நாகர் கோவிலிலிருந்து நாகாலாந்து வரை


காலை பதினொரு மணியிலிருந்தே செல் போன் ஒலிக்காக காத்திருந்தேன். இரண்டு மணி நேர காத்திருப்பிற்கு பின் ட்ரிங்கியது என்னுயிர் (உயிர் வாங்கும் பல சமயங்களில்)செல் போன். "அப்பா! எங்க ப்ராஜெக்ட் நேஷனல் சயின்ஸ் காங்கிரஸ்சுக்கு செலக்ட் ஆயிடுச்சு" அந்தப்பக்கத்தில் (நாகர் கோவில்) இருந்து கூவியது என் மகள் தான். "அப்படியா, ....... கங்க்ராட்ஸ்." தெறித்து வந்து விழுந்தன என் வார்த்தைகள். வயிற்றுக்குள் இனம் புரியாதமகிழ்ச்சி பறவைகள் சிறகடித்தன. மீண்டும் மீண்டும் அந்த உணர்வுகளை அசை போட்டு மகிழ்ந்தேன். "அப்பா, வர்ற இருபத்தி நாலாம் தேதி நாகாலாந்து போகணும். மொத்தம் முப்பது ப்ராஜக்ட் செலக்ட் பண்ணி இருக்காங்க. நம்ம மாவட்டத்திலிருந்து நான் மட்டுந்தான்........" மற்ற வார்த்தைகளெல்லாம் ஹீனக்குரலிலேதான் எனக்கு கேட்டன. எனது மனம் கோட்டை கட்ட ஆரம்பித்தது. 'நாகாலாந்து இந்தியாவின் வட கிழக்கு மாநிலம், என்னுடைய பல வருடக்கனவு. பலமுறை வட இந்தியாவிற்கு சென்றிருந்தாலும் கல்கத்தா தாண்டியது இல்லை. இதுதான் சரியான வாய்ப்பு. எப்படியாவது சுற்றுலா சென்று வரவேண்டும்' என்று எண்ணினேன். அந்த நாள் முதலே என் விரல்கள் கணினியின் கீ போர்டில், இணைய வலையில் ரயில்வே ரிசர்வேஷன், ஏர்லயின்ஸ் அவைலபிளிடிசென்னையிலிருந்து திமாபூர் (நாகாலாந்து) வரை என ரொம்ப பிசி ஆனது. கூகிள், விகிமேபியா வின் வரைபடங்கள் கை கொடுக்க, செமினார் நடக்க இருக்கும் "லிவிங் ஸ்டோன் உயர் நிலை பள்ளியின்" கூரைகளை கண்டு களித்தேன். சுற்றுலா சென்று பார்க்க வேண்டிய இடங்களை குறித்து வைத்தேன். நடு நடுவே வீட்டில்லுள்ளவர்களை அழைத்து நாம் போக வேண்டிய இடங்களை காண்பித்து தயார் படுத்தினேன்.
ஒரு வழியாக நாகர் கோவில் செமினாரை முடித்து கொண்டு கைகளில் கோப்பை மற்றும் பதக்கத்தோடு வந்தவளை வரவேற்க படை திரட்டிக்கொண்டு விருதாசலம் ரயில் நிலையத்துக்கு சென்றேன். வீட்டுக்கு வந்த பிறகு விருந்து படைத்தது கொண்டாடினேன். தன்னுடைய நாகர் கோவில் பயணத்தை விலா வாரியாக விவரித்தாள் என் மகள். மதுரையில் நடக்கபோகும் கூட்டத்திற்கு பெற்றோர்களும் ஆசிரியையும் வரவேண்டுமென்று அறிவித்திருந்ததால் புறப்பட்டு போனோம். கூட்டத்தில் தமிழ் நாடு அறிவியற் கழகத்தின் பொறுப்பாளர்கள் பேசினார்கள். நாகாலாந்து பற்றி பல விவரங்களை தெரிவித்தார்கள். தட்ப வெப்ப நிலை பற்றி சொல்லும் பொது மதுரையிலேயே குளிரெடுத்தது. விழாவிற்கு நமது முன்னாள் குடியரசுத்தலைவர் திரு. A.P.J.அப்துல் கலாம் அவர்கள் வரப்போவதாக அறிவித்தவுடன் அரங்கமே கரவொலியில் அதிர்ந்தது. எனக்குள் இரட்டிப்பு மகிழ்ச்சி. ஆனால் அடுத்த அறிவிப்பே என் தலையில் இடியாக இறங்கியது. "தெரிவு பெற்ற மாணவியைத்தவிர மற்றவர்களுக்கு வர அனுமதி இல்லை" என்று அறிவித்தவுடன் எனக்கு அழுகையே வந்து விட்டது. குழந்தைகள் இயலாமையை கண்ணீரில் வெளிப்படுத்தும், பெரியவர்கள் இயலாமையை கோபத்தில் வெளிப்படுத்துவார்கள். கேட்டு, கோபித்து முடிவில் சமாதானம் செய்து கொண்டு மதுரையை விட்டு கிளம்பினேன். அவர்கள் கூறிய விவரங்களை இணையத்திலும் போன் மூலமாகவும் சரிபார்த்த போது மனது வேறு வழியில்லாமல் ஏற்று கொண்டது. இதற்குள் மூன்று முழு நாட்கள் பறந்து ஓடியது. நமது இந்தியா மிகப்பெரிய ஜன நாயக நாடு என்பதில் ஐயமில்லைதான். ஆனால் இந்தியாவின் சில மாநிலங்களுக்கு செல்வதில் சில சிக்கல்கள் உள்ளது என்பதை தெரிந்து கொண்டேன். செல்லும் வழியிலும், பேசும் மொழியிலும் அரசியல் ரீதியிலும் சங்கடங்கள் உள்ளதாலேயே மற்றவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது என்பதை புரிந்து கொண்டேன்.
இருபத்தி நாலாம் தேதி காட்பாடி ஜங்கஷனில் கௌஹாத்தி எக்ஸ்ப்ரெஸில் வண்டி ஏற்றியதிலிருந்து இரண்டு மணிகொருமுறை போனில் தொடர்பு கொண்டு " சாப்பாடு வந்துடுச்சா? கூட யாரு இருக்காங்க? கோ-ஆர்டினேட்டர் வந்தாரா?" என்றெல்லாம் கேட்டு சிலவற்றிற்கு "உம்" என்றும், பலவற்றிற்கு "இல்லை" என்றும் பதில் வரும்போது மிக்சட் ரியாக்ஷன்ஸ் தோன்றியது. நான் எனக்குள்ளேயே பல சமயங்களில் சமாதானம் செய்து கொள்ள வேண்டியிருந்தது. 'ஹவ்ரா' தாண்டி 'ராம்பூர்' வரை இருந்த செல் போன் தொடர்பு திடீரென்று துண்டித்து போனதும் எனக்குள்ளே கந்தக அமிலம் பிரவாகமாக பெருக்கெடுத்ததும் ஒன்றும் செய்வதற்கு அறியாது தவித்து போனேன். ஒவ்வொரு எண்ணாக சுழற்றி பார்த்து தோற்றுப்போய் என் பொறுப்பினை கடவுளிடம் ஒப்படைத்து ஓய்ந்தேன். கடவுள் நம்பிக்கை என்பது ஒரு மகத்தான சக்தி. மனிதனை அவன் எல்லைவரை இழுத்து சென்று, இது எல்லை அல்ல, ஆரம்பம் என்று அறிவுறுத்தும் ஆற்றல் கொண்டது.
இந்தியாவின் சுதந்திரத்தைபற்றி அண்ணல் காந்தி மகான் சொன்னவார்தைகள் பொன்னானது. "என்று ஒரு இளம் பெண் நகைகளோடு, நடு இரவில் பயமின்றி தனியாக தெருவில் நடக்க முடிகிறதோ, அன்று தான் இந்தியா சுதந்திரம் பெறுகிறது." இந்தியாவிற்கு நிஜமான சுதந்திரம் கிட்டும்வரை கடவுள் நம்பிக்கை ஒன்றுதான் நமக்கு ஆறுதல் தர முடியும்.
"தொடர்பு எல்லைக்கு வெளியே உள்ளார்" என்ற தகவலே தொடர்ந்து இரண்டு நாட்கள் பரிமாறப்பட்டதால் நொந்து போனேன். நொந்து போகும்போது அதனை கடந்து செல்வதற்கு ஒரு எளிய வழியை படித்திருக்கிறேன். "இதுவும் கடந்து போகும்" என்ற மந்திரம் தான் அது. இன்றையதினம் இன்று மட்டுமே நிரந்தரம். நாளைய தினம் வேறு விதமானது. நிகழ்வுகள் வித்தியாசப்படும். "இருபத்தி ஏழாம் தேதி அன்று என் மகள் திரு. அப்துல் கலாம் அவர்கள் முன்னால் உரை ஆற்றுவாள்" என்று நினைத்த போது கவலைகள் முழுவதும் வெடித்து சுக்கு நூறாக உடைந்தன. இருபத்து ஏழாம் தேதி காலை தொடர்பு கொண்டபோது கோ-ஆர்டினேட்டர் ஒருவரிடம் மட்டும் தொடர்பு கொள்ள முடிந்தவுடன் நிம்மதி பெருமூச்சு விட்டேன். இங்கே ஒரு தகவல். வட கிழக்கு இந்தியாவுக்கு செல்பவர்கள் "Post paid connection" வைத்து கொள்ள வேண்டும். அதில் மட்டுமே ரோமிங் வசதி உள்ளது. பிறகு சென்ற நாட்கள் சந்தோஷம் செறிந்தவை. மூன்று நாட்கள் நாகாலாந்தில் தங்கி இருந்து தங்களுடைய ப்ராஜக்ட் - ஐ பிரமாதமாக விளக்கி பீ-ப்ளஸ் கிரேடுடன் பதக்கங்களையும் பெற்றுக்கொண்டு பல விதமான நண்பர்களையும், அனுபவங்களையும் பெற்றுக்கொண்டு வெற்றியுடன் திரும்பி, தனக்கும், பெற்றோர்களுக்கும், ஆசிரியர்களுக்கும், பள்ளிக்கும் பெருமை சேர்த்து கொடுத்தாள். இந்த வெற்றியை நோக்கும்போது இதன் பின்னால் உள்ள கஷ்டங்களும், கவலைகளும், கவ்ஹாதியில் தங்கியிருந்த இடத்துக்கு அருகில் குண்டு வெடிப்பு நிகழ்ந்ததும் மறந்து போனதுதான் உண்மை.

Comments

Post a Comment

Popular posts from this blog

The Garden Fire

Dharbhai - An article by TRS Iyengar