OTT Movie review "Thiru Manikam"

 சமீபத்தில் "திரு.மாணிக்கம்" என்று ஒரு திரைப்படத்தை OTT ல் பார்த்தேன். 'சமுத்திரக்கனி' நடித்தபடம் என்பதால் எனக்கு ஒரு ஈர்ப்பு தன்னிச்சையாகவே இருந்ததது. இந்த படம் Z5 ல் வெளிவந்துள்ள படம். சுய-தர்மத்தை பற்றிய கதை. இந்த காலத்தில் இப்படி ஒரு படமா! என்று என்னை ஆச்சார்யத்தில் ஆழ்த்தியது. 


மாணிக்கம், ஒரு சாதாரண குடும்பஸ்தர். குமுளியில் ஒரு 'லாட்டரி சீட்டு' வியாபாரம் செய்யும் கடை வைத்திருக்கிறார். மனைவி, இரண்டு பெண் குழந்தைகள். இரண்டாவது குழந்தைக்கு பேச்சுகுறைபாடு. திக்குவாய்ப்போல. அனைத்து நடுத்தர குடும்பத்தினருக்கும் உள்ளது போலவே இவர் குடும்பத்துக்கும் சில பொருளாதார சிக்கல்கள். மனைவியின் முழு ஒத்துழைப்போடு சவால்களை எதிர் கொள்கிறார்.


இவருடைய கடைக்கு ஒரு முதியவர் (பாரதிராஜா) வருகிறார். அவருக்கும் பல பொருளாதார சிக்கல்கள். நிறைமாத கர்ப்பிணியான தன்னுடைய மகளை, வரதட்சிணையை காரணம் காட்டி விரட்டி விட்டு, தன் மகனுக்கு வேறு ஒரு பெண்ணை மணம் முடிக்க முயலும் முதியவரின் சம்பந்தி. இந்நிலையில் மாணிக்கத்தின் கடையில் லாட்டரி சீட்டு வாங்குகிறார் அந்த முதியவர். சீட்டுக்கு பணம் கொடுக்க தன் சட்டை பையை துழாவும்போதுதான், தான் வைத்திருந்த பணம் தொலைந்து போனது அவருக்கு தெரிகிறது. "பிறகு பணத்தை பெற்றுக்கொள்கிறேன்" என்று மாணிக்கம் சொன்னாலும் கூட, "பணத்தை கொடுத்து விட்டுதான் லாட்டரி சீட்டை பெற்றுக்கொள்வேன்" என்று முதியவர் வலியுறுத்துகிறார். அதுவரை தான் எடுத்து வைத்த சீட்டுகளை பத்திரமாக வைத்திருக்க சொல்லிவிட்டு தொலைந்த பணத்தை தேடி, கிடைக்காமல் வீட்டுக்கு சென்று விடுகிறார்.

 

இந்த நிலையில், அவர் எடுத்து வைத்த சீட்டுக்கு ஒண்ணரை கோடி ருபாய் பரிசு விழுந்திருப்பதாகவும், சீட்டை கொண்டு வந்து பணத்தை பெற்றுக்கொள்ளுமாறு மாணிக்கத்துக்கு தகவல் தெரிவிக்கப்படுகிறது. மாணிக்கம், மிக மகிழ்ச்சியோடு சீட்டை எடுத்துக்கொண்டு அந்த முதியவரை தேடி கிளம்புகிறார். இப்போதுதான், மாணிக்கத்துக்கு சோதனை மனைவியின் வடிவிலேயே வந்து சேருகிறது. பணம் கொடுக்காத சீட்டுக்கு பரிசு விழுந்ததால், அந்த பணம் நமக்கு சொந்தம் என்று வாதாடுகிறார் மனைவி. மாணிக்கம் மறுக்க, விஷயம் முற்றி போய் உறவினர்கள், போலீஸ், பாதிரியார் என்று பல வடிவங்களில் வேண்டுகோள்களும், அச்சுறுத்தல்களும் மாணிக்கத்துக்கு வந்து சேர்கின்றன.  ஒரு நிலையில் தானும், தன் குழந்தைகளும் தற்கொலை செய்துகொள்வோம் என்ற அளவுக்கு மிரட்டல் வளர்கிறது. மாணிக்கத்தின் மனதில் லேசான சலனம் தோற்றமெடுக்க, 'திடீரென்று பெய்யும் மழையில் அந்த லாட்டரி சீட்டு தன்னிடமிருந்து பறிபோக, அதை மீட்டெடுக்க மாணிக்கம் போராட' என்று திரைக்கதை மிகப்பிரமாதமாக நகர்கிறது. முடிவில், மாணிக்கம் எந்த சலனத்தும் இடம் தராமல் அந்த முதியவரை தேடி கண்டுபிடித்து, அவரிடம் அந்த சீட்டை ஒப்படைத்து விடுகிறார். 


தன்னுடைய 'பிளாஷ் பாக்' ஐயும் நன்றாக சொல்லி இருக்கிறார். கடைசியில், அவருடைய அந்த செயல் அனைவராலும் பாராட்டப்படும்போது மாணிக்கம் "நான் என்னுடைய கடமையைதான் செய்தேன், இதுதான் எனது தர்மம். இதற்கு பாராட்டுகள், பரிசுகள் இவை எல்லாம் தேவையற்றது" என்று கூறுகிறார். 


கடமையையும், தர்மத்தையும் கடைபிடிப்பதே மிக சவாலான செயலாக இருப்பதுதான் இன்றைய நிலையாக இருக்கிறது என்று எதார்த்தமாக கூறியிருக்கிறார் இயக்குனர்.  மிகவும் பாராட்ட படவேண்டிய, அனைவராலும் பார்க்க படவேண்டிய, மிக முக்கியமாக இளைய சமுதாயத்தினராலும், பள்ளி குழந்தைகளினாலும் பார்க்க படவேண்டிய சிறந்த படம் தான் "திரு.மாணிக்கம்"

Comments

Popular posts from this blog

Travelogue - Leh, Ladakh