கல்யாணமாம் கல்யாணம், அறுபதாம் கல்யாணம்! (பாகம்- 6)
திருக்கடையூரில், அமிர்தகடேஸ்வர்ருக்கு சம மாக அபிராமி அம்பாளுக்கும் சிறப்பான வரலாறு உள்ளது. முன்னொரு காலத்தில் அபிராமி பட்டர் என்ற ஒரு பக்தர் இருந்தார். அபிராமி அன்னையின் தீவிர பக்தர். அவர் ஒரு பண்டிதரும் கூட. நற்செயல் எதுவாக இருந்தாலும், நாள் குறித்து தர இவரைதான் கேட்பார்கள். அப்படி ஒரு நாள், பட்டர் தீவிர பக்தி உச்சத்தில் இருந்த சமயத்தில், அந்த பகுதி அரசர் இவரை “பௌர்ணமி என்றைக்கு?” என்று கேட்க, பட்டர் கவனமில்லாமல் தை அமாவாசை தினத்தை குறித்து கொடுக்க, வந்தது வினை (அரசர் ஒரு காலண்டரை அரண்மனையில் மாட்டியிருக்கலாம்) கடுப்பாகிப்போன மன்னர் அபிராமி பட்டரை சுற்றிலும் தீயை மூட்டி, நடுவே நிற்க வைத்து, பௌர்ணமி தினத்தை உறுதி படுத்த சொல்கிறார். பாவம், பட்டர் என்ன செய்வார்?
“ சொல்லடி அபிராமி…..” என்று பாட்டு பாடுகிறார்.
பக்தரை, தாய் கை விடுவாரா? உடனே, தன் காதிலிருந்த ஒரு வைரத்தோடை பிடுங்கி வானத்தை நோக்கி தூக்கி எறிய. அந்த தோடு முழு நிலவாக மாறுகிறது. தன் தவற்றை அரசர் உணர்ந்து மன்னிப்பு கேட்கிறார். இந்த வரலாறும் இங்கு உள்ளது.
மீண்டும் நம் கதைக்கு வருவோம். முன்னாடியே முடிவு செய்ததை போல, நான் வாங்க வேண்டிய பொருட்களான ‘சீர் பட்சணங்கள், தாலி, உறவினர்களுக்கு கொடுக்க துணிமணிகள் எல்லாம் தயார் செய்து கொண்டு, ஜூலை ஆறாம் தேதி இரண்டு கார்களில் தூத்துகுடியிலிருந்து புறப்பட்டு மாலை திருக்கடையூர் சென்று சேர்ந்தோம். எங்களுக்கு ஒரு மணி நேரம் முன்னாலேயே வந்து சேர்ந்த வெங்கியும் இன்னொரு அத்தை மகனான பாலாஜியும் எங்களை வரவேற்றனர்.
அந்த ஊர் ஓட்டல்களில் ‘செக் அவுட்’ நேரம் மாலை நான்கு மணி. காரணம், அப்போது தான் ஓட்டல் காலியாகிறது. அறைகளை சுத்தம் செய்து தர அரை மணி நேரம். ஆக, உள்ளே நுழையும்போது நாலரை மணி.
ஐந்து மணிக்கெல்லாம் சூடான பஜ்ஜி, அசோகா அல்வா, டிகிரி காபி எல்லாம் தயார். ஏழு மணி நேர பயணக்களைப்பை, பத்து நிமிடத்தில் சரி செய்து விட்டது.
இப்போது உங்களை தயார் செய்து கொள்ளுங்கள். நாளை முதல் நேரடியாக நிகழ்ச்சிகளுக்கு போகலாம்
(தொடரும்)
Comments
Post a Comment