பயாஸ்கோப் பட்டபாடு......
என் முழுநேரத்தொழில் எஞ்சினீரிங். அவ்வப்போது கலைத்தாகத்தை தீர்த்துக்கொள்ள நாடகம், ஓவியம் என்று ஒப்பேத்திக்கொண்டிருந்த எனக்கு வந்த சோதனையா? வாய்ப்பா? தெரியாது. எங்கள் நிறுவனத்தில் "பாதுகாப்பு வாரவிழா" வருடா வருடம் கொண்டாடுவார்கள். அவ்விழாவில் பாதுகாப்பை உணர்த்தும் வகையில் பல உபகரணங்களை காட்சிப்பொருளாக வைத்து கண்காட்சிக்கு வருபவர்களுக்கு விளக்குவார்கள். இந்த முறை என்னை ஒரு குறும்படம் எடுத்து திரையிடுமாறு கேட்டுக்கொண்டதை ஏற்றுக்கொண்டு திரைக்களத்தில் குதித்தேன். (இவ்வளவு நாள் 'பிளாகில்' உளறாததற்கு இதுதான் காரணம்) சாதாரணமாக பாதுகாப்பு பற்றிய திரைப்படங்கள் 'டாக்குமெண்டரியாக' இருந்திருந்ததால் நான் அவ்வாறு எடுக்கக்கூடாது என்று தீர்மானித்தேன். ஆகவே தனித்தனியாக ஐந்து கதைகளை தயாரித்து அதை படமாக்குவது என்று முடிவெடுத்தேன். முதலில் ஒளிப்பதிவாளர் தேடல். உடனடியாக ஒ. கே சொன்னார், என் சக பொறியாளர் சுரேஷ் குமார். பின்பு கதை, திரைக்கதை, வசனம், டைரக்ஷன் என்று என் கடமைகள் நீண்டு கொண்டு போனது. புது முயற்சியானதால் எனக்கு மேலும்,மேலும் உற்சாகமே இருந்தது. சக பணியாளர்களையும், தொழிலாளர்களையும் கொண்டு படமெடுக்க தொடங்கினேன். முதலில் சில காட்சிகளை, நாடக பாணியில் தொடர்ச்சியாக எடுத்து கொண்டே போனோம். பிறகு சிறிது அனுபவம் கிடைத்தவுடன் காட்சிகளை, தனித்தனியாக அமைத்து எடுத்ததும் அதில் உள்ள நுட்பங்களும், சிரமங்களும் தெரிய ஆரம்பித்தன. பின்பு "எடிட்டிங்" வேண்டியவற்றை ஒட்டி, வேண்டாதவற்றை வெட்டி ஒரு மணி நேரத்தை, பத்து நிமிடமாக சுருக்கும் வேலை. சுமார் ஆறு மணிநேர உழைப்பில், ஐந்து நிமிட படம் உதயமானது. பின்பு படத்தை 'ரீப்ளே' செய்து பார்க்கும் போதுதான் வசனங்கள் தெளிவாக இல்லாதது தெரிந்தது. இப்போது எங்கள் பணி, வீடியோவிலிருந்து, ஆடியோ பக்கம் நகர்ந்தது. "ரீ-ரெக்கார்டிங்". இதற்கான உதவிகளை தானாக முன் வந்து தந்தவர், திரு.கனகராஜன். உடனடியாக இருக்கும் ஒலி உபகரணங்களை கொண்டு "ரெக்கார்டிங் தியேட்டரை' நிறுவினோம். காதில் 'மைக்' செட்டை மாட்டிக்கொண்டு திரையில் படத்தை பார்த்துக்கொண்டு 'டப்பிங்' கொடுக்க ஆரம்பித்தோம். 'டப்பிங்' கொடுப்பதில் உள்ள சிரமங்கள் அப்போது நன்றாக விளங்கியது. மூன்று மணி நேர டப்பிங்கில் ஐந்து நிமிட படம் தயாரானது. இவ்வாறாக மொத்தம் ஐந்து குறும்படங்கள் தயாரித்து எங்கள் மேலதிகாரிக்கு திரையிட்டு காண்பித்தோம். எங்களை புகழ்ந்து பாராட்டிய அவர் ஒரு சில தவறுகளையும் சுட்டி காட்டினார். அந்த தவறுகளை சரி செய்ய மீண்டும், ஒளிப்பதிவு பின்பு ஒலிப்பதிவு. ஆக மொத்தத்தில் இருபத்தைந்து நிமிட படம் இருபது நாட்கள் எடுத்துக்கொண்டது. "பாதுகாப்பு பட்டினம்" வெற்றிகரமாக திரையிடப்பட்டது. "அய்யா சாமி, ஆளை விடு" என்று சோர்ந்து போனாலும், ஒரு திரைப்படம் எடுப்பதில் உள்ள (எனக்கு தெரிந்த ) சில சிரமங்கள் எனக்கு ஒரு பாடமாக அமைந்தது. மூன்று மணி நேர படம் எடுக்க தயாரிப்பாளர்களும், டேக்நீஷியன்களும் என்ன பாடு படுவார்கள்? என்று நினைக்கும்போது ஒரு பக்கம் மலைப்பாகவும், அந்தப்படத்தை "திருட்டு வீ.சீ.டீயில்" வெறும் நாற்பது ரூபாய்க்கு வாங்கி பார்ப்பவர்களை நினைத்து கடுப்பாகவும் இருந்தது.
Comments
Post a Comment