யின் விலை முப்பது லட்சம்தான். 

சாலைகளில், மின்சார கேபிள்களை அழகாக கொடியைப்போல கம்பங்களில் செலுத்தியுள்ளார்கள். காத்மாண்டுவில் இயற்கை கொள்ளை அழகு, ஆனால் செயற்கையோ சொல்லிக்கொள்ளும்படி இல்லை. "இவ்வளவு தானா?" என்று முடிவு கட்டி விடாதீர்கள். பற்பல அதிசயங்களின் சுரங்கம்தான் இந்த நேபாளம். மேலும் பல சுவாரசியமான விஷயங்களை தொடர்ந்து பார்க்கலாம்.


(தொடரும்)

Comments

Popular posts from this blog

Appreciate what you have - Good story