கடவூர் டூ காத்மாண்டு! (பாகம்-8)

இரண்டாம் நாள் பயணம் இனிதே முடிந்தது. அன்று இரவு எப்படியோ நேபாளி ஸ்பெஷல் அயிட்டமான “மோமோ” வை ருசி பார்த்துவிடுவது என்று தீர்மானித்தோம். நல்ல வேளையாக அது நாங்கள் தங்கியிருந்த ஹோட்டலிலேயே கிடைத்து விட்டது. ஆனாலும் தாய் “மோமோ”வுக்கு ஈடு இல்லை. கொஞ்சம் “சப்” என்று இருந்ததுபோல் தோன்றியது. எனினும், அந்த ஊர் உணவை சாப்பிடுவது ஒரு சுகம்தான். அன்றைய பொழுதை கழித்து விட்டு மறுநாள் காலை அடுத்த சுற்றுலாதலமான ‘பக்தபூர்” செல்ல தயாரானோம். எங்களுக்கு முன்னதாகவே எங்கள் கார் தயாராக இருந்தது.

ஐந்து பேரும் எங்களை வண்டியில் நுழைத்து கொண்டவுடன் “போலாம் ரைட்” என்று கிளம்பினோம். இன்றும் காலையிலேயே ஏராளமான வாகனங்கள் வந்து கொண்டிருந்தன. அரை மணிநேரம் கழித்து பக்தபூர் வந்து சேர்ந்தோம். இந்த முறை தயாராக நேபாளி கரன்சியை எடுத்து கொண்டு சற்றே நிம்மதியாக ஊருக்குள் காலை வைத்தோம். “அடடா, எவ்வளவு புத்திசாலி” என்று சொல்லுகிறீர்களா, கொஞ்சம் பொறுங்கள். 

முதலில் நாங்கள் பார்த்த இடம், நேவாரி மொழியில் “லுண்டி அஜிமா” என்று அழைக்கப்படும் இந்திராயணி கோயில். எட்டு அன்னை தேவிகளில் ஒருவர். பக்தாபூர் தர்பாரின் வடமேற்கில், ஒரு சிறிய படிக்கட்டுக்குக் கீழே இவரது கோயில் அமைந்துள்ளது. காத்மாண்டுவில் இது தரிசிக்கத் தகுந்த ஒரு சக்தி பீடம் (பிரபஞ்ச சக்தியின் தலம்) ஆகும். கதை இப்படி போகிறது. லுண்டி அஜிமா தனது பல பிள்ளைகள் பட்டினியாக இருந்தபோது அவர்களுக்குப் பன்றி இறைச்சியை உணவாக பரிமாறினாராம். மேலும், பாலசதுர்தசி அன்று இந்திராயணிக்குச் செய்யப்படும் பாரம்பரிய பலிகளில், பாம்பு, சிட்டுக்குருவி, வெட்டுக்கிளி ஆகியவற்றுடன், வேதகால ஹோம்ம் மற்றும் யாகத்தை ஒத்த வகையில் நெருப்பில் எருமைகளின் தலைகளும் வீசப்பட்டனவாம். இன்றும், எருமைகளின் தலை வெட்டப்படும் சடங்கு வருடம்தோறும் நடைபெறுகிறது. இதை கூறிவிட்டு, எங்கள் ‘கைடு’ தனது மொபைல் போனை எடுத்து, எருமை தலை வெட்டப்படும் வீடியோ ஒன்றை காட்டினார். நான் என் பள்ளி நாட்களில் ஆடுகள் மற்றும் கோழிகள் வெட்டப்படுவதை கண்டிருக்கிறேன், ஆனால் என் மனைவியோ, மற்றவர்களோ இந்த நிகழ்வுகளை பார்த்ததில்லையதலால் வீடியோவை பார்த்தவுடன் ஒரு நிமிடம் அதிர்ச்சியடைந்தார்கள். 

பின்னர் சமாளித்துக்கொண்டு அடுத்த இடத்துக்கு நகர்ந்தோம். 

"பக்தர்களின் நகரம்" என்று பொருள்படும் பக்தாபூர், அந்த நகரத்தில் உள்ள ஒரு அரண்மனை. அதன் பெயர் “படான் அரண்மனை”. இந்த படானுக்கும், பாகிஸ்தான் படானுக்கும் எந்த ஒரு தொடர்பும் இல்லை. 

ஒரு காலத்தில் மல்ல மன்னர்களின் மகத்தான இருப்பிடமாக இருந்த இதன் பழமையான முற்றங்கள், கோயில்கள் மற்றும் அரண்மனைகள் பல நூற்றாண்டுகளின் கைவினைத்திறனைப் பறைசாற்றுகிறது. 

பிரமிக்க வைக்கும் 55-சாளர அரண்மனை, தங்கக் கதவு, தலேஜு கோயில், நியாடபோலா கோயில் மற்றும் மண்பாண்டச் சதுக்கம் ஆகியவை இதன் பொக்கிஷங்களில் அடங்கும். 1934 மற்றும் 2015-ஆம் ஆண்டுகளில் ஏற்பட்ட பேரழிவுகரமான நிலநடுக்கங்கள் இருந்தபோதிலும், அதன் பாரம்பரியத்தின் பெரும்பகுதி அன்புடன் மீட்டெடுக்கப்பட்டுள்ளது.

அதன் செங்கல் பதிக்கப்பட்ட சந்துகளில் நடப்பது, வேறொரு காலகட்டத்திற்குள் நுழைவது போன்ற உணர்வைத் தருகிறது. அங்கு வரலாறு, ஆன்மீகம், கலை மற்றும் அன்றாட வாழ்க்கை ஆகியவை தொடர்ந்து அழகாகக் கலந்திருக்கின்றன. இப்போதும் சீரமைப்பு வேலை தொடர்கிறது என்பது நான் பார்த்த நிதர்சனமான உண்மை. இந்த படான் அரண்மனையின் அழகினை என் புகைபடங்களின் மூலம் பாருங்கள். மற்றவற்றை நாளை பார்க்கலாம்.

(தொடரும்)

Comments

Popular posts from this blog

Appreciate what you have - Good story