தை பொங்கல்
கதிரவனின் சுழற்சியை கொண்டு வகுக்கப்பட்ட தினத்தை வைத்து கொண்டாடப்படும் ஒரே பண்டிகை "பொங்கல்"தான் என்று சொல்லலாம். உத்ராயனத்தின் முதல் தினமாக "பொங்கல்கொண்டாடப்படுகிறது. உத்தராயணம், கதிரவன் வடக்கு நோக்கி பயணிக்கும் நாட்கள். நமது கலாச்சாரத்தில் உத்தராயணம் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. "மகர சங்கராந்தி' என்று அழைக்கப்படும் பொங்கல் தினம், சூரியன் மகர ராசியில் நுழையும் நாள். அனைத்து இந்து ஆலயங்களிலும் மணியோசையுடன் சங்கு முழக்கத்துடன் இந்த நாள் கொண்டாடப்படுகிறது. புது மண் சட்டியில் பொங்கல் பொங்க, "இந்த வருடம் இல்லை பஞ்சம்" என்பதை மகிழ்ச்சி பொங்க முழங்குகிறார்கள். பொங்கலுடன் சேர்ந்து, இனிப்புகளும், செங்கரும்பும் சேர்ந்து அறுவடைதிருநாளை அமோகமாக வரவேற்று, வரும் விருந்தினர்களுக்கு உணவு படைத்து மகிழ்வதே இத்திருநாளின் சிறப்பாக அமைகிறது. விவசாயிகள் சூரியக்கடவுளை நன்றியுடன் வணங்கி, தமக்கு உதவிய காளைகளுக்கு கொம்பில் வர்ணம் பூசி, அழகு படுத்தி பூஜை செய்கிறார்கள். பொங்கலுக்கு முந்திய தினமான "போகி" அன்று 'பழையன கழிதலும், புதியன புகுதலும்' என்பதற்கு இலக்கணமாக பழைய பொருள்களை தீயிலிட்டு, புதிய பொருட்களை வாங்கி பொருளாதாரம் மேம்பட செய்கிறார்கள். "பொங்கல்" பொங்கும்போது குடும்பமே கூடி, "பொங்கலோ பொங்கல்" என்று கூவி மகிழ்கிறார்கள். கிழக்கே பொங்கும் பொங்கல் மிகவும் சிறந்ததாக கருதப்படுகிறது. "வெண் பொங்கல், சர்க்கரைப்பொங்கல்" என்று இரு வகை பொங்கல் படைத்து வணங்குகிறார்கள். பொங்கலுக்கு மறு தினம் "மாட்டு பொங்கல்" தினமாக கொண்டாடப்படுகிறது. "ஜல்லிக்கட்டு" தினமான அன்று இளம் வாலிபர்கள் சீறி வரும் காளைகளை அடக்கி தம் வீரத்தை வெளிப்படுத்துகிறார்கள். "பொங்கல் பண்டிகையின் கடைசி தினம் "காணும் பொங்கல்" இந்த நாளன்று, தமது உறவினரையும், நண்பர்களையும் கண்டு மகிழ்கிறார்கள்.
INIYA TAIPONGAL VAALTHUGAL!
ReplyDelete