கல்யாணமாம் கல்யாணம், அறுபதாம் கல்யாணம்! (பாகம்-8 )

'கஜ, கோ, ஹய' பூஜைகளை தொடர்ந்து முக்கிய பூஜைகள், ஹோமங்கள் செய்யும் முன்பு 'சங்கல்பம்' எனப்படுகிற உறுதியேற்றல் அவசியம். சங்கல்பம் செய்யும்போது செய்பவருக்கும், ஏற்பவருக்கும் (இந்த இடத்தில் அந்த பூஜைக்கான கடவுள் என்று பொருள்) ஒரு தொடர்பு ஏற்படுவதாக நம்பப்படுகிறது. இந்த சங்கல்பத்தின் போது, நாம் யார், எந்த பகுதி, என்ன கோத்திரம், நட்சத்திரம் என்ற பூர்வாங்கமெல்லாம் சொல்லி பூஜையின் நோக்கத்தை கூறி விட்டு தொடரவேண்டும். 

முதலில் கணபதி பூஜையோடு ஆரம்பிக்கப்பட்டு, தொடர்ந்து ருத்திரம், சமகம் போன்ற மிக உயர்ந்த மந்திர பிரயோகங்கள்நடைபெறும். இந்த நிகழ்ச்சிக்கு ருத்ர ஏகாதசி என்று பெயர். இந்த மந்திரங்கள் 'கிருஷ்ண யஜுர்' வேதத்தில் உள்ளன. அதன்படி, பதினோரு ருத்திரர்கள் உள்ளதாக புராணங்களில் சொல்லப்பட்டிருக்கிறது. 'கபாலி, பிங்களர், பீமர், விருபாக்ஷர், விலோஹிதர், சாஸ்திரர், அஜபாதர், அஹிர்பூதன்யர், ஷாம்போ, சாந்தர், பாவர்'. இந்த பெயர்கள் சிவபுராணத்தின் படியாகும். மற்ற புராணங்களில் வேறு பெயர்கள் இருந்தால் நான் பொறுப்பில்லை.

இந்த பூஜைகள் யாவும், ஒருவர் அறுபது வயதை கடந்து, அதாவது குடும்ப வாழ்க்கையில் முழுமை அடைந்து, ஆன்மீக வாழ்க்கைக்கு முன்னேற இறைவனின் பரிபூரண ஆசியை பெறுவதற்காக நடத்தப்படுகிறது. ஆன்மீக பயணத்தை தொடர நீண்ட ஆயுளும், ஆரோக்கியமும், மனத்தூய்மையும் வேண்டுமல்லவா?


இப்போது நமது கதை. 

வாத்தியார் சுவாமி, "இந்த மணைப்பலகை மேல ரெண்டு பெரும் உட்காருங்கோ" என்றதும் 'ஆஹா, வந்துதுடா ஆபத்து' என்று முனகிக்கொண்டே, "ஸ்வாமி, ஒரு விண்ணப்பம், எங்க ரெண்டு பேருக்கும் வேற வேற ப்ராபளம். எனக்கு முதுகுல, என் அகத்துக்காரிக்கு முட்டில, அதுனால மணைப்பலகையில் எல்லாம் உட்கார முடியாது" என்று நான் கூறவே, 

"சரி அப்டினா, ரெண்டு 'சேர்' ஏற்பாடு பண்ணிக்கோங்கோ" என்று கூறி விட்டு அவர் தன் பூஜை பொருட்கள் எல்லாவற்றையும் சரி பார்க்க  ஆரம்பித்து விட்டார். 

நான் பின்பக்கம் திரும்பியது தான் தாமதம், வெங்கி "அண்ணா, எல்லாருக்குமே சேர் ஏற்பாடு பண்ணிடறேன். எல்லாருக்கும் உங்கள விட வயசு அதிகம்" என்று சற்று நகர்ந்து சென்று மண்டபத்திலேயே அடுக்கி வைத்திருந்த நாற்காலிகளில், இருபது நாற்காலிகளை வாடகைக்கு எடுத்து வேலையே உடனே முடித்தார். இதில் தகவல் என்னவென்றால், எல்லா வசதிகளும் உடனேயே கிடைக்கும். 

பிறகு சங்கல்பம் செய்து கொண்டு கணபதி பூஜையுடன் ஆரம்பித்து, ருத்திரம், சமக மந்திரங்கள் ஓத, நானும் என் மனைவியும், கையில் புஷ்பங்களை எடுத்து பூஜை செய்தோம். எங்களைப்போலவே, இன்னும் பல தம்பதிகள் அடுத்தடுத்த மண்டபத்தில் பூஜை செய்து கொண்டிருந்தனர். மொத்தத்தில், அமிர்தகடேஸ்வரர், அபிராமி முன்னிலையில் பூஜை செய்த திருப்தி மனதில் குடி கொண்டது. கும்பகலசங்கள், பூஜைக்கு பின்னர் அங்கேயே பாதுகாக்கப்பட்டு மறு நாள் ஷஷ்டி அப்தபூர்த்திக்காக வைக்கப்பட்டன.






(தொடரும்) 

Comments

Post a Comment

Popular posts from this blog

Travelogue - Leh, Ladakh