ஐரோப்பா அழைத்தது (பாகம்-25 )
உண்மை நின்றிட வேண்டும்!!! ஓம்! ஓம்! ஓம்!
கடந்த 24 பாகங்களின் மூலம் என்னுடைய ஐரோப்பிய பயணத்தின் சில சுவையான, உபயோகமுள்ள அனுபவங்களை உங்களோடு பகிர்ந்து கொண்டேன். இந்த 25 வது பாகமானது இந்த உரையாடலின் கடைசி அத்தியாயம். இதில், வியானாவிலிருந்து மீண்டும், பிராங்கபார்ட் வந்த அனுபவமும், ஏற்கனவே கூறிய சில முக்கிய தகவல்களின் தொகுப்பும் தரவுள்ளேன்.
ஏர் பீ என் பீயை காலை செய்துவிட்டு மீண்டும் சாவியை அந்த பெட்டியிலே வைத்துவிட்டு மாலை ஐந்து மணிக்கே கிளம்பிவிட்டோம். ரயில் 10 மணிக்கு தான். அது வரை கையில் உள்ள பெட்டிகளை வைக்க ஒரு தனியார் சாமான்கள் வைக்கும் அறையை வாடகைக்கு எடுத்து, பொருட்களை வைத்து விட்டு, வியன்னா சாலையோர பஸாருக்கு சென்று 'டி' ஷர்ட்டுகள், பொம்மைகள், என்று சிலவற்றை வாங்கினோம். அங்கிருந்த பெரும்பாலான பொம்மைகளில் 'மொசார்ட் ' இசைகொண்ட சிறு சிறு இசைக்கருவிகள்தான் அதிகம். மொசார்ட் இசையை தனது அடையாளமாகவே கொண்டுள்ளார்கள் அந்த நாட்டினர். அந்த பஸாரில், பஞ்சாபை சேர்ந்த சிலர் கடைகள் வைத்துள்ளார்கள். தேவைப்பட்டவை எல்லாம் வாங்கி கொண்டு, வாடகைக்கு வைத்துவிட்டு போன பெட்டிகளையும் எடுத்துக்கொண்டு ரயில்வே நிலையத்துக்கு வந்து சேர்ந்தோம். இன்டர் சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில் சரியான நேரத்துக்கு கிளம்பி சரியான நேரத்துக்கு 'பிராங்கபார்ட்' வந்து சேர்ந்தது. இரவு நேர பயணம் ஆனாலும், உட்கார்ந்து கொண்டுதான் வரவேண்டும். படுக்கை வசதி எந்த ரயிலிலும் கிடையாது. ஆனாலும், இரவு பயணம் போல தெரியாது. எல்லா விளக்குகளும் எரிந்துகொண்டுதான் இருக்கிறது. ஜெர்மனிக்குள் ரயில் நுழைந்தவுடன், டிக்கெட் மற்றும், பாஸ்போர்ட் பரிசீலனை செய்தார்கள். ஜெர்மனியை குறுக்கே கடந்துதான் ரயில் வந்தது. 7 மணிக்கு ரயில் வந்து சேர்ந்தது. மீண்டும், அதே வால்டோர்ப் ஹோட்டலில்தான் தங்கினோம். இரவு, அந்த 'தாய்' ஹோட்டலுக்கு சென்று சாப்பிட்டு விட்டு அந்த இலங்கை தமிழருக்கு நன்றியை கூறி விட்டு, விடை பெற்று கொண்டு வந்தோம். அந்த பாகிஸ்தானிய கார் ஓட்டுனருக்கு பின், நம்மை அன்போடு வரவேற்று உபசரித்தவர் அல்லவா. இந்த ஐரோப்பிய பயணத்தில் நான் தெரிந்து கொண்ட ஒன்று, என்னவென்றால் ஜாதி, மதம், நாடு, இனம் இவை அனைத்தையும் கடந்து 'மனிதம்' நிலைத்திருக்கிறது என்று பேருண்மையை தான். நமக்குள் உள்ள குறுகிய எண்ணங்கள் விலகி, உலகமே பெரியதாக தோன்றுகிறது.
இங்கு ஒரு மிகமுக்கிய தகவல். இந்த கட்டுரைகளை படித்து உங்களுக்கும் செல்ல வேண்டும் என்று தோன்றினால், அது இந்த முயற்சியின் வெற்றியே. அப்படி செல்பவர்களுக்கு ஒரே ஒரு அறிவுரை. உங்களையும், உலக மக்களையும் முழுமையாக நம்பி செல்லுங்கள். உங்கள் அனுபவமும் மிக சிறந்ததாகவே இருக்கும்.
இந்த பயணத்தில், நான் சந்தித்து பழகிய, நமது அண்டை நாட்டவர்களும் சரி, தொலை நாட்டவர்களும் சரி, என்மேல் அன்பும், மனிதாபிமானமும் காட்டியே பழகினார்கள் என்பதை உறுதியாக என்னால் கூற முடியும். இந்த அனுபவங்களை கொடுத்த அவர்கள் அனைவருக்கும், சிரம் தாழ்த்தி நன்றி சொல்ல கடமை பட்டுள்ளேன். என்னுடைய இந்த சிறிய அனுபவங்களை, தமது நேர இழப்புகளை பொருட்படுத்தாமல், படித்து ஆதரித்த உங்கள் அனைவருக்கும் எனது சிரம் தாழ்த்தி வணங்குகிறேன். 'பிளாக் ஸ்பாட்' என்ற ஒரு தளத்தை அமைத்து கொடுத்த அந்த நிறுவனத்துக்கும் எனது நன்றிகள். என்னை சகித்துக்கொண்டு, என்னோடு கூடவே பயணித்த என் மனைவிக்கும், என் மகனுக்கும் கோடானு கோடி நன்றிகள். என்னுடைய தமிழில் நிறைய தவறுகள் இருந்திருக்கலாம், அதற்கு தமிழ் காரணமல்ல, அந்த தமிழ் மொழிக்கு என்னுடைய நன்றிகள். மேலும், பல பயண கட்டுரைகளோடு உங்களை மீண்டும் சந்திக்கும் சந்தர்ப்பத்தை நோக்கியே இருக்கிறேன்.
முற்றும்.
Comments
Post a Comment