கடவூர் டூ காத்மாண்டு! (பாகம்-1 )

 திடீரென்று கடவூர் எங்கிருந்து வந்தது என்று குழம்புகிறீர்களா? அதாங்க, திருக்கடையூரின் இயற்பெயர் 'திருக்கடவூர்' அதை சுருக்கி கடவூர்னு மாத்தி சொன்னா 'எதுகை,மோனையோட' எடுப்பா இருக்குமேன்னுதாங்க. கதை-கட்டுரைல இதெல்லாம் சாதாரணமுங்க. 

அறுபதாம் கல்யாணத்தில், கல்யாணம் குறித்து சில-பல தகவல்களை சொன்னேன் அல்லவா! இப்போது காத்மாண்டு பயணத்தை ஒத்து சில-பல தகவல்களை சுவாரசியமாக சொல்லலாமென்று இருக்கிறேன். 

"சும்மா, வளத்தாம சொல்லுங்க, அது சுவாரசியமா இருக்கா, இல்லையாங்குறதை நாங்க பாத்துக்கறோம்"னு நீங்க முணுமுணுப்பது கேட்கிறது. அப்போ நேரா விஷயத்துக்கு போயிடலாம்.

காத்மாண்டு பயணத்தின் சஸ்பென்ஸ் பற்றி முந்தைய பகுதியில் சொன்னது கொஞ்சம் உண்மைதான், என்றாலும் எனக்கு மறைத்துப்பேச எல்லாம் தெரியாது அல்லவா! அதனால் முழு உண்மையை சொல்லி விடுகிறேன். திருக்கடையூரில்தான் காத்மாண்டு பயணம் பற்றி எனக்கு சொல்லப்பட்டது என்றது கொஞ்சம் உடான்ஸ் தான். ஆனால், எனக்கு தாமதமாகவே தெரிவிக்கப்பட்டது மட்டும் உண்மை, உண்மை, உண்மைத்தவிர வேறொன்றும் இல்லை. 

காத்மாண்டு, நேபாள தேசத்தின் தலை நகரம். இமாலய மலைகளின் உச்சந்தலையில் உட்கார்ந்து கொண்டிருக்கும் சில தேசங்களில், முக்கியமானது நேபாளம் என்றால் அது பொய்யில்லை. தலையில் உட்கார்ந்திருப்பதாலோ, என்னவோ பல ஆண்டுகளாக அங்கு மன்னராட்சியே இருந்து வந்திருக்கிறது. 'இப்போது இல்லை' என்பது கொஞ்சம் வருத்தத்தை அளித்தாலும், ஜனநாயக ஆட்சி நடைபெறுகிறது. இந்தியாவின் பல பிரதேசங்களுக்கும், சில ஐரோப்பிய தேசங்களுக்கும் நான் சென்றிருந்தால்கூட, என்னவோ இந்த நேபாளத்துக்கு போகவேண்டுமென்று தோன்றியதில்லை. இப்போது தோன்றிய காரணம் கூட சற்றே வித்தியாசமானதுதான். ஜூலை ஏழாம் தேதி, அறுபதாம் கல்யாணம் முடிந்து உடனே எங்காவது செல்லவேண்டும் என்று தான் தீர்மானித்திருந்தோம். என் மகனுக்கு பனிமலையை அருகே காணவேண்டும் என்று ஒரு ஆசை. (அவர் பனிப்பிரதேசத்தில் தான் வசிக்கிறார் என்பது வேறு கதை) அப்படியானால், முதலில் நினைவுக்கு வருபவை காஷ்மீர், குளு-மணாலி, சிக்கிம், டார்ஜீலிங், மேகாலயா, நாகலாந்து - "என்ன நடக்குது இங்க, திடீர்னு லாட்டரி சீட்டு விக்க ஆரம்பிச்சுட்டார்" னு நினைக்கிறீங்க, புரியுது. இவை எல்லாம் இமயமலை தொடரில் உள்ள சில முக்கியமான சுற்றுலா தலங்களல்லவா! சோதனை என்னவென்றால், ஜூலை மாதத்தில் இந்த பிரதேசமெல்லாம் மழை வெளுத்து வாங்கும். சிவனேனு ரூமுக்குள்ளேயே அடைந்து கிடைக்க வேண்டியதுதான். அப்போ, வேற எங்க போகலாம்?

"ம்ம்ம், எனக்கு ஒரு ஐடியா..." என்று குதித்து கொண்டு சொன்னேன்.

"சொல்லு மொதல்ல" என் மகள்.

"மூணாறு...."

"ஹ்ம்ம், ஆளைப்பாறு ஏன் தூத்துக்குடி பீச் னு சொல்ல வேண்டியது தானே" என் மகன்.

"கிளுக்" இந்த சிரிப்பு என் மருமகன். கலாய்க்கிறதுனு வந்துட்டா எல்லாத்துக்கும் ஒற்றுமையை பாருங்க.

"சரி, அப்டினா வேற தேசம்?" நான்.

"ஸ்ரீலங்காவா, நோவ்....." அனைவரும்.

"இல்ல,.... நேபாளம், ஓகே?"

"சூப்பர்....எப்படிப்பா?" ஒரு வழியாக ஒப்புதல் பெறப்பட்டு நேபாளம் என்று தீர்மானம் செய்யப்பட்டது.

"நெக்ஸ்ட் கொஸ்டின், எத்தனை நாள்?"

"ஒரு வாரம், சரியா?" மகன்.

"போடா இவனே, நான் 14 ம் தேதி ரிட்டர்ன் பிளைட் புக் பண்ணிருக்கேன். அஞ்சு நாள்தான் பாசிபிள்" மகள்.

வேறு வழியின்றி 'ஐந்து பகல், நான்கு இரவு' நேபாள் பேக்கேஜ் என்று முடிவாகியது. எனக்கு ஒரு சந்தேகம், அது என்ன? 'ஐந்து பகல், நான்கு இரவு' என்று போடுகிறார்கள். அனைவரும் இரவு தூங்கப்போகிறார்கள், பிறகு எதற்கு இந்த வேலை? தெரிந்தவர்கள் 'கமெண்ட்' பகுதியில் போடுங்கள். 

அடுத்த கட்டம், எந்த டூரிஸ்ட் ஆப்பரேட்டர்? பல ஆண்டுகளாக, SOTC , தாமஸ் குக், போன்ற முன்னணி நிறுவனங்கள் இந்த துறையில் செயல்பட்டு வந்துள்ளன. இப்போது, MMT (மேக் மை ட்ரிப்) போன்ற நிறுவனங்களும் இருக்கின்றன. உடனே ஒரு கம்பரேட்டிவ் டேபிள் ஒன்று தயார் செய்தாகிவிட்டது. முடிவில், 'தாமஸ் குக்' என்று முடிவு செய்து பணத்தை கட்டினோம். அடுத்த பகுதியில், எவ்வளவு செலவு ஆகும், விசா விபரங்கள் ஆகியவற்றை பார்க்கலாம்.


(தொடரும்)

Comments

Post a Comment

Popular posts from this blog

Travelogue - Leh, Ladakh