கல்யாணமாம் கல்யாணம், அறுபதாம் கல்யாணம்! (பாகம்-5)

அறுபதாம் கல்யாணம் செய்வதற்கான சில காரணங்களை பார்த்தோம். இப்போது திருமணத்தை அமிர்தகடேஸ்வர ர் கோவிலில் நடத்த காரணங்களை பற்றி பார்ப்போம். 

நம் இதிகாச புராணங்களில், மார்கண்டேயர் என்ற ஒரு மகரிஷியை பற்றி கேள்விப்பட்டிருப்போம். நடிகர் சிவகுமாருக்கு கூட ‘கலையுலக மார்க்கண்டேயன்’ என்ற ஒரு பெயர் உண்டு. எந்த வயதிலும் இவர் இளமையாக தோன்றியதால் அவரை அப்படி அழைப்பார்கள். அந்த பெயருக்கு நிஜமான சொந்தக்கார ர் இந்த மகரிஷிதான். 

ஆமாம். தனது பதினாறாவது வயதில் இவர் மரணம் ஏறபடும் என்பது தான் இவர் விதி. ஆனால் இந்த மார்க்கண்டேயரோ, மிகச்சிறந்த சிவ பக்தர். தனது பதினாறாவது வயதில் சிவ பக்தியின் உச்சத்தில் இவர் தியானத்தில் இருந்தபோது, காலத்தின் தலைவனான ‘எமதர்மராஜன்’ இவர் உயிர் பறிக்க வந்தார். அப்போது பரமசிவன் தோன்றி எமதர்மராஜனோடு போரிட்டு வீழ்த்திவிடுகிறார். பின்னர் எமதர்மராஜனுக்கு மன்னிப்பு வழங்கி மீட்டு எடுத்ததாக இந்த தலத்தில் சொல்லப்படுகிறது. அன்று முதல் மார்க்கண்டேய மகரிஷிக்கு மரணம் கடந்த உயர்ந்த நிலை கிடைக்கிறது. 

ஆதலால், இந்த தலத்தில் நிகழ்த்தப்படும் மகா ம்ருத்யுஞ்சய பூஜை, மிகவும் சிறப்பானது. நமது ஆயுள் மற்றும் ஆரோக்கியம் ஆகியவற்றை மேம்படுத்த வல்லது என்பது நம்பிக்கை. 

இப்போது நம் கதைக்கு வருவோம். வைதிக ஏற்பாடுகளை கடந்து மேலும் என்னென்ன விஷயங்கள் தேவை என்பது பற்றி பார்ப்போம். 

முதலில் உங்கள் திருமணத்துக்கு எத்தனை பேர் வருவார்கள் என்பதை தெரிந்து கொள்வதைவிட, எத்தனை பேருக்கு நீங்கள் அழைப்பு விடுக்க போகிறீர்கள் என்பது தான் ரொம்ப முக்கியம். இதை நான் சொல்ல ஒரு காரணம் இருக்கிறது. சமீபத்தில் ஒரு நண்பரின் மகள் திருமணத்துக்கு சென்றிருந்தேன். மண்டபத்தில் கூட்டம் நிரம்பி வழிந்தது. வந்திருந்தவர்களில் பெரும்பாலனவர்கள் அறுபது வயதை கடந்தவர்கள். எனக்கு ஆச்சரியம் என்னவென்றால், மணப்பெண்ணின் அல்லது மணமகனின் நண்பர்கள் மிகச்சிலரே. எனக்கு காரணம் புரிந்து விட்டது. வந்திருந்தவர்கள் அனைவரும் பணியிலிருந்து ரிடையர் ஆனவர்கள். நேர நெருக்கடியோ, பண நெருக்கடியோ இல்லாதவர்கள். வேறென்ன வேணும், வந்து விட்டார்கள். 

திருக்கடையூர் கோவிலில் அறுபதாம் கல்யாணம் செய்யப்போகிறீர்கள் என்றால் இதை நினைவில் கொள்ளுங்கள். நான் முப்பது பேருக்கு மட்டுமே அழைப்பு விடுத்திருந்தேன். அதற்கு மேல் வந்தால், தங்குமிடம், சாப்பாடு, மண்டபத்தில் இடம் எல்லாம் சற்று சிரம ம். 

ஆக, அதற்கு ஏற்றவாறு அருகிலேயே, தங்கும் வசதி, மூன்று வேளை உணவு எல்லாம் ஒரே விடுதியில் ஏற்பாடு செய்தோம். டீலக்ஸ் ஏசி அறை ஆயிரம் ரூபாய்க்கு மேல் கிடைக்கிறது. உணவு ஒரு இலைக்கு எழுநூறு ரூபாய்க்கு (மூன்று வேளை) கிடைக்கிறது. அட்வான்ஸ் கொடுத்து விட்டு ஊருக்கு திரும்பினோம். மனதில் நிம்மதி நிறைந்திருந்தது. 

மற்ற விபரங்களை நாளை பார்க்கலாம்.


(தொடரும்)

Comments

Popular posts from this blog

Travelogue - Leh, Ladakh