Avatar - Man's creation Vs God's creation
ஆஸ்கார் டைரக்டர் ஜேம்ஸ் கேமரூனின் மற்றுமொரு அசத்தல் படம் அவதார். ஒரே மாதிரியான கண்ணோட்டங்கள் கொண்ட 'ஸ்பீஷீஸ்', 'ஏலியன்ஸ்', 'இண்டிபெண்டன்ஸ் டே' போன்ற படங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்ட கோணத்தில் சிந்தித்து இருக்கிறார், ஜேம்ஸ் கேமரூன். ஹாலிவுட் படம் என்றாலே பிரம்மாண்டத்துக்கு குறைவு இருக்காது. அந்த வகையில் 'அவதார்' மிக பிரம்மாண்டமாக தயாரிக்கப்பட்டுள்ளது. கதை இதுதான்.
பூமியிலிருந்து விஞ்ஞானிகள், ஆராய்ச்சியாளர்கள், போர்வீரர்கள் என ஒரு கும்பல் மாற்று கிரகத்துக்கு பயணித்து அங்கே ஆராய்ச்சிகளை மேற் கொள்கிறது. அங்குள்ள உயிரினங்களையும், மனிதர்களையும் சாமர்த்தியமாக விரட்டி அடித்து விட்டு அங்கே உள்ள வளங்களை அபகரிக்க திட்டமிடுகிறது. பண்டோரா எனப்படுகிற பிரதேசத்தில் உள்ள மனிதர்களின் திறனையும், மற்ற உயிரினங்களினுடைய பலத்தையும் கண்டு வியந்துபோன கும்பல், அவர்களை சாமர்த்தியமாக எதிர்கொள்ள, அவர்களுடைய டீ.என்.ஏ. வை திருடி அதில் பூலோகவாசியின் டீ.என்.ஏ வையும் சேர்த்து அந்த ஜீவன்களை பண்டோரவுக்குள் அனுப்பி வைக்கிறார்கள். முழுக்க, முழுக்க விஞ்ஞான ரீதியாக அவர்களை தயாரித்து தேவைப்படும் போதெல்லாம் அவர்களை மீண்டும் நம்மூர் வாசியாக மாற்றி விடுகிறார்கள். இந்த மனித-ஏலியன்கள் பண்டோரவாசிகளுடன் கலந்து அவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி அவர்களை விரட்ட வேண்டும் என்று ஒரு சிலர் விரும்ப, அதெல்லாம் முடியாது அவர்களை அடித்து விரட்டுவோம் என்று பெரும்பாலோர் சூளுரைக்கிறார்கள்.
ஆனால் அப்பாவியாக வளர்ந்த பண்டோராவாசிகள் உருவத்திலும் சரி, பராக்கிரமம்களிலும் சரி, மனிதர்களைவிட பல மடங்கு உயர்ந்து விளங்குகிறார்கள். பண்டோரவாசிப்பெண் ஒருத்தி, மனித-எலியனிடம் காதல் கொண்டு அவனுக்கு பண்டோராவின் வித்தைகள் அனைத்தையும் கற்று தருகிறாள். இதை பயன்படுத்திக்கொண்டு, பண்டோராவாசிகளை விரட்டிவிடலாம் என்று மனக்கோட்டை காட்டுகிறார் ராணுவ அதிகாரி. மனித-ஏலியனும் அந்தப் பெண்ணிடமும், மற்ற உயிரினங்களிடமும், நிஜமாகவே அன்பைப்பொழிய கடுப்பாகிறார் ராணுவ அதிகாரி. போர் தொடுக்க முடிவு எடுத்து பண்டோராவின் மிக பிரமாண்டமான மரத்தை சாய்த்து விடுகிறார்கள் ராணுவ வீரர்கள். இதனால் கோபம் கொண்ட மனித-ஏலியன் தானே முன்னின்று பண்டோராவின் வீரர்களுக்கு தலைமை தாங்கி பண்டோராவை காப்பாற்றுகிறார்.
பண்டோரா- ஒரு விசித்திர உலகம். மனிதர்களும், தாவரங்களும், மற்ற உயிரினங்களும் ஒன்றை-ஒன்று தொடர்பு கொண்டு விளங்குகின்றன. கொடிய விலங்குகூட சத்தியத்துக்கு கட்டுப்பட்டு விளங்குகிறது. மனிதர்கள் அவைகள் மீது அன்புகொண்டுள்ளார்கள். அவர்கள் அனைவரும் புனித மரம் ஒன்றை 'ஏவா' என்ற கடவுளாக வணங்குகிறார்கள். மிதக்கும் மலைகள், வானத்தையே மறைக்கும் மரங்கள், இரவில் ஒளியூட்டும் தாவரங்கள், உணர்வோடு செயல் படும் பூச்சி இனங்கள் என்று நம்மையெல்லாம் ஏங்க வைத்து இருக்கிறார் ஜேம்ஸ் கேமரூன். பேராசை கொண்ட விஞ்ஞானத்தால் உணர்வோடு விளங்கும் உயிர்களை வெல்ல முடியாது என்ற கருத்தை மிக அழகாக சொல்லியிருக்கிறார். அங்கங்கே சற்று லாஜிக் உதைக்கும். அந்தரத்தில் மிதக்கும் மலைகளுக்கு நடுவே, அருவி கீழ்நோக்கி பாய்கிறது.
ஜே.கேயின் சிந்தனையின்படி எதிர்காலம் என்பது இறந்த காலத்திலேயே உருவானது என்பதை, ஏலியன் கிரகத்திலும், ஏலியன் குதிரைப்படை,ஏலியன் நாய், ஏலியன் குரங்கு என்று பழைய விஷயங்களே கற்பனையில் தோன்றுகிறது.
குழந்தைகளோடு பார்க்க வேண்டிய, கருத்துள்ள நல்ல படம்.
Comments
Post a Comment