கல்யாணமாம் கல்யாணம், அறுபதாம் கல்யாணம்! (பாகம்-10 )
ஷஷ்டி அப்தபூர்த்தியின் போது, எதற்காக பதினாறு கலசங்கள் வைக்கப்படுகிறது? என்று கேட்டிருந்தேன் அல்லவா? இப்போது பதிலை பார்ப்போம்.
16 கலசங்களில், ஒவ்வொரு கலசமும் ஒரு தெய்வத்தை அல்லது தேவதையை குறிப்பது. ஒவ்வொரு கலசத்திலும் பின்வரும் தெய்வத்தை, மந்திரங்களின் மூலம் ஆவாஹனம் செய்கிறார்கள்.
1. பிரம்மன் (படைத்தல்), 2. விஷ்ணு (காத்தல்), 3. சிவன் (அழித்தல்), 4. லட்சுமி (செல்வம்), 5. சரஸ்வதி (கல்வி), 6. பார்வதி (சக்தி), திக்தேவதைகளாகிய 7. இந்திரன் (கிழக்கு), 8. அக்னி (தென்கிழக்கு), 9. யமன் (தெற்கு), 10. நிருதி (தென்மேற்கு), 11. வருணன் (மேற்கு), 12. வாயு (வடமேற்கு), 13. குபேரன் (வடக்கு), 14. ஈசானன் (வடகிழக்கு) மற்றும் ஆயுள், ஆரோக்கிய தேவதைகளாகிய 15. தன்வந்தரி (ஆரோக்கியம்), 16. ஆயுள் தேவதை (நீண்ட ஆயுள்)
இதைத்தவிர, இன்னுமொரு காரணமும் இருக்கிறது. இந்த பூஜைகளில், மிக உயர்ந்த பொருளை கொண்ட சூக்தங்களான, ஸ்ரீசுக்தம், புருஷ சூக்தம், ருத்ரம், ஆயுஷ்ய சூக்தம் போன்றவை மந்திரங்களின் மூலம், கலச தீர்த்தத்தில் உயிரேற்றப்பட்டு, முடிவில் அந்த தீர்த்தங்களை கொண்டு தம்பதிகளுக்கு அபிஷேகமும், மற்றும் ஏனையருக்கு தீர்த்தம் தெளிக்கப்படும். இதனால் கீழ்கண்ட பதினாறு பேறுகளான (ஷோடச பிராப்தி)
1. புகழ் (Fame), 2. கல்வி (Education), 3. தைரியம் (Courage), 4. வெற்றி (Victory), 5. குழந்தைப்பேறு / சந்தானம் (Children), 6. செல்வம் (Wealth), 7. தானியம் (Food), 8. நல்ஊழ் / பாக்கியம் (Good Fortune), 9. இன்பம் (Happiness), 10. அறிவு (Wisdom), 11. அழகு (Beauty), 12. பெருமை (Honour), 13. இளமை (Youthfulness), 14. துணிவு (Bravery), 15. ஆரோக்கியம் (Good Health) மற்றும் 16. ஆயுள் (Longevity) போன்றவை கிடைக்க பெறுகிறது.
காலை ஆறுமணிக்கு எல்லாரும் எழுந்தாகிவிட்டது. குளித்துவிட்டு, ஷஷ்டிபூர்த்திக்கு எடுத்து வைத்திருந்த வேஷ்டியை நானும், ஒன்பது கஜம் புடைவையை என் மனைவியும் கட்டிக்கொண்டோம் (குறிப்பு: இந்த வேஷ்டியையும், புடவையையும் உதக சாந்திக்கு பின்னர், அதாவது தலைக்கு தண்ணீர் ஊற்றியபின்னர் தானம் செய்துவிட வேண்டும். எனவே, அதற்கு தக்கவாறு உடையை வாங்கிக்கொள்வது நல்லது. 'கண்ணுக்கு அழகா, அம்பதாயிரத்துக்கு புடைவை வாங்கினேன், அதெல்லாம் தானம் தர முடியாது' என்று பிடிவாதம் பிடிக்க தேவை இல்லை)
மற்றவர்கள், போட்டோ ஷூட்டுக்கு ஏற்ப, கண்ணைப்பறிக்கும் வண்ணம் வித விதமான உடையில் வந்தார்கள். அவர்களுக்கு இது ஒரு சிறந்த வாய்ப்பாக ஆனது. என் அழைப்பை ஏற்று, என்னுடைய மற்ற உறவினர்களும் காலையில் வந்து சேர்ந்தனர். உறவினர்கள் காலை உணவை முடித்துக்கொண்டு வந்துவிட்டார்கள். ஏனெனில், உதகசாந்தி எல்லாம் முடிய மூன்று, நான்கு மணி நேரம் ஆகிவிடும். அவரவர் உடல்நிலைக்கு ஏற்றவாறு, இருப்பது சாலச்சிசிறந்தது. இது தம்பதிகளுக்கும் பொருந்தும்.
இன்றைய தின ஷஷ்டிபூர்த்தி ஹோமங்களுக்கு, வயதில் மிகவும் மூத்த ஒரு ஸ்வாமி தான் முன்னின்று நடத்துகிறார் என்பது இன்னும் சிறப்பு. ஒவ்வொரு, செயலுக்கும் முழு விளக்கம் தெரிவித்து, எந்த தெய்வத்துக்கு, எந்த காரணத்துக்காக செய்கிறோம் என்பதை தெளிவு படுத்தி விட்டு, கிரமமாக செய்கிறார்கள். பதினாறு கலசங்கள் உள்ளதால், அவர் சொல்லும்போது பதினாறு முறைகள் நாம் விழுந்து நமஸ்காரம் செய்ய வேண்டியுள்ளது. விதி விலக்குகளும் இருக்கின்றது, கவலை வேண்டாம். சில 'ஜிம் பாடி' உறவினர்கள் சாஷ்டாங்க நமஸ்காரம் செய்தார்கள். நானும், என் மனைவியும், அந்த முயற்சியை பீமரத சாந்திக்கு (எழுபது) ஒத்தி வைத்தோம்.
பூஜைகள் முடிய கிட்ட தட்ட இரண்டு மணி நேரம் ஆனது. பின்னர் அபிஷேக தீர்த்தத்தையும், கலசங்களையும் ஆளுக்கொரு கும்பமாக எடுத்து கொண்டு, உதகசாந்திக்கு கிளம்பினோம்.
உதக சாந்தி என்றால் என்ன? என்பதை நாளை பார்க்கலாமா?
(தொடரும்)
Awesome sincere explanations from references.Hats off
ReplyDelete