Travelogue: Leh Ladakh

 உலகின் உச்சிக்கு ஒரு பயணம்; லே-லடாக்!

(பாகம்-3)


மிகப்பெரிய ராணுவ அணிவகுப்பு என்று சொல்லியிருந்தேன் அல்லவா, புதிதாக ராணுவத்தில் சேர்க்கப்பட்டு பயிற்சிக்காக லடாக் வந்திருந்தவர்கள் அணிவகுப்புதான் அது. விமான நிலையத்திலேயே அனைத்து ராணுவத்தினரையும் ஒன்று சேர்த்து பின்னர் அவர்களை அணிவகுத்து அழைத்து சென்று கொண்டிருந்தார்கள். அனைத்து ராணுவத்தினரும் சுமார் பதினெட்டிலிருந்து இருபத்து ஐந்து வயதுக்கு உட்பட்டவர்கள். அவர்களை பார்க்கும்போது மிகவும் பெருமையாக இருந்தது, அவர்களுக்கு மரியாதை செலுத்த எண்ணம் தோன்றியது. ஒரு சல்யூட் செலுத்தி விட்டு எங்களை தங்குமிடத்துக்கு அழைத்து செல்ல வந்த காரை நோக்கி நகர்ந்தோம். காற்றில் பிராண வாயு குறைந்ததை கொஞ்சம் கொஞ்சமாக உணர முடிந்தது. ஐந்து டிகிரி ஏற்றத்தை கூட திணறி திணறித்தான் என்ற முடிந்தது.

ஒரு முக்கிய தகவல்: லே லடாக் பயணம் செய்ய விரும்புபவர்கள் அவசியம் நல்ல உடல் நிலை கொண்டிருக்க வேண்டும். குறிப்பாக, மூச்சு திணறல், ஆஸ்த்துமா உள்ளவர்கள் தகுந்த மருத்துவரிடம் ஆலோசனை பெற்று செல்வது நல்லது. கைவசம் ஒரு ஆக்சிஜன் சிலிண்டர் வைத்துக்கொள்வது சாலசிறந்தது. டீஹைட்ரேஷன் எனப்படும் நீர்க்குறைவு ஏற்பட வாய்ப்பு இருப்பதால், நிறைய தண்ணீர் குடித்து கொண்டிருக்கவேண்டும். ஒரு முழுநாள் கட்டாய ஓய்வு எடுக்கவேண்டியது அவசியம். முதல் நாளே பயணிப்பது கூடாது. ஹை ஆல்டிட்டியுடு சிக் நஸ் மாத்திரைகளை எடுத்துக்கொள்வது நல்லது.


இந்த தயார்நிலையில் நாங்கள் இருந்தாலும், ஒரு நாள் கட்டாய ஓய்வு எடுக்க முடிவு செய்தோம். எங்களுக்கு ஏற்பாடு செய்து தயாராக இருந்த இன்னோவா வாகனம், நாங்கள் தங்க வேண்டிய 'ராயல் ஹாலிடே' ஹோட்டலில் சுமார் 15 நிமிட பயணத்துக்கு பிறகு கொண்டு வந்து சேர்த்தது. விமான நிலையத்திலிருந்து ஹோட்டலுக்கு வரும் பாதை பிரமாண்டம். தேசிய நெடும்சாலை -1 மிகவும் அகலம், லேயில் தொடங்கி, ஸ்ரீநகர், பாராமுல்லா வழியாக உரி வரை செல்லுகிறது. சாலையின் இரு புறமும் ராணுவ முகாம்கள்தான். ராணுவ கிடங்குகள், செயலிழந்த மற்றும் உபயோகத்திலுள்ள பீரங்கிகள், டாங்கிகள், நமது தேசிய கொடி அனைத்து இடங்களிலும் பட்டொளி வீசி பறக்கிறது. நமக்கு மெய்சிலிர்க்கிறது. போட்டோ எடுக்க தடை உள்ளதால் நான் அதை தவிர்த்தேன். இந்த பயணமே, நம்மில் தேசிய உணர்வை தூண்டிவிட்டது என்றால் மிகையில்லை.

லே நகருக்குள் நுழைந்தவுடன் அனைத்து சாலைகளும் சுருங்கி விடுகிறது. ஆனாலும், சாலைகள் சீராக உள்ளது. அங்குமிங்குமாக வெளியூர் பயணிகளும், பல வெளிநாட்டு பயணிகளும் சுற்றி திரிந்து கொண்டிருக்கிறார்கள்.

ஒரு வழியாக 'ராயல் ஹாலிடே' ஹோட்டலுக்கு வந்து அறையின் சாவியை பெற்றுக்கொண்டு, முதல் மாடியில் உள்ள அறைக்கு வருமுன்னரே எங்களுக்கு நாக்கு தள்ளிவிட்டது. பத்து படி ஏறுவதற்குள் மூன்று முறை நிற்கவேண்டி இருந்தது. காரணம் 'ஆக்சிஜன்'

பின்னர் எப்படி சமாளித்தோம்? நாளை பார்க்கலாம். 

 

(தொடரும்)

 

Comments

Popular posts from this blog

The Garden Fire

Dharbhai - An article by TRS Iyengar