Travelogue - Leh Ladakh

 உலகின் உச்சிக்கு ஒரு பயணம்; லே-லடாக்!

(பாகம்-2 )


முக்கிய தகவல். லே-லடாக் செல்லுவதற்கு உகந்த காலம் என்பது மே மாதம் தொடங்கி ஆகஸ்ட் மாதம் வரை. எனவே ஜூன், ஜூலை மாதங்கள் சிறந்தது.

உலகத்தின் அதிகப்படியான உயரத்தில் உள்ள விமான நிலையங்களில் முதலில் வருவது "குஷக் பகுளா ரிம்போஷி" விமான நிலையம்தான். தரை மட்டத்துக்கு சுமார் 10500 அடிக்கு மேலே அமைந்துள்ளது லே விமான நிலையம். இந்த விமான நிலையத்துக்கு புது தில்லியிலிருந்தும், மும்பையிலிருந்தும் நேரடி விமானங்கள் உள்ளன. பெரும்பாலும் தூங்கி வழிந்துகொண்டு வரும் பயணிகள் கூட உத்திரகாண்ட், இமாச்சல பிரதேசத்தை விமானம் கடக்கும்போது பரபரப்பாகி மொபில் காமிராவை தயாராக வைத்துக்கொண்டு விமானத்தின் ஜன்னலை நோக்கி தாவுகிறார்கள். வெளியில் கொள்ளை அழகு. கரும்பச்சையில் ஆரம்பிக்கும் இயற்கையின் அழகு, பளீர் வெண்மையில் முடியும்.

அடர்ந்த மலைக்காடுகள், நடு நடுவே செம்மண் தீட்டியது போன்ற சிகரங்கள், இடை இடையே நீண்டு வீழும், வெண்ணிற அருவிகள், நீல நிறத்தில் தேங்கியுள்ள நீர்த்தேக்கங்கள், இவை யாவும் இமாச்சலப்பிரதேசத்தை தாண்டும் போது மாறுகிறது. மலை சிகரங்களில் திட்டு திட்டாக வெண்ணிற பனி போர்வைகள், பனிப்போர்வைக்கு சவால் விடும் வகையில் மேகக்கூட்டங்கள், மேகத்தைக்கிழித்துக்கொண்டு கதிரவனின் ஒளி கீற்றுகள். சிறிது நேரத்தில் மேகத்தையும், கதிரவனையும் தோற்கடித்து விட்ட பனி போர்வைகள், மலைகளை முழுவதுமாக போற்றி விடுகின்றன.

இந்த அழகினை நான் எவ்வளவு வருணித்தாலும், அவரவர் கண்களுக்கு புதிது புதிதாக எண்ணங்கள் தோன்றுவது தான் இயல்பு. இமயத்தின் உச்சாணி கொம்புகளை கடந்து லடாக் பகுதியில் விமானம் நுழையும் போது வெற்று நிலங்களையும், பாலை நிலங்களையும் மிகவும் வித்தியாசமான வண்ணங்களில் மலை சிகரங்களையும் காண முடிகிறது. 

விமானம், இமயத்தின் சிகரங்களை கடந்து, மலைகளால் சூழப்பட்ட ஒரு சம தளத்தில் தரை இறங்கும் வரை, நமது இதயம் சற்று அதிகமாகவே துடிக்கிறது. விமான பைலட்டுகளை பாராட்டியே ஆகவேண்டும். இது மிகச்சிறிய விமான நிலையம்தான். சிறிய விமானங்கள் இறங்கக்கூடிய ராணுவ விமான நிலையமாக இருந்த இந்த நிலையம், இப்போது பயணிகள் விமானம் இறங்கும் விமான நிலையமாக மாற்றப்பட்டுள்ளது. 

விமான நிலையத்தை சுற்றிலும் ராணுவ முகாம்கள். புகைப்படம் எடுக்க தடை விதிக்கப்பட்டிருக்கிறது. "பிராண வாயு குறைவுப்பகுதி" என்ற எச்சரிக்கை பலகை நம்மை முதலில் வரவேற்கிறது.

விமானத்திலிருந்து இறங்கியவுடன் எனக்கு ஒரு வகையான பதற்றமும், சற்றே எச்சரிக்கையும் தோன்றியது. ராணுவ வீரர்களின் மிகப்பெரிய அணிவகுப்புதான் அதற்கு காரணம். 


என்ன ஆயிற்று????????

 

(தொடரும்)

 

Comments

Popular posts from this blog

The Garden Fire

Dharbhai - An article by TRS Iyengar