தேயும் தேசிய விலங்கு (கெளரவம்)
எனக்கு பத்து வயது இருக்கும். என்னையும், என் சகோதரியையும் கையைப்பிடித்து அழைத்துக்கொண்டு திருச்சி ஜங்க்ஷன் மைதானத்தில் நிகழ்ந்து கொண்டிருந்த "ஜெமினி" சர்க்கசுக்கு சென்றார் என் அப்பா. அந்த பசுமையான நினைவு இன்று T.V செய்தி ஒன்றை கேட்டவுடன் வந்தது. அதற்கும் டி.வீ செய்திக்கும் என்ன சம்பந்தம்? இருக்கிறது. அந்த சர்க்கஸில் எனக்கு ரொம்ப பிடித்த விஷயம் என்ன தெரியுமா? மிகச்சிறிய முக்காலியில் தன் நான்கு கால்களையும் நெருக்கி வைத்துக்கொண்டு நின்றுகொண்டிருந்த கண்களை கவரும் அந்த ஆறு புலிகள். நடுவில் நின்றிருந்த அந்த ஆசாமி கையிலிருந்த சாட்டையை சுழற்றியதும் தாவிப்பாய்ந்து நெருப்பு வலையத்திருக்குள் நுழைந்தன அந்த புலிகள். கம்பீரமான கர்ஜனையுடன் மீண்டும் முக்காலியில் நின்று கொண்டன. இன்னமும் மெய்சிலிர்க்கும் காட்சி. பிறகு பதினைந்து வருடங்களுக்கு பிறகு நண்பர்களுடன் மைசூர் மிருகக்காட்சி சாலையில் கூண்டுக்குள் அங்கும், இங்கும் ஆவேசமாக அலைந்து கொண்டிருந்த பெரிய வெள்ளைப் புலியைப் பார்க்கும் போதும் சிலிர்த்தது.
புலி என்றாலே கம்பீரம் கலந்த அழகு. அதனால்தான் இந்தியாவின் தேசிய விலங்காக புலியை வைத்துள்ளார்கள். ஆமாம், அதற்கென்ன இப்போது? என்று கேட்கிறீர்களா?
இருக்கிறது. சமீபத்தில் நான் செய்தித்தாளில் படித்தது. இந்தியாவில்தான் உலகிலுள்ள புலிகளின் தொகையில் பாதிக்கும் மேல் உள்ளது- கேட்கும்போது ரொம்ப சந்தோஷமாக உள்ளதல்லவா? கொஞ்சம் பொறுங்கள். இன்று படித்த விஷயத்தையும் சொல்லி விடுகிறேன். இந்தியாவில் உள்ள புலிகளின் மொத்த எண்ணிக்கை................1411 (லட்சங்களும் இல்லை, ஆயிரங்களும் இல்லை) வெறும் 1411. அதிர்ச்சியாக இருக்கிறதா? இந்த நிலை தொடர்ந்தால் புலியை மீண்டும் 'குலேபகாவலி' திரைப்படத்தில் தான் பார்க்க முடியும். இதற்கு என்ன காரணம். நம்ம புது பங்காளிதான் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். ஆமாம் சீனாவில் புலிகளும், சிறுத்தைகளும் மருந்து தயாரிப்பதற்காக இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்கிறார்களாம். ஒரு புலியின் விலை என்ன தெரியுமா? வெறும் ஐம்பதாயிரம் டாலர்கள்தான். சில ஆயிரம் ரூபாய்களுக்கு தன் சிறு நீரகத்தை விற்க துணிந்தவர்கள் புலியைப்பற்றியா கவலைப்படுவார்கள்? சுட்டு தள்ளி விடுகிறார்கள். சமீபத்திய சென்சஸ் படி 'பண்ணா' புலிகள் சரணாயத்தில் ஒரு புலி கூட மிச்சமில்லை என்று கூறுகிறார்கள். பாவிகள் என்று சபித்துக்கொண்டிருந்தால் போதுமா? நம் தேசத்தின் கவ்ரவமாக கருதப்படும் புலியை காப்பாற்ற வேண்டாமா? விழித்துக்கொள்ளுவோம் வாருங்கள்.
Comments
Post a Comment