ஐரோப்பா அழைத்தது (பாகம்-24 )
கண் திறந்திட வேண்டும்!!!
முதலில் நாங்கள் தேர்வு செய்த இடம், ஷோம்பிருன் (Schonbrunn ) அரண்மனை. வியன்னா செல்பவர்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய இடங்களில் இது முதன்மையானது. ஹாபிஸ்புர்க் ராஜ பரம்பரையின் வெயில்கால இருப்பிடம். இந்த பிரமாண்ட அரண்மனையின் சுற்றிலும் மிகப்பெரிய தோட்டமும் பூங்காவும் உள்ளது. குட்டையான மரத்தில் கொத்து, கொத்தாக ஆரஞ்சு பழங்கள் விளைந்துள்ளன. இந்த அரண்மனையில் உலக புகழ் பெற்ற மொசார்ட் (Mozart ) தன்னுடைய சிம்பொனியை இசைத்ததாக சொல்லப்படுகிறது. நமது இசைஞானி இளையராஜாவும் இந்த இடத்தில் அமர்ந்து தியானம் செய்தாராம். அரண்மனையின் சிற்ப வேலைப்பாடுகள், என்னை பிரமிக்க வைத்தது. இரு தலை கொண்ட மனிதன், தன் காதலியோடு நடனமாடுவது போல இருந்த சிலை மிக அற்புதம்.
இங்கு ஒரு முக்கிய தகவல். வியன்னா சிட்டி டிக்கெட் வாங்கியவர்கள் தனி தனியாக டிக்கெட் வாங்க தேவை இல்லை. வியன்னா ஐரோப்பிய நாடுகளில் மிகவும் குறைந்த செலவில் நிறைந்த மகிழ்ச்சியை தரும் நகரம். இங்கு, வீடு வாடகையில் கட்டுப்பாடு விதிக்கப்பட்டு உள்ளது. ஆதலால், செலவு குறைவு. பொருட்களும் மலிவாக கிடைக்கிறது.
இந்த அரண்மனைப்பகுதி ஒரு சிறிய குன்றின் அருகே அமைந்துள்ளது. குன்றின் மேலேறி பார்த்தால், வியன்னா நகரை முழுவதுமாக பார்க்கலாம். எனக்கு, இரண்டு மணி நேரம் போனது தெரியவில்லை. அரண்மனைக்கு பிறகு நாங்கள் சென்ற இடம், அறிவியல் மியூசியம். ஆஸ்திரியா, 22 நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானிகளை உருவாகியுள்ளது என்று போன பதிவில் தெரிவித்திருந்தேன். அதற்கு விதையூன்றிய இடம் இந்த அறிவியல் பொருட்காட்சியகமாகவே நான் கருதுகிறேன். இரண்டாம் உலக போருக்கு பிறகு, ஆஸ்திரியா, அறிவியலில் பெரும் வளர்ச்சியை கண்டுள்ளதற்கு இதுவே சாட்சி. உள்ளே நுழையும்போது, வேகமாக வட்டமிடும் ஒரு லேசர் ஒளிக்கற்றையில், சில காட்சிகளை காட்டி நம்மை பிரமிக்க வைக்கிறது. உண்மையில், ஒற்றை கம்பி ஒன்று மிக வேகமாக சுழல்கிறது. ஆனால், அதிலிருந்து வெளிப்படும் காட்சி, ஆஹா... எத்தனை அழகு. தொழில் புரட்சி காலத்தில், முதலில் உருவாக்கிய இரும்பு உருக்கும் இயந்திரம் தொடங்கி, முதல் நீராவி ரயில், மின்சார மோட்டார் இயந்திரம், கனரக இயந்திரங்கள், என்று பட்டியல் நீண்டு, இன்றைய அண்டவெளி சேட்டிலைட் வரை அனைத்துவகை கண்டுபிடிப்புகளின் மாதிரிகள் வைக்கப்பட்டுள்ளன. நான்கு தளங்களில், ஏராளமான விஞ்ஞான பொருட்கள், அவற்றின் விளக்க வரிகள், அதனால் ஏற்படும் நன்மை, தீமைகள், எதிர்கால விளைவுகள் எல்லாம் காட்சியாக வைக்க பட்டுள்ளன. போக்குவரத்து சாதனங்களின் வரிசையில், நமது 'டாடா நானோ' காரும் இடம் பெற்றிருந்தது. இந்த விஞ்ஞான வளர்ச்சியினால், ஏற்பட்ட தீமைகள் பற்றி விரிவான விளக்க படங்களும், அதற்கு எவ்வாறு தீர்வு காண்பது என்ற ஆலோசனைகளும் இதில் அடங்கும். தேர்வுக்கான முயற்சியில், ஆஸ்திரியாவின் பங்குகள் என்னென்ன? என்பதும் மாதிரியாக வைக்கப்பட்டுள்ளது. நிறைய சிறுவர்களையும், இளைஞர்களையும், இந்த காட்சியகம் ஈர்க்கும் என்பதில், எனக்கு சிறிதும் சந்தேகமில்லை. வியென்னாவின் புகைப்படங்கள் நிறைய நான் பதிவிட இருப்பதால், என்னுடைய இன்றைய உரையை முடித்து கொள்கிறேன்.
தொடரும்.
Comments
Post a Comment